கட்டுரைகள்

மைக்ரோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க நியூசிலாந்தில் 150 000 பசுக்களைக் கொல்ல அரசு முடிவு செய்துள்ளது.

உலகில் மிக அதிகளவில் பால் மற்றும் பால் மா ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் நாடு நியூசிலாந்து ஆகும். எனவே இந்நாட்டில் பண்ணைத் தொழிலானது அந்நாட்டுப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஒரு தொழில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் அமெரிக்காவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த ஜூலை மாதம் கண்டறியப் பட்ட இந்த மைக்ரோபிளாஸ்மா போவிஸ் வைரஸ் தற்போது நியூசிலாந்து பசுக்களுக்குத் தாக்கியுள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த பக்டீரியா பாதிப்பினால் மனிதர்களின் உணவுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்ற போதும் நியூசிலாந்தின் பால் வளம் மற்றும் கால் நடை உற்பத்தியை இது பாதிக்கக் கூடியது ஆகும். இதனால் பக்டீரியா தொற்று கண்டறியப் பட்ட பண்ணைகளில் உள்ள அனைத்துப் பசுக்களையும் அழிக்க நியூசிலாந்து அரசு தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ஊடகங்களுக்கு அளித்த செவ்வியில் எமது நாட்டின் பொருளாதாரத்தில் பால் வளம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்ற போதும் உடனடியாக பக்டீரியா தொற்று உடைய பசுக்களை அழிக்கா விட்டால் அது மொத்த கால் நடை வளத்தையும் அழித்து விடக் கூடியது ஆகும் இதனால் நாட்டில் உள்ள 20 000 பால் பண்ணைகள் மற்றும் மாட்டிறைச்சி நிலையங்கள் பாதிக்கப் படும் என்றுள்ளார்.

சுமார் 66 இலட்சத்துக்கும் அதிகமான பசுக்களைக் கொண்டுள்ள நியூசிலாந்தில் சுமார் 1.5 இலட்சம் மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த பக்டீரியா தொற்று காரணமாக பசுக்கள் ஓரிரு நாட்களில் உயிரிழக்கின்றன. மேலும் இந்த நோய் ஏனைய பசுக்களுக்கும் வேகமாகப் பரவக் கூடியது என்பதால் தான் உடனடியாக இந்த 1.5 இலட்சம் பசுக்களும் அழிக்கப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.