கட்டுரைகள்

எலொன் முஸ்க் இனது ஸ்பேஸ் எக்ஸ் என்ற விமான நிறுவனம் சந்திரனை சுற்றி வரும் விதத்தில் விண்ஓடம் மூலம் செல்லக் கூடிய முதல் சுற்றுலாப் பயணியின் பெயரை வெளியிட்டுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த கோடீஸ்வரரும் ஆன்லைன் மூலமான ஃபேஷன் அதிபருமான 42 வயதாகும் யுசாக்கு மயேசாவா என்பவரே இந்நபர் ஆவார். மேலும் தான் சந்திரனுக்குச் செல்லத் தீர்மானித்துள்ளதாக அவரும் அறிவித்துள்ளார்.

இந்த சுற்றுலாப் பயணியின் பயணம் 2023 இல் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கு முன்பு இறுதியாக நாசாவின் சந்திரனுக்கான விண் ஓடம் 1972 இல் தான் சென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 2023 பயணத்துக்கான ஸ்பேஸ் எக்ஸின் ராக்கெட்டு கட்டுமானம் இன்னமும் நிறைவு பெறவில்லை. எனினும் செவ்வாய்க்கிழமை கலிபோர்னியாவின் ஹாவ்த்ரோன் இலுள்ள ஸ்பேஸ் எக்ஸின் தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் 2023 இற்குள் இந்த ராக்கெட்டின் கட்டுமானத்தைப் பூர்த்தி செய்து விட முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் மேலும் தெரிவிக்கையில் சந்திரனைச் சுற்றி வரவுள்ள BFR என்ற பெரிய ஃபேல்கன் ராக்கெட்டு பொறிமுறை 2016 இல் விருத்தி செய்யப் பட்டதாகவும் இது விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்ற தினசரி மக்களின் கனவை சாத்தியமாக்குவதற்கான முக்கியமான படி என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஜப்பானிய செல்வந்தர் தன்னுடன் இன்னமும் உலகம் முழுவதுமுள்ள 6 முதல் 8 வரையிலான ஆர்வலர்கள் இணைந்து கொள்ளலாம் என அழைப்பும் விடுத்துள்ளார்.