கட்டுரைகள்

மின்சாரத்தை சேமிக்கவும், தெருக்களுக்கு வெளிச்சமூட்டவும் என செயற்கை நிலவை விண்ணுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டு வருகின்றது.

அதாவது ஒரு ஒளிரும் செயற்கைக் கோளைத் தயாரிப்பதில் அது தீவிரம் காட்டி வருகின்றது. ஏற்கனவே இதற்காக சிச்சுவான் மாகாணத்திலுள்ள செங்டு என்ற நகரில் இந்த ஒளிரும் செயற்கைக் கோளைத் தயாரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளது சீனா.

குறித்த செயற்கைக் கோள் மூலம் 10 தொடக்கம் 80 வரையிலான சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு வெளிச்சம் கிடைக்கும் என்றும் இது முழு நிலவின் வெளிச்சத்தை விட 8 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த செயற்கைக் கோள் 2020 இல் சிச்சுவான் மாகாணத்திலுள்ள விண்வெளி ஏவு தளத்தில் இருந்து விண்ணுக்குச் செலுத்தப் படவுள்ளது. இந்த செயற்திட்டம் வெற்றியானால் இது போன்று மேலும் 2 செயற்கைக் கோள்களை 2022 ஆமாண்டு விண்னில் செலுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது. அதாவது இன்னும் 4 வருடங்களுக்குள் 3 செயற்கை நிலவுகள் சீன வானில் இருந்து அதன் முக்கிய சில நகரங்களை இரவு ஒளியூட்டவுள்ளன.

கண்ணாடி போன்று ஒளியைத் தெறிக்கச் செய்யும் பதார்த்தத்தால் தயாரிக்கப் படவுள்ள இந்த செயற்கை நிலவுகள் பூமிக்கு மேலே 500 Km உயரத்தில் இருந்து பூமியைச் சுற்றி வரவுள்ளன. முக்கியமாக சீனாவில் குளிர் காலத்தில் அதன் பிரதான நகரங்கள் செலவழிக்கும் மின்சாரத்தை மிச்சம் பிடிக்கவே இந்த செயற்கை நிலவுத் திட்டம் என்று கூறப்படுகின்றது.

செங்குடுவில் 50 சதுர கிலோமிட்டர் பரப்புக்கு வெளிச்சமூட்டும் ஒரு செயற்கை நிலவினால் ஒவ்வொரு வருடமும் சுமார் 1.2 பில்லியன் யுவான் பெறுமதியான மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இது தவிர நிலநடுக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்களால் மின்சாரம் துண்டிக்கப் படும் பகுதிகளைக் கூட இந்த செயற்கை நிலவுகள் மூலம் ஒளியூட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.