கட்டுரைகள்

ESA எனப்படும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகம் மற்றும் JAXA எனப்படும் ஜப்பானின் விண்வெளி ஆய்வு ஏஜன்ஸி ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்த புதன் கிரகத்தை ஆய்வு செய்யக் கூடிய பெபி கொலொம்போ (BepiColombo) என்ற விண்கலம் சனிக்கிழமை பிரெஞ்சு கயானா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப் பட்டுள்ளது.

புதன் கிரகத்துக்கு அனுப்பப் படவுள்ள 3 ஆவது செயற்கைக் கோளான இது 7 ஆண்டுகள் பயணித்து 2025 ஆமாண்டு புதனின் சுற்று வட்டப் பாதையை அடையவுள்ளது. இந்த பெபி கொலொம்போ ஆனது MPO மற்றும் MMO ஆகிய இரு செய்மதிகளை புதனுக்குக் கொண்டு செல்கின்றது. இந்த விண்கலத்தின் செயற் திட்டமானது புதனின் மின்காந்தப் புலமான magnetosphere மற்றும் அதன் உட்கட்டமைப்பு, மேற்பரப்பு என்பவை குறித்து முக்கியமாக ஆய்வு செய்யவுள்ளது.

பெபி கொலொம்போ பூமியைச் சுற்றி ஒரு ஃபிளை பை மற்றும் வெள்ளியைச் சுற்றி இரு ஃபிளை பை மற்றும் புதனைச் சுற்றி 6 ஃபிளை பை ஆகியவற்றைக் கடந்தே 7 வருடங்களில் புதனின் சுற்று வட்டப் பாதைக்குள் செல்கின்றது. புதனின் ஆய்வு தொடர்பான இந்தச் செயற்திட்டம் 2009 ஆமாண்டே தீர்மானிக்கப் பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ள வெப்பம் மிகுந்த கிரகம் புதனாகும். ஆனால் பூமிக்கு அருகே உள்ள கிரகங்களில் மனிதனால் மிகவும் குறைவாகவே இந்தக் கிரகம் இதுவரை ஆய்வு செய்யப் பட்டுள்ளது. 1973 இல் முதன் முறையாக நாசாவின் மாரினேர் 10 விண்கலம் புதனை முதன் முறையாகவும் பின்பு 2011 முதல் 2015 வரையிலான காலப் பகுதியில் நாசாவின் மெசேஞ்சர் விண்கலம் 2 ஆவது முறையாகவும் புதனை ஆய்வு செய்யச் செலுத்தப் பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.