கட்டுரைகள்

பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான SUPARCO விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஒப்பந்தம் ஒன்றில் சீனாவுடன் கைச்சாத்திட்டுள்ளது.

2022 இல் அநேகமாகத் தனது நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இத் தகவலை பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபவாட் சௌத்ரி வியாழக்கிழமை அறிவித்தார்.

இதே ஆண்டு இந்தியாவும் தனது முதல் விண்வெளி வீரரை விண்ணுக்குச் செலுத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நவம்பர் 3 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது முதல் பீஜிங் பயணத்தின் போது இந்த செயற்திட்டம் தொடர்பாக சீன உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கவுள்ளார். மறுபுறம் இந்திய சுதந்திர தினத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி 2022 இல் உலகின் 4 ஆவது நாடாக விண்ணுக்கு வீரர் ஒருவரை அனுப்பி இந்தியா பெருமை சேர்க்கும் என்று உரையாற்றி இருந்தார்.

2022 இல் இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ஏற்கனவே தனது பாதுகாப்பு தொடர்பில் சீன நட்புறவை வலுப்படுத்தி சீனாவிடம் அதிக இராணுவத் தளவாடங்களை நிகழ்காலத்தில் அதிகமாகக் கொள்வனவு செய்து வருகின்றது. இவ்வருடத் தொடக்கத்தில் சீன ராக்கெட்டு உதவியுடன் பாகிஸ்தான் இரு செய்மதிகளை விண்ணுக்குச் செலுத்தியிருந்தது.

உலகில் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் என்ற வீரரே விண்ணுக்குச் சென்ற முதல் விண்வெளி வீரர் ஆவார். மேலும் ரஷ்யா, அமெரிக்காவை அடுத்து 3 ஆவது நாடாக சீனா தனது விண்வெளி வீரரை 2003 இல் விண்ணுக்கு அனுப்பியிருந்தது.