கட்டுரைகள்

அண்மையில் வெளியிடப் பட்ட புதிய ஐ.நா அறிக்கை ஒன்றில் காலநிலை மாற்ற நிபுணர் ஒருவர் வெளியிட்ட தகவலில் தற்போது பூமியின் ஓசோன் மண்டலத்திலுள்ள ஓட்டை மெல்ல மெல்ல அடைக்கப் பட்டு வருவதாகவும் இன்னமும் 50 வருடங்களில் அது பூரணமாக அடைக்கப் பட்டு விடும் என்றும் கூறப் பட்டுள்ளது.

இது உலகின் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்துக் கவலைப் படும் அனைத்து மக்களுக்கும் இனிய செய்தியாக மாறியுள்ளது.

எமது பூமியைச் சுற்றி அமைந்துள்ள வளி மண்டலத்தின் மேற்பகுதியில் பாதுகாப்பு வலயம் போல் செயற்பட்டு வரும் ஓசோன் மண்டலம் தான் எமது பூமியில் உள்ள தாவர மற்றும் விலங்கு உயிரினங்களை சூரியனில் இருந்து வரும் மிகச் சக்தி வாய்ந்த புற ஊதாக் கதிர்களிடம் (ultra violet rays) இருந்து பாதுகாக்கின்றது. அதாவது இந்த ஓசோன் மண்டலத்தைத் தாண்டி புற ஊதாக் கதிர்களால் பூமியின் காற்று மண்டலத்துக்குள் ஊடுருவ முடியாது. ஆனால் நவீன யுகத்தின் முக்கிய பிரச்சினையாக இந்த ஓசோன் மண்டலம் பலவீனப் படும் விதத்தில் ஓட்டை ஏற்பட்டு வருகின்றது என்பது திகழ்ந்தது. இதனால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் மனித சரீரத்தில் புற்று நோய் மற்றும் ஏனைய சரும நோய்களையும் இதே போன்ற விளைவுகளை ஏனைய உயிரினங்களுக்கும் ஏற்படுத்தும் அபாயம் தோன்றியது.

பூமியின் சில தொழிற்சாலைகள் மற்றும் குறிப்பிட்ட குளிரூட்டி போன்ற மின் சாதனங்களில் இருந்து வெளியேறும் குளோரோ புளோரா கார்பன் என்ற CFC வாயுவே ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட முக்கிய காரணம் என கண்டறியப் பட்டதுடன் 1980 களில் விஞ்ஞானிகள் இந்த ஓசோன் மண்டலத்தில் மிகப் பெரிய ஓட்டை ஒன்றையும் கண்டு பிடித்திருந்தனர். இதையடுத்து CFC வாயுவை வெளியேற்றாத உபகரணங்களின் பாவனை ஊக்குவிக்கப் பட்டு ஓசோன் மண்டலத்தைப் பாதுகாக்கும் மீளாய்வுகள் மேற்கொள்ளப் படத் தொடங்கின.

1987 இல் மொண்ட்ரியல் நகரில் மேற்கொள்ளப் பட்ட ஒப்பந்தப் படி CFC வெளியிடும் சாதனங்களுக்குப் பூரண தடை விதிக்கப் பட்டது. இத்தடை மூலம் பூமியின் சுற்றுச் சூழலுக்குப் பெரும் நண்மை ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் நாசாவின் அறிக்கைப் படி இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப் படாது இருந்திருந்தால் 2065 ஆமாண்டுக்குள் பூமியின் ஓசோன் மண்டலத்தின் 2/3 பங்கு அழிந்து பெரும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. மேலும் இன்றும் ஆர்க்டிக் வலயத்தின் மேலே உள்ள வளிமண்டல ஓசோன் படையிலுள்ள ஓட்டை இன்னமும் அடைபடவில்லை என்றும் கூறப்படுகின்றது.