கட்டுரைகள்

உலகில் கிட்டத்தட்ட 130 வருடங்களாகப் பாவனையில் இருந்த கிலோகிராம், அம்பெயர், கெல்வின் மற்றும் மூல் போன்றவற்றின் வரையறைகள் இன்னமும் திருத்தமாக மாற்றப் பட்டுள்ளன.

சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வாக்களித்ததன் அடிப்படையில் நிறை, மின், வெப்பநிலை மற்றும் இரசயான மாதிரியின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கான சர்வதேச SI அளவீடுகள் மீளவும் திருத்தமாக வரையறை செய்யப் பட்டுள்ளன.

இதுவரை காலமும் சுமார் 130 வருடங்களாக நிறை மற்றும் அளவீட்டுக்கான பிரான்ஸின் BIPM இல் காணப் பட்ட ஒரு பிளாட்டினம் சிலிண்டரின் நிறை தான் 1 Kg என வரையறை செய்யப் பட்டிருந்தது. தற்போது இந்த அளவீடு குவாண்டம் பௌதிகவியலின் அடிப்படை மாறிலிகளில் முக்கியமான பிளாங்கின் மாறிலி (Plank constant) இனால் வரையறை செய்யப் பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் 2019 மே 20 ஆம் திகதி முதல் அமுலில் வரவுள்ளது.

கடந்த ஒரு நூற்றாண்டில் மாத்திரம் பிரான்ஸிஸில் உள்ள பிளாட்டினம் சிலிண்டரில் பத்து மைக்ரோ கிராம்கள் குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பண்டைய முறையின் துல்லியமற்ற தன்மையை உணர்ந்து கொள்ளலாம். எனவே வருங்காலத்தில் அதாவது அடுத்த வருடம் மே 20 ஆம் திகதி முதல் இயந்திர மற்றும் மின்காந்த ஆற்றலைப் பயன்படுத்தி கிப்பிள் அல்லது வாட் சமநிலையைப் பயன்படுத்தி கிலோகிராம் அளக்கப் படவுள்ளது.
இது பொருளுக்குப் பதில் அறிவியல் மாறிலியைப் பயன்படுத்துவதால் இந்த நிறை அளவீட்டில் சேதமோ குறைவோ ஏற்பட முற்றிலும் வாய்ப்பில்லை.

இந்த முறைகளை நடைமுறைப் படுத்தின் எல்லா சர்வதேச எடை அலகுகளும் என்றென்றும் நிரந்தரமாக இருக்கின்ற இயற்கையின் அடிப்படை மாறிலிகளை அடித்தளமாகக் கொண்டிருக்கும். இது மிகவும் துல்லியமான அளவீடுகளைத் தருவதோடு அறிவியலுக்கும் மிகவும் துணை புரியும்.
இதேவேளை ஒரு நேரத்தில் ஒரு எலக்ட்ரானை நகர செய்வதன் மூலம் அளவிடக்கூடிய மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற எலக்ட்ரான் குழாயில் மின்சாரத்தை செலுத்தி, அதிலுள்ள எலக்ட்ரான்களை எண்ணுவதன் மூலம் ஆம்பியர் அளவிடப்படவுள்ளது.

கெல்வின் (வெப்ப அலகு) ஒரு நிலையான தட்பவெப்பத்தில் வாயு நிறைந்திருக்கும் கோளத்தில் ஒலியின் வேகத்தை அளவிடும் வெப்பநிலை மானியலை பயன்படுத்தி வரையறுக்கப்படவுள்ளது. பொருளின் சாராம்சத்தை அளவிட பயன்படும் அலகான 'மோல்', தூய்மையான சிலிக்கான்-28ன் சரியான கோணத்தில் இருக்கும் அணுக்களின் எண்ணுகின்ற கருவியை பயன்படுத்தி மறுவரையறை செய்யப் படவுள்ளது.