கட்டுரைகள்
Typography

பூமியில் இருந்து 11 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விண்கல்லான பென்னுவின் (101955 Bennu) சுற்றுப் பாதையில் நாசாவின் ஒசிரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) என்ற விண்கலம் நுழைந்து அதனை மிக நெருங்கிச் சென்று சாதனை படைத்துள்ளது.

பூமிக்கு அப்பால் ஒரு விண்கல் அல்லது குறுங்கோளை மிக அண்மையில் சென்று அதன் சுற்று வட்டப் பாதையில் இணைந்த செயற்கைக் கோளாக ஒசிரிஸ் ரெக்ஸ் பெயர் பெற்றுள்ளது.

இந்த பென்னு விண்கல் 2175 மற்றும் 2199 ஆமாண்டுக்கு இடைப்பட்ட பகுதியில் பூமியின் சுற்று வட்டப் பாதைக்கு மிக அருகில் வருகையில் பூமியுடன் மோதி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது எனக் கணிக்கப் பட்டுள்ளது. 492 மீட்டர் விட்டமுடைய விண்கல் பூமியுடன் மோதுவதற்கு 1/2700 பங்கு சாத்தியம் தான் உள்ளது என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்த பென்னுவில் இருந்து மாதிரிகளைப் பெற்றுக் கொண்டு 2023 இல் பூமிக்குத் திரும்பி வரும் விதத்தில் தான் ஒசிரிஸ் ரெக்ஸ் இன் செயற்திட்டம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் போது முக்கியமாக பென்னுவின் திணிவையும் இந்த செயற்கைக் கோள் கணிக்கவுள்ளது.

இந்த பென்னு விண்கல் முதன் முறையாக 2007 ஆமாண்டு ஸ்பிட்ஷெர் விண் தொலைக் காட்டியால் அவதானிக்கப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் பென்னுவில் இருந்து பெறக்கூடிய மாதிரிகள் எமது சூரிய குடும்பம் எவ்வாறு தோற்றமடைந்து பரிணாமம் அடைந்தது என்பது குறித்த ஆய்வுக் கல்விக்கும் பெரிதும் உதவும் எனவும் கருதப் படுகின்றது. இது தவிர பென்னுவின் மண் மாதிரிகளில் உள்ள சேதன சடப்பொருளானது பூமியில் உயிர் வாழ்க்கை எவ்வாறு தோன்றியிருக்கும் என்ற ஊகத்துக்கும் வலுச்சேர்க்கும் எனவும் கருதப் படுகின்றது.

$800 மில்லியன் டாலர் செயற்திட்டமான ஒசிரிக்ஸ் ரெக்ஸ் செய்மதி 2016 செப்டெம்பர் 8 ஆம் திகதி ஏவப் பட்டு சமீபத்தில் தான் பென்னுவை மிக நெருங்கிச் சென்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS