கட்டுரைகள்

செவ்வாய்க்கிரகத்தில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவர் என்ற ரோபோட்டிக் விண்வண்டியின் செயற்பாடு நிறுத்தப் பட்டுள்ளதாகவும் இதனால் அதன் ஆய்வு நிறைவு பெற்று குறித்த விண்வண்டிக்குப் பிரியாவிடை கொடுக்கப் பட்டுள்ளதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிரகத்தில் பாத்பைண்டர் விண்கலத்துக்கு அடுத்த படியாக விலை மதிப்பற்ற பல ஆய்வுகளை செய்து வந்த விண்கலம் ஆப்பர்சுனிட்டி ரோவர். 2004 ஆமாண்டு முதல் 2018 ஆமாண்டு வரை செவ்வாயில் ஆக்டிவாக இயங்கி வந்த இந்த விண்வண்டி MER-B எனவும் அழைக்கப் பட்டதுடன் இதனை oppy எனவும் செல்லப் பெயரால் அழைப்பர். 2004 ஜனவரி 25 ஆம் திகதி Meridiani Planum என்ற செவ்வாயின் பகுதியில் இது தரை இறங்கி 3 கிழமைக்குள் ஸ்பிரிட் ரோவர் என்ற இன்னொரு விண்வண்டி செவ்வாயின் மறுபக்கத்தில் தரை இறங்கியது.

90 நாட்கள் வேலை செய்யும் என எதிர் பார்க்கப் பட்ட ஸ்பிரிட் ரோவர் 2010 வரை ஆக்டிவாக இயங்கித் தகவல்களை அனுப்பியது. ஆனால் ஆப்பர்சுனிட்டி ரோவர் வண்டியோ எதிர்பார்க்கப் பட்டதை விட 55 மடங்கு அதாவது 14 வருடமும் 294 நாட்களும் செவ்வாயில் தூசிப் புயல் போன்ற இடர்களையும் எதிர் கொண்டு சமாளித்து சூரிய சக்தியால் பெறப்பட்ட மின்சாரத்தைக் கொண்டு செயற்பட்டுள்ளது. மேலும் செவ்வாய் மண்ணில் அது 45.16 Km பயணம் செய்தும் உள்ளது.

குறிப்பாகத் தான் தரை இறங்கிய பகுதியிலும் விக்டோரியா பள்ளத்தாக்கிலும் விண்கற்களின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவுகளை ஆராய்ந்து பயனுள்ள தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளது இந்த ஆப்பர்சுனிட்டி. ஆனாலும் 2018 ஆமாண்டும் மோசமான தூசுப் புயல்களால் பாதிக்கப் பட்டு ஆகஸ்டு 2018 முதல் பூமிக்கு சமிக்ஞைகளை அனுப்ப முடியாது அது திணறியுள்ளது. எனவே பெப்ரவரி 13 ஆம் திகதி 2019 இல் நாசா ஆப்பர்சுனிட்டியின் செயற்திட்டம் நிறைவுக்கு வந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ரோவரின் செயற்பாட்டு இலக்குகள் குறித்து விக்கிபீடியா தளத்தில் பெறப்பட்ட தகவலை நீங்கள் கீழே காணலாம் :

பாறைகள் மற்றும் மண்ணின் பல்வேறு குணாதிசயத்தைக் கொண்டு செவ்வாயில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்களைக் கண்டறிதல். மழை, ஆவியாதல், வண்டல் இயல்பு அல்லது நீர்வெப்ப நடவடிக்கை ஆகியவைகளைக் கொண்டு தண்ணீர் இருந்ததற்கான தடயங்களை கண்டறிய முற்படும்.
இறங்கும் தளங்களை சுற்றியுள்ள உலோகங்கள், பாறைகள், மற்றும் கனிமங்கள் ஆகியவைப் பற்றி அறிதல்.

தண்ணீர் அல்லது காற்று அரிப்பு, வண்டல், நீர்வெப்ப வழிமுறைகள், எரிமலைகள் மற்றும் மோதல்களால், நில அமைப்பு உருவான செயல்முறைகள் பற்றி அறிவது. பாறைகள், மண்ணின் கட்டமைப்பு மற்றும் குணாதிசயத்தைக் கொண்டு அவைகள் உருவாகிய செயல்முறைகளைத் தீர்மானிப்பது.
உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவது இதன் முக்கியப் பணி.