கட்டுரைகள்

புளூட்டோவை அதன் அசாதாரண இயல்புகள் காரணமாக ஒரு கிரகமாகக் கருத முடியாது என்பதால் நவீன விஞ்ஞான உலகில் நெப்டியூன் தான் கடைசிக் கிரகம் என்பதுடன் அதனையும் சேர்த்து சூரியனைச் சுற்றி மொத்தம் 8 கிரகங்களே உள்ளன என்பது சில நேரம் நீங்கள் அறியாத செய்தியாகவும் இருக்கலாம்.

ஆனால் இப்போது அதிரடியாக புளூட்டோவுக்கும் அப்பால் பூமியில் இருந்து 37 பில்லியன் மைல் தொலைவில் இன்னொரு மர்ம கிரகம் 9 கிரகமாகச் சூரியனைச் சுற்றி வருவதாகவும் விரைவில் அதாவது இன்னும் 10 முதல் 15 வருடங்களுக்குள் அது கண்டு பிடிக்கப் படும் எனவும் விஞ்ஞானிகள் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த 9 ஆவது கிரகம் சூரிய குடும்பத்தில் இதுவரை அவதானிக்கப் பட்ட விண் பொருட்களை விட மிக அதிக தொலைவில் உள்ளதாம். மேலும் இக்கிரகம் பூமியை விட 5 மடங்கில் இருந்து 10 மடங்கு வரை அதிக எடையும் கொண்டதாம். சூரியனில் இருந்து பூமிக்கான தூரம் ஒரு விண்வெளி அளவீடு (அதாவது Astronomical Unit - AU) எனப்படுகின்றது. இந்த அளவீட்டில் பார்த்தால் பூமியில் இருந்து இப்புதிய 9 ஆவது கிரகம் கிட்டத்தட்ட 400 AU தொலைவில் உள்ளதாம். இக்கிரகம் இதுவரை தொலைக் காட்டிகளால் பார்க்கப் படாத போதும் இதன் ஈர்ப்பு விசை, நெப்டியூனின் ஒழுக்கைத் தாண்டி அமைந்துள்ள மிகப்பெரும் கியூப்பெர் பட்டைகளில் உள்ள விண் பொருட்களில் தாக்கத்தை செலுத்துவதை வைத்து இதன் இருப்பு ஊர்ஜிதப் படுத்தப் பட்டுள்ளது.

இக்கிரகம் மிகவும் இருண்ட பொருள் என்பதால் கியூப்பெர் பட்டைக்கு அப்பால் இதன் ஒழுக்கையோ அல்லது இருப்பிடத்தையோ ஆழமாக அவதானிக்க இன்னும் 10 வருடங்களாவது தேவை எனப்படுகின்றது. இன்னொரு முக்கிய தகவலாக இந்த 9 ஆவது கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி வர 10 000 தொடக்கம் 20 000 வருடங்களாவது எடுக்கும் என்றும் கூறப்படுகின்றது.