கட்டுரைகள்

இங்கிலாந்தில் தண்டு உயிரணுக்கள் அல்லது குருத்தணு எனப்படும் ஸ்டெம் செல் (Stem cell) மாற்று சிகிச்சை மூலம் எச் ஐ வி (எயிட்ஸ்) நோயாளி ஒருவரைக் குணப்படுத்தி இந்திய விஞ்ஞானி ஒருவர் பெருமை சேர்த்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் தற்போது பல்வேறு நோய்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் நவீன மருத்துவத்தில் தீர்வு காணும் நம்பிக்கை வளர்ந்து வருகின்றது.

இதுவரை குணப்படுத்தும் மருந்து கண்டு பிடிக்கப் படாத ஆட்கொல்லி நோயான எயிட்ஸினால் உலகில் அதிகளவு மக்கள் பலியாகி வருகின்றனர். இவர்களுக்கு இந்த எச் ஐ வி தொற்று ஏற்பட்டு விட்டால் உயிரோடு வாழும் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை தான் இதுவரை இருந்து வருகின்றது. இந்நிலையில் ஸ்டெம் செல் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் 2 ஆவது முறையாக ஒரு எயிட்ஸ் நோயாளிக்கு பூரண நிவாரணத்தைத் தேடித் தந்திருப்பதாக வெளியான தகவல்கள் உலகை உற்று நோக்க வைத்துள்ளளன.

முதலில் ஸ்டெம் செல் என்றால் என்ன என்று பார்ப்போம். இவ்வுலகில் ஒரு குழந்தை பிறக்கின்ற போது அறுக்கப் படும் அதன் தொப்புள் கொடி மற்றும் அதில் இருந்து வருகின்ற இரத்தமானது தனிச் சிறப்பு வாய்ந்த செல்களால் ஆனதாகும். அனைத்து செல்களுக்கும் மூல செல்களான இவை தான் ஸ்டெம் செல்கள் என்று அழைக்கப் படுகின்றன. குருத்தணுக்கள் எனத் தமிழில் அழைக்கப் படும் இவற்றை வைத்து மேற்கொள்ளப் படும் சிகிச்சை முறைகள் மற்றும் ஆராய்ச்சிகள் தான் நவீன மருத்துவத்தின் ஹாட் டாபிக்.

இந்நிலையில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி ரவீந்திர குப்தா தலைமையிலான குழு ஒன்று இந்த ஸ்டெல் செல்களை வைத்து எச் ஐ வி நோயாளிக்கு மாற்று சிகிச்சை செய்ய முடிவெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. அதாவது சிகிச்சை முடிந்த பின் குறித்த எச் ஐ வி நோயாளி 18 மாதங்களாக எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளாது ஆரோக்கியமாக உள்ளார்.

முதன் முறையாக 10 வருடங்களுக்கு முன் ஜேர்மனியின் பேர்லின் நகரில் எச் ஐ வி நோயாளிக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் பூரண நிவாரணம் அளிக்கப் பட்டது. எமது உதிரத்தில் நோய்த் தடுப்புச் சக்தியாக செயற்படும் வெள்ளை அணுக்களுக்குள் ஒன்றிணைந்து விடும் எச் ஐ வி கிருமிகளை அழிப்பது சுலபம் அல்ல என்றும் இதற்கான ஒரே நம்பிக்கை ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை மூலம் புதிய வியூகங்களைக் கண்டு பிடிப்பது தான் என டாக்டர்கள் சொல்கின்றனர்.

உலகில் வருடத்துக்கு 10 இலட்சம் எச் ஐ வி நோயாளிகள் உயிரிழக்கின்றார்கள். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் ஸ்டெம் செல் சிகிச்சை ஆய்வும் தொடர வேண்டிய கட்டாயத்துடன் ஸ்டெம் செல்களைச் சேகரிக்கும் கட்டாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது தொடர்பான விழிப்புணர்வை விரைவில் பொது மக்களிடம் சேர்ப்பதற்கான முயற்சியும் உலகளாவிய ரீதியில் ஏற்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.