கட்டுரைகள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் தலைமை அதிகாரி ஜிம் பிரிடென்ஸ்டைன் சமீபத்தில் ஒரு விஞ்ஞான ரேடியோ நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாசா நிறுவனத்துக்கு இதுவரை செவ்வாய்க்குச் செல்லக் கூடிய முதல் விண்வெளி வீரர் யார் என்பது தீர்மானிக்கப் படவில்லை என்றும் ஆனால் அநேகமாக அந்த வீரர் ஒரு பெண்ணாகத் தான் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் திட்டமிட்ட படி அனைத்தும் சரியாக நடைபெற்றால் நீண்ட இடைவெளிக்குப் பின் அடுத்து நிலவுக்குச் செல்லக் கூடிய விண்வெளி வீரரும் ஒரு பெண்ணாகத் தான் இருப்பார் என்றும் அவர் நிலவுக்குச் சென்ற முதலாவது பெண் விண்வெளி வீரராகப் பெயர் பெறுவார் என்றும் கூட ஜிம் தெரிவித்துள்ளார். அடுத்த தசாப்தத்தில் நிலவுக்குச் செல்லும் அடுத்த வீரர் புதிய தொழிநுட்பம் மற்றும் பொறிமுறைகளுடன் அங்கு செல்வார் என்றும் அவர் இதுவரை நிலவில் ஆராயப் படாத பகுதிகளை ஆய்வு செய்வார் என்றும் கூட ஜிம் தெரிவித்தார்.

மறுபுறம் செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான தடயங்கள் உள்ளதா என உலக நாடுகள் தீவிரமாக ஆராய்ந்து வரும் நிலையில் அங்கு விரைவில் இரு மனிதர்கள் அனுப்பப் படுவார்கள் எனவும் அதில் முதலாவது நபர் பெண்ணாக இருப்பார் எனவும் நாசா கூறியுள்ளது. இந்த மாதக் கடைசியில் அமெரிக்காவைச் சேர்ந்த இரு பெண் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை விண்ணில் நடக்க வைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இவ்விருவர்களில் ஒருவர் தான் செவ்வாய்க் கிரத்துக்கு அனுப்பத் தேர்வு செய்யப் படுவார் என்றும் உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விண் நடையானது 7 மணித்தியாலங்களுக்குத் திட்டமிடப் பட்டுள்ளது. நாசாவில் ஆக்டிவாக இயங்கி வரும் விண்வெளி வீரர்களில் 34% வீதமானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.