கட்டுரைகள்

ஜப்பானின் ஹிரோசிமா நகரில் போடப் பட்ட அணுகுண்டை விட 10 மடங்கு அதிக சக்தி வாய்ந்த ஒரு விண்கல் திங்கட்கிழமை ரஷ்யாவின் கம்சாட்கா பகுதியில் பூமிக்கு மேலே 16 மைல் உயரத்திலேயே வளி மண்டலத்தில் வெடித்துச் சிதறியதை நாசா அவதானித்து உறுதிப் படுத்தியுள்ளது.

சுமார் 173 கிலோ டன் டி என் டி சக்தியுடன் 71 000 mph வேகத்தில் இந்த விண்கல் பூமியின் மேற்பரப்புக்குள் நுழைந்துள்ளது.

6 வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவின் செலையாபின்ஸ்க் நகருக்கு மேலே வெடித்துச் சிதறிய விண்கல் உங்களுக்கு நினைவிருக்கலாம். இதன் போது குறித்த விண்கல்லின் பெரும்பகுதி வளி மண்டலத்திலேயே எரிந்து விட்ட போதும் அதன் சிறு பகுதி தரையுடன் மோதி அதனால் ஏற்பட்ட ஷாக் வேவ் எனப்படும் அதிர்வலைகளால் பல பொது மக்கள் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் திங்கட்கிழமை பூமியின் வளி மண்டலத்துக்குள் புகுந்த விண்கல்லோ பூமியுடன் மோதி எந்தவித பாரிய சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.

நாசாவிலுள்ள பூமியின் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரியான லிண்ட்லே ஜொஹொன்சன் இந்த விண்கல் குறித்து பிபிசிக்கு அளித்த தகவலில் இது போன்ற அளவு கொண்ட பாரிய விண்கல் பூமியுடன் மோதுவது ஒரு நூற்றாண்டில் 2 அல்லது 3 முறை தான் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த விண்கல்லானது பெரிங் கடலில் வீழ்ந்திருக்கலாம் எனவும் வட அமெரிக்கா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த விமானங்கள் இப்பகுதிக்கு மேலே வானில் பறப்பது உண்டு என்பதால் இந்த விண்கல் பூமியை நோக்கி வந்ததை ஏதேனும் விமானத்திலுள்ள கமெரா பதிவு செய்துள்ளதா என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை 2013 இல் ரஷ்யாவில் விழுந்த விண்கல் இன்றைய விண்கல்லை விட 2 1/2 மடங்கு சக்தி வாய்ந்தது என்றும் கணிக்கப் பட்டுள்ளது. மேலும் திங்கட்கிழமை பூமிக்குள் நுழைந்த விண்கல் வளிமண்டலத்தில் வெடித்துச் சிதறியது அமெரிக்க விமானப் படையின் கமெராக்களில் சிக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.