கட்டுரைகள்
Typography

அண்மையில் வெளியாகி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் வானியல் செய்தி உலகின் முதலாவது கருந்துளையான (Black Hole) Powehi இன் நேரடி புகைப்படம் குறித்த செய்தியாகும்.

20 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானியும் கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்து கருந்துளைகளில் இருந்தும் நுண்ணிய மின்காந்த அலைகள் வெளிவருகின்றன என்று கூறிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாவ்கிங் மறைந்து பல மாதங்களுக்குப் பிறகு இந்தப் புகைப்படம் வெளியாகி உள்ளது.

தனது அபார ஈர்ப்பு விசை காரணமாக கண்ணுக்குத் தெரியும் ஒளி கூட வெளியேற முடியாத கருந்துளையின் இந்த நேரடிப் புகைப்படத்தை எடுப்பதற்கான முக்கிய காரணமே Black Body Radiation எனப்படும் 1974 இல் ஸ்டீபன் ஹாவ்கிங் மும்மொழிந்த கருந்துளைகளின் நிகழ்ச்சி விளிம்பு (event horizon) இலிருந்து வெளியேறும் கதிர் வீச்சு தான். இந்நிலையில் ஒரு கருந்துளையின் முதலாவது புகைப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டாது போனது ஹாவ்கிங் இற்கு துரதிர்ஷ்டவசமே தான். இனி இந்த புகைப்படம் குறித்த விவரத்துக்கு வருவோம்.

event horizon telescope எனப்படும் சர்வதேச தொலை நோக்கித் திட்டம் மூலம் ஸ்பெயின், மெக்ஸிக்கோ, சிலி, ஹவாய், அரிசோனா போன்ற பகுதிகளில் வைக்கப் பட்டுள்ள ராட்சத ரேடியோ தொலைக் காட்டிகளின் உதவியுடன் இந்த கருந்துளை படம் பிடிக்கப் பட்டுள்ளது. பூமியில் இருந்து 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள மேசியர் என்ற நட்சத்திர மண்டலத்தின் மையத்திலுள்ள கருந்துளை தான் இவ்வாறு படம் பிடிக்கப் பட்டுள்ளது. இக்கருந்துளை சூரியனை விட 6500 கோடி மடங்கு எடை கொண்டது ஆகும்.

இனி நீங்கள் பெரும்பாலும் அறிந்திருக்க முடியாத செய்திக்கு வருவோம். எமது பால்வெளி அண்டத்தின் (Milky Way) மையத்திலும் அதிநிறை கருந்துளை (Super Massive Black Hole) ஒன்று காணப் படுகின்றது. Sagittarius A என்று பெயரிடப் பட்டுள்ள இக்கருந்துளை அமைந்துள்ள எமது பால்வெளி அண்டம் 150 000 முதல் 200 000 ஒளி வருடங்கள் தான் விட்டமுடையது. எனவே பூமிக்கு ஏப்பிரல் 10 ஆம் திகதி படம் பிடிக்கப் பட்ட கருந்துளையை விட மிக அருகில் உள்ள இந்த எமது அண்டத்தின் மையத்திலுள்ள கருந்துளையை ஏன் முதலில் படம் பிடிக்க முடியவில்லை?

சாதாரணமாகத் தோன்றும் இக்கேள்விக்கு விஞ்ஞானிகள் இவ்வாறு பதில் கூறுகின்றனர். இதற்குக் காரணம் இந்த கருந்துளையும் எமது பூமி அமைந்திருக்கும் சூரிய மண்டலமும் அமைந்துள்ள கேத்திர கணித நிலை (Geometrical position) என்றால் உங்களுக்கு இலகுவாக விளங்கும். இது தொடர்பான விளக்கப் படம் கீழே:

இப்படத்தை நீங்கள் உற்று நோக்கினால் நூறு பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரங்களால் நிறைந்த எமது பால்வெளி அண்டம் ஒரு வளைவான அதே நேரம் கிடை வட்டமாக (Flat Disc) இருப்பதைக் காண்பீர்கள். பால்வெளி அண்டத்தின் வளைவின் ஒரு ஓரத்தில் அமைந்துள்ள சூரிய குடும்பம் மற்றும் அதில் உள்ள பூமியின் தொலைக் காட்டிகளுக்கு எமது அண்டத்தின் விளிம்பு தான் தென்படும். மையம் தென்படாது என்பதே இக்கருந்துளையை இதுவரை படம் பிடிக்க இயலாமைக்கு முக்கிய காரணமாகும்.

எனவே எமது இக்கருந்துளையை அவதானிக்க வேண்டுமெனில் நூறாயிரக் கணக்கான ஒளியாண்டுகள் நாம் விண்வெளி ஓடத்தில் பயணித்தாக வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆயினும் ரேடியோ தொலைக் காட்டிகளின் உதவியுடன் வருங்காலத்தில் EHT எனப்படும் Event Horizon Telescope தொலைக் காட்டியால் இந்த எமது பால்வெளி அண்டத்தின் மையத்திலுள்ள இக்கருந்துளையையும் ஏதேனும் ஒரு கணத்தில் படம் பிடிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்