கட்டுரைகள்
Typography

இன்று ஏப்பிரல் 22 ஆம் திகதி சர்வதேச பூமி தினமாகும் (Earth Day). 1970 ஆமாண்டு முதல் உலகமெங்கும் ஏப்பிரல் 22 ஆம் திகதி கொண்டாடப் படும் இத்தினத்தை ஒட்டி கூகுள் தேடு பொறியும் தனது முகப்பில் விசேட அனிமேஷன் லோகோவை பதிவிட்டுள்ளது.

புவியின் சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் இது வருடாந்தம் சுமார் 193 நாடுகளில் அனுட்டிக்கப் பட்டு வருகின்றது.

2016 ஆமாண்டு புவி தினத்தின் போது தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, சீனா உட்பட 120 நாடுகள் கைச்சாத்திட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. முன்பதாக அமெரிக்காவில் சுற்றுச் சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் பூமி தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை மார்ச் 20 ஆம் திகதி இரவும் பகலும் சமமான நாளாகவும், ஜூன் 5 ஆம் திகதி ஐ.நா இன் சுற்றுச் சூழல் தினமாகவும் கூடக் கொண்டாடப் படுவது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் சுமார் 192 நாடுகளிலும் குறைந்த பட்சம் ஒரு பில்லியன் மக்கள் பூமி தினம் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது.

இந்த வருடம் 2019 ஆமாண்டுக்கான பூமி தினக் கருப்பொருளாக (Earth Day Theme) அழிவின் விளிம்பில் இருக்கும் இருக்கும் மில்லியன் கணக்கான தாவரங்களையும், விலங்குகளையும் பாதுகாப்பது என்பது அமைந்துள்ளது. வாஷிங்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் இலாப நோக்கற்ற பூமி தின உலகளாவிய வலையமைப்பு நிறுவனத்தின் கூற்றின் படி மனிதனின் நடவடிக்கைகள் தான் நேரடியாகப் பெரும்பான்மையான உயிரின அழிவுக்கு வித்திட்டு வருகின்றது எனப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசார்கள் அழிவடைந்த பின்னர் எமது பூமி எதிர்நோக்கி வரும் மிகப் பெரிய உயிரின அழிவு தற்போது மறைமுகமாக நிகழ்ந்து வருவதாகவும் இதற்குக் காரணம் துரதிர்ஷ்டவசமாக மனித இன நடவடிக்கைகளால் இயற்கையில் ஏற்பட்டுள்ள சமநிலை ஏற்றத் தாழ்வே என்றும் குறித்த அமைப்பு தனது இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பிடப் பட்ட தகவலில், காலநிலை மாற்றம், காடழிப்பு, வாழ்விடம் இழப்பு, விலங்குகளின் விலையுயர்ந்த பாகங்கள் கடத்தல், வேட்டையாடல், முறை தவறிய விவசாயம், சுற்றுச் சூழல் மாசு போன்றவையே உயிரின அழிப்புக்கும் முக்கிய காரணம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்