கட்டுரைகள்

கடந்த சில நூறு மில்லியன் ஆண்டுகளில் நிலவின் தரை மேற்பரப்பில் ஏற்பட்டு வரும் சுருக்கங்கள் காரணமாக இதுவரை நிலவு 150 அடிக்கு சுருங்கி அதாவது சின்னதாகி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

மேலும் அண்மைக் காலத்தில் தான் நிலவில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் இந்த மாற்றத்தால் பூமிக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு பற்றிக் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

எமது பூமியின் ஒரேயொரு துணைக் கோளான நிலவின் ஈர்ப்பு விசை காரணமாகத் தான் பூமியில் கடல் அலைகள் மேலே எழும்பிப் பாய்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நிலவின் உட்பகுதி குளிர்ச்சியடைவதால் தான் அது சுருங்கத் தொடங்க அதன் மேற்பரப்பில் நில அதிர்வுகளும் பாறைகள் தேய்வும் ஏற்படுகின்றன. நிலவின் தரையில் முன்பு ஆராய்ச்சி நடத்திய ஆப்பலோ விண் ஓடங்கள் நிலவில் சீசோமீட்டர் எனப்படும் நிலநடுக்கத்தை அளவிடும் கருவியைப் பொருத்தித் தகவல்களை சேகரித்து வந்தன. இந்தத் தகவல்களை அண்மையில் பகுப்பாய்வு செய்த போது தான் நிலவில் சுருக்கங்கள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

இதன் போது அங்கு ஏற்படும் நில நடுக்கங்கள் ஆபத்தான வலிமையைக் கொண்டவை என்றும் தெரிய வந்துள்ளது. முக்கியமாக அங்கு ஏற்படும் நிலநடுக்கங்கள் புவியின் ரிக்டர் அளவு கோலில் 5 ஆகவும் பதியப் பட்டு வந்துள்ளது. சந்திரனில் 4.51 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நுணுக்கமான செயபாடு நடைபெற்று வருவதாக ஸ்மித்சோனியன் என்ற நிறுவனத்தின் விஞ்ஞானி தாமஸ் வாட்டர்ஸ் தெரிவித்து உள்ளார். அவர் மேலும் கூறுகையில் மனிதனின் ஆய்வுகளின் படி இந்த பாறைமுறிவுகள் இன்னமும் செயல்நிலையில் உள்ளதால் இன்னும் சிலபல பூகம்பங்கள் அங்கு ஏற்படும். நிலவும் தொடர்ந்து குளிரடைந்து வருவதால் சுருங்கி, அதன் மேற்புறத்தில் சுருக்கங்கள் தோன்றியுள்ளன என்றும் தெரிவித்ததுள்ளார்.

பூமியும் நிலவும் ஒரே காலத்தில் தோன்றியிருந்தாலும் கூட பூமியை விட நிலவு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது என்பதால் அது விரைவாக குளிர்ச்சியடைந்து வந்துள்ளது. இதனால் அங்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே எரிமலை செயற்பாடு நின்று விட்டது. உயிரினங்களும் இதுவரை தோன்றவில்லை. ஆனால் பூமியின் உட்புறம் இன்னமும் வெப்பக் குழம்பாக எரிமலைகள் மூலம் அவ்வப்போது வெளியாகியும் நில அதிர்வுகளை ஏற்படுத்தியும் வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிலவில் ஏற்படும் நிலநடுக்கங்கள் தீவிரமடைந்தால் அது பூமியில் மிக மிக மிகச் சிறியளவிலே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.