கட்டுரைகள்

பிரபஞ்சவியலில் (Cosmology) காலம் மற்றும் வெளி (Time and Space) குறித்த சர்ச்சைக்குரிய ஆனால் மிகவும் சுவாரஷ்யமான சில முக்கிய புரிந்துணர்வுகளை நாம் பார்ப்போம்.

முதலாவது காலமும் வெளியும் தனித்தனியாக வெளிப்பட முடியாது என்பதாகும். அதாவது குறைந்தது நாம் அவை தனித் தனியானவை என கற்பனை செய்யவும் முடியாது ஆகும்.

இதனால் நாம் வாழும் பிரபஞ்சம் நம்மில் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய விதத்தில்  முப்பரிமாண வெளிகளில் மட்டும் அடங்காது நீளம், அகலம் மற்றும் ஆழம் என்ற 3 வெளிகளுக்கான பரிமாணங்ளுடன் காலத்தினையும் சேர்த்து 4 பரிமாணங்களைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. இன்னும் விளக்கமாக சொன்னால் ஒரே கூறின் இரு வெளிப்பாடுகளை நாம் காலம் மற்றும் வெளி எனப் பிரித்து அடையாளப் படுத்துகின்றோம்.

அடுத்த புரிந்துணர்வு திணிவு அல்லது ஈர்ப்பானது காலம் மற்றும் வெளியினை வளைக்கின்றது என்பதாகும். ஐன்ஸ்டீனின் இந்தக் கண்டு பிடிப்பே நவீன வான் பௌதிகவியலில் கோள்களை நோக்கிச் செலுத்தப் படும் செயற்கைக் கோள்களின் பயணப் பாதையையும், அதில் அவை பயணிக்க வேண்டிய வேகத்தையும் துல்லியமாகத் தீர்மாணிக்கின்றது. இந்த விடயம் குறித்து 'இண்டர்ஸ்டெல்லார்' என்ற விண்வெளிப் பயணங்கள் பற்றிய ஹாலிவுட் திரைப்படத்தில் நீங்கள் அவதானித்திருக்கலாம்.

எமது மனித மனம் தான் காலத்தை செக்கன், நிமிடம், மணித்தியாலம், நாள், கிழமை, மாதம் மற்றும் வருடம் என்றும் இடத்தை கண்டங்கள், நாடுகள், பிராந்தியங்கள், நகரங்கள், மாவட்டங்கள் எனத் தனது தேவைக்காகப் பிரித்து வைத்துள்ளது. ஆனால் நவீன பௌதிகவியலில் பிரபஞ்சமானது கிட்டத்தட்ட 10 பரிமாணங்களைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்றும் ஆனால் இவற்றை எமது மனம் அறிந்து கொள்ளவோ, ஆய்வு செய்யவோ போதுமான ஆற்றலில் தற்போது இல்லை என்றும் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.