கட்டுரைகள்

பிரபஞ்சத்துக்கு எல்லை உண்டு என ஏன் கருதப் படுகின்றது? உண்மையில் இந்த எல்லையானது காலத்தில் தான் உள்ளதே தவிர வெளியில் அல்ல.

மேலும் இந்த பிரபஞ்சத்தை நாம் பார்க்கும் போது அதன் மிகுந்த தொலைவை மாத்திரம் நாம் பார்க்கவில்லை.

ஒளியின் வேகம் முடிவிலியாக இல்லாது இருப்பதால் காலத்தை முன்னோக்கியும் தான் பார்க்கின்றோம். இன்று நாம் எமது பிரபஞ்சத்தின் வயது 13.799±0.20 பில்லியன் வருடங்கள் எனக் கூறுவதன் பொருளை இவ்வாறும் கொள்ள முடியும். அதாவது பூமியில் இருந்து நாம் பார்க்கும் மிகவும் பழமையான ஒளிக்கற்றை பயணித்த கால அளவு இதுவாகும்.

உண்மையில் இந்தக் கால அளவு பயணிக்க எடுத்த தூரம் சற்று அதிகமாகும். அதாவது 46 பில்லியன் ஒளி வருடங்கள் ஆகும். ஏனெனில் பிரபஞ்சம் தோன்றியது முதற்கொண்டே அதில் உள்ள வெளி உட்பட அனைத்தும் விரிவடைந்தே வருகின்றது. இதனால் தான் நாம் பூமியை மையமாகவும் பிரபஞ்சத்தைக் கோளமாகவும் கருதினால் நம் கண்ணால் பார்க்கக் கூடிய பிரபஞ்சத்தின் விட்டம் கிட்டத்தட்ட 92 பில்லியன் ஒளிவருடங்கள் என்று கூறப்படுகின்றது.

இதற்கு அப்பாலும் விரிவடைந்து கொண்டிருக்கும் வெளி (Space) ஒளியின் வேகத்தை அடைந்து விட்டதால் அங்கிருக்கும் எந்தவொரு கூறு அல்லது பொருளினையும் நம்மால் பார்க்க முடியாது. ஏனெனில் அங்கிருந்து புறப்படும் ஒளி பூமியில் உள்ள எம் கண்களை வந்தடைவதற்கான நேரம் போதுமானது அல்ல ஆகும்.

இதனால் எம் கண்களுக்குத் தெரியும் பிரபஞ்சத்திற்கு (Observable Universe) அப்பால் உள்ள வெளியில் பெரும் பங்கு வெற்றிடமா அல்லது அங்கும் சடம் அல்லது ஒளி போன்ற அலைகளோ, சக்தியோ உள்ளதா என எம்மால் எதுவுமே தீர்மானிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.