கட்டுரைகள்

அண்மையில் ஆக்டோபர் முதலாம் திகதி பூமியில் மோதினால் குறிப்பிடத்தக்க சேதத்தினை ஏற்படுத்தக் கூடிய 4 விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன.

இதில் 3 விண்கற்கள் 24 மணித்தியாலத்துக்குள் தான் நாசாவால் இனம் காணப் பட்டன என்பது சற்று அதிர்ச்சியான தகவலே!

இதில் சில விண்கற்கள் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான சராசரித் தூரத்தின் அரைப் பங்கு தூரத்தில் பூமியைக் கடந்து சென்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2029 ஆமாண்டு ஏப்பிரல் 13 ஆம் திகதி அபோபிஸ் என்ற விண்கல் பூமியைச் சுற்றி வரும் புவியியல் சார்பு தகவல் தொடர்பு செய்மதிகளின் ஆர்பிட்டை விட அருகில் பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. அதாவது பூமியின் மேற்பரப்பில் இருந்து 31 200 கிலோ மீட்டர் உயரத்தில் இது கடந்து செல்லவுள்ளது.

66 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியில் கோலோச்சியிருந்த டைனோசர் இனம் பூண்டோடு அழியக் காரணமாக இருந்தது மிகப்பெரிய விண்கல் ஒன்றின் பூமியுடனான மோதுகையே என்றும் விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு ஆதாரபூர்வமான கருதுகோள் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விஞ்ஞானிகளால் 35 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல் பூமியில் ஒரு நகரத்தை முற்றாக சிதைக்கப் போதுமானது என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

டைனோசர்களை அழித்த விண்கல் 11 தொடக்கம் 81 கிலோ மீட்டர் விட்டம் கொண்டதாக இருந்திருக்கும் என்றும் கூறப்படுகின்றது.