கட்டுரைகள்

பூமியில் உயிரினங்களின் வாழ்க்கைக்கு அவசியமான கார்பன் வாயுப் பொறிமுறையில் பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு டைனோசர்கள் இனம் அழியக் காரணமாக இருந்த விண்கல்லை விட நிகழ்காலத்தில் மனித இனம் அதிக தாக்கத்தை செலுத்தி வருவதாக அண்மையில் அதிர்ச்சியளிக்கக் கூடிய கணிப்பு முடிவு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பல மில்லியன் வருடங்களுக்கு முன் இந்த விண்கல்லின் தாக்கத்தால் அப்போது பூமியில் 75% வீதமான உயிரினங்கள் பேரழிவைச் சந்தித்ததன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கணிப்பின் படி நவீன வரலாற்றில் 1750 ஆம் ஆண்டு முதல் பூமியில் கார்பன் வெளியேற்றம் அதிகரித்து வருகின்றது. இதனால் ஏற்படும் பச்சை வீட்டு விளைவு காரணமாக புவி வெப்பமடையும் வீதம் கூடிக் கொண்டே வருவதால் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயருதல் மற்றும் பருவ நிலை சீர்கேடு என்பவை அதிகரித்து வருகின்றன.

இந்த ஆய்வின் மூலம் பூமியின் உட்புறத்தில் இருந்து விண்வெளியின் விளிம்பு வரை படர்ந்துள்ள கார்பன் பொறிமுறையில் ஏற்படும் மாற்றத்தை DCO (Deep Carbon Observatory) எனப்படும் சர்வதேச அமைப்பினைச் சேர்ந்த 1000 விஞ்ஞானிகள் அறிய முற்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 500 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியிலிருந்த கார்பன் கட்டமைப்பில் இருந்து இன்று வரை படிப்படியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

இதன் போது வெளியான இன்னொரு அதிர்ச்சித் தகவல் யாதெனில் பூமியின் சுவட்டு எரிபொருளில் இருந்து மனித இனம் வாகனங்களுக்காகப் பாவிக்கும் எரிபொருளில் மூலம் ஒரு வருடத்துக்கு வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவானது பூமியில் உள்ள எந்தவொரு எரிமலையும் ஒரு வருடத்தில் சராசரியாக அதன் செயற்பாடு காரணமாக வெளியேற்றும் கார்பன் வாயுவை விட 80 மடங்கு அதிகமாகும்.

66 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மெக்ஸிக்கோ வளைகுடாவில் விண்ணில் இருந்து வந்து விழுந்த 10 கிலோமீட்டர் விட்டம் கொண்ட சிக்ஸுலுப் என்ற விண்கல் காரணமாக பூமியில் டைனோசர்கள் உட்பட 75% வீதமான உயிரினங்கள் பேரழிவைச் சந்தித்தன. இந்த விண்கல் வெளியிட்ட சக்தி ஒரு அணுகுண்டை விட பில்லியன் மடங்கு வலிமை கொண்டதாகும். இதனால் பல மடங்கு வலிமை கொண்ட தொடர் அதிர்வுகள், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு மற்றும் காட்டுத் தீ போன்றவற்றால் கிட்டத்தட்ட 1400 கிகாடன் அதாவது 1400 பில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைட்டு பூமியின் வளி மண்டலத்துக்கு வெளியிடப் பட்டது குறிப்பிடத்தக்கது.