கட்டுரைகள்

அண்மையில் பிரபஞ்சம் (Cosmos) எனப்படும் தொலைக் காட்சி ஆவணத் திரைப்படத் தொடரைப் பார்க்க நேரிட்டது.

இதன் தொடக்கத்தில் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வானியல் ஆராய்ச்சியில் மிகுந்த செல்வாக்குச் செலுத்திய அறிவியலாளரான கார்ல் சாகனின் பிரசித்தமான கூற்று மிகவும் வியக்க வைத்தது. அதாவது 'பிரபஞ்சம் தன்னைத் தானே பார்க்கும் அம்சம் தான் நாம்!' என்பது அக்கூற்றாகும்.

உண்மையில் பலர் நம்ப மறுக்கும் மிகக் கடினமான அறிவியல் ரீதியான உண்மை தான் இது என குறித்த ஆவணத்தின் மூலம் தெரிய வந்தது. இதில் கார்ல் சாகனின் மிகப் பிரபலமான பிரகடனம் இவ்வாறு அமைந்திருந்தது.

'பூமியின் மேற்பரப்பு தான் பிரபஞ்ச சமுத்திரத்தின் கடற்கரை. இந்தக் கடற்கரையில் தான் நாம் எமக்கு இதுவரை தெரிந்துள்ளவை பலவற்றைக் கற்றுக் கொண்டுள்ளோம். அண்மைக் காலமாக சற்று முன்னோக்கி எமது பாதையில் இருந்து விலகி அறிய முற்பட்டுள்ளோம். இது எமது ஒரு அடியின் ஆழமாகக் கூட இருக்கலாம். ஆனால் பிரபஞ்ச சமுத்திரத்தின் தண்ணீர் எம்மை வரவேற்கின்றது. எமது இனத்தின் ஒரு பகுதி இந்த சமுத்திரத்தில் இருந்து தான் நாம் வந்துள்ளோம் என அறிந்துள்ளது.

இந்த சமுத்திரத்துக்கு மீண்டும் செல்ல ஆவல் கொண்டுள்ளோம். எம்மால் இது முடியும். ஏனெனில் பிரபஞ்சம் எமக்குள்ளும் இருக்கின்றது. நாம் நட்சத்திரங்கள் எந்த சடத்தினால் ஆக்கப் பட்டுள்ளனவோ அதே சடத்தினால் தான் ஆக்கப் பட்டுள்ளோம். இந்தப் பிரபஞ்சம் தன்னைத் தானே அறிந்து கொள்ளக் கூடிய ஒரு வழி தான் நாம்!'

மனித இனம் தான் இதுவரை அறியப் பட்ட, பிரபஞ்சத்தில் அணுக்களால் வடிவமைக்கப் பட்டுள்ள தன்னைப் பற்றியும், பிரபஞ்சத்தைப் பற்றியும் அறிய முற்படுகின்ற படைப்பாகும். அதாவது நாம் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருந்த போதும் அதனை எம் அறிவின் கண்கொண்டு நோக்கவும் முற்படுகின்றோம். இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகளான நட்சத்திரங்களில் இருந்து தான் நாம் பிறந்துள்ளோம். இது ஒரு காதல் உணர்வு கொண்ட உண்மை ஆகும். கடினமான விஞ்ஞானத்தால் ஏற்றுக் கொள்ளப் படுகின்ற இந்த விடயம் நாம் அனைவரும் தெரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே என்றால் அது மிகையாகாது.

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்