கட்டுரைகள்

எமது பிரபஞ்சம் முழுமைக்காக என்று எடுத்துக் கொண்டால் முடிவற்ற எண்ணிலடங்கா சூரியன்கள் உள்ளன என்றும் கூற முடியும்.

ஆனால் மனிதனின் கண்களுக்கு அல்லது பூமியில் தற்போது உள்ள அதியுயர் வீச்சம் கொண்ட தொலைக் காட்டிகளின் உதவியுடன் பார்க்க முடிந்த எல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சம் என்று ஒன்று உண்டு. இதனை ஆங்கிலத்தில் பார்க்க முடிந்த பிரபஞ்சம் அதாவது The Observable Universe என்று கூறுவர்.

அதாவது நாமிருக்கும் பிரபஞ்சத்தின் மிக அதிக தூரத்தில் இருந்து ஒளியானது எமது கண்களை வந்து எட்டக் கூடிய அளவிலான தொலைவு என்று இதனைக் கூறலாம். இந்தத் தொலைவு வரை இருக்கும் சூரியன்களின் எண்ணிக்கை 1 இற்குப் பிறகு 21 அல்லது 22 பூச்சியங்களை இட்டால் வரக்கூடிய எண்ணின் அளவு என்று கூறப்படுகின்றது.

எமது பார்வைக்கு உட்பட்ட பிரபஞ்சத்தில் உள்ள சராசரி அண்டங்களின் எண்ணிக்கை சராசரியாகப் பல டிரில்லியன்கள் ஆகும். இந்த ஒவ்வொரு அண்டத்திலும் சராசரியாக உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை பல நூறு பில்லியன்கள் ஆகும். இந்த இரு அளவுகளையும் பெருக்கினால் வரும் அளவு தான் மேலே கூறப்பட்ட 1 இற்குப் பின் 22 பூச்சியங்களை சேர்த்தால் வரும் எண்ணாகும். இது தான் எமது பார்வைக்குட்பட்ட பிரபஞ்சத்தில் உள்ள சூரியன்களின் எண்ணிக்கை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..!