கட்டுரைகள்
புதன் கிரகத்துக்கு ஒப்பான பருமனுடைய கிரகம் ஒன்று பூமியுடன் மோதியதால் தான் எமது பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கியதாக நவீன ஆய்வொன்றின் மூலம் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
புவிவேதியியல் அறிஞர்கள் (Geochemists) கூற்றுப் படி பூமியின் கார்பன் மூலகங்கள் அதன் ஆரம்பக் கட்டத்தில் ஆவி நிலையில் இருந்தன.
 
எஞ்சிய கார்பன்கள் பூமியின் மையக் கருவில் அடைபட்டுக் கிடந்தன. இத்தருணத்தில் புதன் கிரகத்தின் பருமனுக்கு ஒப்பான இன்னொரு கிரகம் பூமியுடன் வந்து மோதியதில் அந்தக் கிரகத்தில் மிக அதிகளவில் இருந்த கார்பன் அணுக்கள் பூமியுடன் சேர்ந்தன. 4.4 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த இரு கிரகங்களும் இணைந்து பூமியில் முக்கிய சூழல் மாற்றம்  ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன் பூமியுடன் குறுங்கோள்கள் வந்து  மோதியதால் உயிரினங்கள் அழிந்ததாகவே நாம் கேள்விப் பட்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களதும் அடிப்படைக் கார்பன் கட்டமைப்பு பூமியுடன் வந்து மோதியதாகக் கருதப் படும் கிரகத்தில் இருந்து வந்திருப்பதற்கு  சான்றுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியில் உயிர் வாழ்க்கைக்குத் தேவையான கூறுகளுடன் வைரம் போன்ற மிக உறுதியான கார்பன் கட்டமைப்பும்  இக்கிரகத்தில் இருந்து வந்துள்ளன. மேலும்  கதிர்வீச்சு மூலகங்களான யுரேனியம்  மற்றும்  தோரியம் என்பனவும் பூமியுடன் குறித்த கிரகம் மோதிய போது உண்டானவையே என்றும் கூறப்படுகின்றது.
 
- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்