கட்டுரைகள்

தமிழக அரசியற் களத்தின் காட்சிகள் பரபரப்பாகத் தொடங்கியிருக்கின்றன. திரையில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்ட ரஜினிகாந், அரசியற்களத்தில் ஆளுமையாகவும், வேடிக்கையாகவும், வெவ்வேறு கோணங்களில் பார்க்கவும் கருத்துக்கள் பகிரப்படவும் தொடங்கியிருக்கின்றன. இது குறித்த ஒரு விரிவான பார்வையாக வரும் மாதுமையின் ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ? கட்டுரையை 4தமிழ்மீடியாவின் மாற்றுச் சிந்தனை மிக்க வாசகர்களுக்குத் சிறப்புத் தொடராகத் இன்று முதல் தருவதில் மகிழ்வுறுகின்றோம். - 4TamilmediaTeam

ரஜினியின் அரசியல் தளபதி யார் ?

தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிக்கு அரசியல் ஆர்வம் துளிர்விட ஆரம்பித்தது 1980-களின் மத்தியில். எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், சோ ராமசாமி உள்ளிட்டோர் அதற்கு உரமிட்டனர். கமல் தனது ரசிகர் மன்றங்கள் ‘நற்பணி இயக்கமாக’ மாற்றியதைத் தொடர்ந்து, 1990-களின் ஆரம்பத்தில் தனது ரசிகர் மன்றங்களை ஒழுங்கு செய்து, ரஜினி அதைக் கட்டுக்கோப்பான ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற அமைப்பாக மாற்றினார்.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை வெளிப்படையாக விமர்சித்ததால் மூப்பனாருக்கு நெருக்கமானார். 1996-இல் ரஜினி முதல் முறையாக தமிழகத்தின் தேர்தல் அரசியலில் திமுக - தாமாக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். ஜெயலலிதா மீதான அதிருப்தியோடு ரஜினி அலையும் சேர்ந்ததால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனால் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எண்ணம் வலுவானது. 1998 மக்களவைத் தேர்தலில் ரஜினி மீண்டும் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தார்.

களத்துக்கு வந்த ரஜினி

ஆனால், தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக வந்தன. அதன்பின் அவர் தேர்தலில் ஆதரவளிப்பதை நிறுத்திக்கொண்டார். பின்னர் 2002-ல் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றிக் காய்ந்து கருகியபோது, காவிர் பிரச்சனை தீவிரமடைந்தது. திரையுலகம் கடல்போல் திரண்டு நெய்வேலியில் நிலக்கரி நிறுவத்தின் முன்பாக பேரணி நடத்தி கூட்டம் நடத்தியபோது அதைப் புறக்கணித்தார் ரஜினி. திரையுலகில் மொழி மற்றும் இன ரீதியாக பலர் தன்னை தனிமைப்படுத்துவதாக தனது நலன்விரும்பிகளிடம் கூறிய ரஜினி. சென்னை கடற்கரையில் குறளகத்தை ஒட்டிய பகுதியில் தனி ஆளாக உண்ணாவிரதம் இருந்தார்.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக பா. சிதம்பரம் மு.க. ஸ்டாலின், திருநாவுகரசு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கமல், சத்தியராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளும் அவரைத்தேடி உண்ணாவிரத மேடைக்கு வந்தனர். சுமார் 50,000 சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தீவிர ரஜினி ரசிகர்கள் ரஜினி உண்ணாவிரதம் இருந்த மேடைக்கு முன்பாக குவிந்தனர். சாலைகளை அடைத்தது போல் ரஜினி நின்றதும் நீண்ட வரிசையில் நின்று அவர்கள் ரஜினியைக் காண வந்ததும் ஊடகங்களுக்கு பெரும் தீனியாக ஆனது.

ரஜினியின் காவிரி உண்ணாவிரதத்துக்குப் பிறகு ரஜினியின் அரசியல் சக்தியை புரிந்துகொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ், ரஜினி தமிழக அரசியலில் வளர்வது நல்லதல்ல என்று கண்டுகொண்டிருக்க வேண்டும். ரஜினியின் புகை பிடிக்கும் காட்சிகளால் தமிழக இளைஞர்கள் கெட்டு விட்டதாக பிரச்சனையை கிளப்பினார். அதேபோல நீண்ட இடைவெளிக்குப்பின் ரஜினி நடிப்பில் வெளிவந்த பாபா படத்தை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்ததுடன் நில்லாமல் அந்தப் படம் ஓடிய பல திரையரங்குகளின் பேனர்களைக் கிழித்தும், படப்பெட்டியைக் கைபற்றியும் பாபா படத்துக்கு எதிராக பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதனால், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக தேர்தல் நேரத்தில் ரஜினி குரல் கொடுத்தார். அது பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஓரளவுக்கு பாதிப்பையும் உண்டு பண்ணியது.

வீடு தேடி வந்த மோடி

ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என கேள்வி எழுந்து கொண்டேதான் இருந்தது. எதற்கும் பதில் சொல்லாத ரஜினி, கடவுளின் பக்கம் கையைக் காட்டினார். ஆனாலும் சோ ராமசாமி, ஏ.சி. சண்முகம், கராத்தே தியாகராஜன், சைதை துரைசாமி உள்ளிட்ட பலர், அவரை அரசியலுக்கு அழைத்து வர தொடர்ந்து முயற்சித்தனர். இதற்கெல்லாம் உச்சமாக 2014 மக்களவைத் தேர்தலின்போது பாஜகாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி ரஜினியின் வீடு தேடி வந்தார். ரஜினியை ‘ரஜினிகாந்த் ஜி’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார் மோடி. அப்படியும் ரஜினி பிடி கொடுக்கவில்லை. பாரதிய ஜனதாவுக்கு தனது ஆதரவு எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில்2016-இல் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். கருணாநிதியும் உடல்நலம் குன்றிய நிலையில் 2018-ல் மறைந்தார். தமிழக அரசியல் களம் வெறிச்சோடி கிடந்த சமயத்தில், ரஜினி 2017 ஆம் ஆண்டு மே மாதம் நீண்ட காலத்துக்குப் பின் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார். அப்போது ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் கோரிக்கை எழுப்பினர். அப்போது பேசிய ரஜினி, “சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது. தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும்” என பேசினார். இதைக்கேட்டு மகிழ்ந்த துக்ளக் பத்திரிகையின் புதிய ஆசிரியரும் இந்துத்துவா கொள்கையை தமிழகத்தில் முன்னெடுத்து வரும் பத்திரிகையாளர்களில் ஒருவருமான வழக்கறிஞர் குருமூர்த்தி, ரஜினியை அரசியலுக்கு வரும்படி அழைத்தார். குருமூர்த்தி மூலம் 2016 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்பட்ட காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ரஜினிக்கு அறிமுகமானார்.

சோ இல்லாவிட்டால் என்ன...?

சோ ராமசாமிக்கு பிறகு தமிழருவி மணியனின் அரசியல் கருத்தால் ரஜினி ஈர்க்கப்பட்டார். காமராஜர் காலத்திலிருந்து அரசியலை கூர்ந்து கவனிப்பவர் என்பதால் தமிழருவி மணியன் மீது ரஜினிக்கு கூடுதல் மதிப்பு ஏற்பட்டது. தமிழருவி மணியன், வரலாறும் சட்டமும் படித்த வழக்கறிஞராகவும் ஆசிரியராகவும் பணியாற்றியவர் என்பதால், வரலாற்றிலிருந்து பல மேற்கோள்களை ரஜினிக்கு எடுத்துக்காட்டி அவரது மனதைக் கரைத்தார். தனக்குப் பிடித்த கர்நாடக முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, மூப்பனார் ஆகியோருடன் நெருக்கமாக பணியாற்றியவர் என்பதால், தமிழருவி மணியன் கூறிய அனைத்துக்கும் ரஜினி செவி சாய்த்தார்.

அதேபோல், 2009-இல் இலங்கைப் போர்க்களத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டை கண்டித்து அதிலிருந்து வெளியேறிய தமிழருவி மணியன் கண்டதுதான் காந்திய மக்கள் இயக்கம். கட்சி தொடங்கியது முதலே தமிழகத்தில் திமுக - அதிமுகவுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்க வேண்டுமென பல தலைவர்களை சந்தித்துப் பேசினார் தமிழருவி மணியன். 2014 மக்களவைத் தேர்தலில் திமுக-அதிமுக அல்லாமல் பாஜக கூட்டணி உருவாக காரணமாக இருந்தார் என்ற நிலையில், ரஜினியின் ஆன்மிக அரசியல் கருத்தாக்கம், தமிழருவி மணியனை திரும்பிப் பார்க்க வைத்தது.

ரஜினியை உடனே சந்தித்த தமிழருவி மணியன், கடந்தகால, நிகழ்கால அரசியலை பற்றி பேசினார். காந்தி, காமராஜர், அண்ணா உள்ளிட்டோரின் நூல்களைக் கொடுத்து ரஜினியை படிக்க வைத்தார். சமகால பிரச்சனகள் மீதான ரஜினியின் பார்வையில் ஓரளவுக்கு வரலாற்று அறிவும் மக்கள் மீதான நேசமும் வெளிப்பட்டது தமிழருவி மணியனுக்கு நடிகனை கடந்த ரஜினியின் அரசியல் ஆளுமையை அடையாளப்படுத்தியது. அதேபோல ரஜினிக்கும் தமிழருவி மணியனின் விளக்கங்கள் தனக்கு சோ ராமசாமி இல்லாத குறையை போக்கியது. அரசியல் களத்தில் தனக்குத் தளபதியாக தமிழருவி மணியன் இருப்பார் என ரஜினி நம்பத் தொடங்கிவிட்டார்.

ரஜினியின் சந்தேகம்

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என தீர்க்கமாக முடிவு எடுத்தாலும் தற்போதைய அரசியல் களம் அதற்கு கைகொடுக்குமா? ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியுமா? ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தது 2 கோடி முதல் 5 கோடி வரை செலவு செய்ய பணம் தேவை. அந்தப் பணத்திற்கு எங்கே செல்வது என தயங்கினார். அப்போது தமிழருவி மணியன் எம்ஜிஆர் வெற்றிபெற்ற முறையை விவரித்தார். ‘காசு கொடுத்தோ, சாதிப் பெயரைச் சொல்லியோ எம்.ஜி.ஆர். ஓட்டு வாங்கவில்லை. அவரின் ஆளுமையின் முன்னால் திமுக தோற்றுப்போனது’ என 1973 திண்டுக்கல் தேர்தலில் தான் கண்ட உண்மையைச் சொல்லி ரஜினிக்கு தெம்பூட்டினார்

பின்னர், தனது கட்சியின் சார்பில் திருச்சியில் மாநாடு நடத்தி, கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என ரஜினி சொல்வது சரி, ஆனால் முதல்வர் என்றால் அது ரஜினிதான் என அறிவித்தார் தமிழருவி மணியன். அதற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைக் கண்ட ரஜினி கட்சி தொடங்க தயாரானார்.

முடக்கிய கோரொனா

ஆனால், திடீரென பரவிய கொரோனா வைரஸ் ரஜினியின் அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள ரஜினி, அவரது உடல்நிலை காரணமாக, அவரது மருத்துவர்கள் பொது வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரித்திருந்தனர். இதனால் மக்களை சந்திக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து ரஜினி பின் வாங்க வேண்டி வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறைய ஆரம்பித்ததும் தமிழருவி மணியன், குருமூர்த்தி, ஏசி சண்முகம், அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர், ‘மக்களைச் சென்று சந்திப்பதற்கு பதிலாக, தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் தேர்தலை சந்திக்கலாம்’ என ரஜினியிடம் பேசினார்கள். ஆனால் மக்களை சந்திக்காமல் தேர்தலை சந்திக்க கூடாது என நினைத்து ரஜினி அரசியலுக்கு வர முடியாத நிலையை விவரித்தார்.

ஆனால், அடுத்து வந்த சில தினங்களில் என்ன நடந்ததோ, மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, தமிழகம் வந்துசென்ற பிறகு ஜனவரியில் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார் ரஜினி.

 அப்படி ரஜினியிடம் என்ன திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என ரஜினி தரப்பில் விசாரித்தபோது சில விஷயங்கள் தெரியவந்தன. “வரலாற்றில் எப்போதாவது உருவாகும் வெற்றிடம், தமிழக அரசியலில் இப்போது உருவாகியுள்ளது. வரலாறு தந்த வாய்ப்பை தவற விடக்கூடாது. இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. உங்களை நம்பிய மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள்” என தமிழருவி மணியன் உருக்கமாகப் பேசி ரஜினியின் கண்களைத் திறந்தார் என்றும் அவரது பேச்சைக் கேட்ட ரஜினி, மறுநாளே ரஜினி ஜனவரி 2021 கட்சி தொடங்குவதாக அறிவித்தார் என்கிறார்கள். தமிழருவி மணியனை கட்சியின் மேற்பார்வையாளராக நியமித்துள்ள ரஜினி, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவராக முதல் நாள் வரை பணிபுரிந்த அர்ஜுன மூர்த்தியை தொடங்கப் போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்திருக்கிறார்.

இந்த இருவருடனும் ஊடகங்களை சந்தித்திருக்கும் ரஜினி, “என் உயிர் போனாலும் தமிழர்களுக்காக போகட்டும்” என்று சூளைத்திருக்கிறார். ரஜினியின் இந்த தீவிர அரசியல் தொடக்கம் பல முரண்பாடுகளுடன் தொடங்கியிருந்தாலும் தமிழக அரசியல் களத்தில், அதிமுக, திமுக ஆகிய இருபெரும் அரசியல் சக்திகளுக்கு மாற்றாக மூன்றாவது சக்தி எனும் அடிப்படையில் ரஜினியின் அரசியல் வரவு பெரும் எதிர்பார்ப்புகளை உருவாகியிருப்பதை மறுக்கவே முடியாது.

அதேசமயம், 2021-ல் ரஜினியின் தொடங்கப்போகும் ரஜினியுடைய கட்சியின் கொள்கைகளும் அவரது அரசியல் வியூகங்களும் அவருக்கு வழிகாட்டும் ஆளுமைகளில் யார் யாரையெல்லாம் தமிழக வாக்காளர்கள் நம்புவார்கள், அது அவருக்கு சாதகமா பாதகமா என்பதையெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

- ரஜினி அரசியல் தொடரும்

 -4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.