கட்டுரைகள்

முந்தைய பாகத்துக்கான இணைப்பு :

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் - 4 (We are Not Alone - Part - 4)

கடந்த தொடரில், பூமியில் இருந்து தொலைக் காட்டிகள் மூலம் காலத்தை எவ்வாறு பின்னோக்கிப் பார்க்க முடிகின்றது என வினவியிருந்தோம்.

இதற்கு நம் கண்ணுக்குத் தெரியும் ஒளி (Visible Light), அகச்சிவப்புக் கதிர் (Infrared Rays), புற ஊதாக் கதிர் (Ultra Violet Rays) உட்பட அனைத்து மின்காந்தக் கதிர்களினதும் வேகம் வெற்றிடத்தில் ஒரு மாறிலி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்..

வெற்றிடத்தில் ஒளியின் வேகம் எப்போதும் 300 000 Km/h சமீபமாகும். மிகவும் திருத்தமாகச் சொன்னால், 299 792 458 m/s ஆகும். பௌதிகவியலின் மிக முக்கியமான அகில மாறிலிகளில் ஒன்றான இது C என்ற குறியீட்டால் அறியப் படுகின்றது. பிரபஞ்சவியலின் (Cosmology) தத்துவார்த்த அடிப்படையில், ஒன்றை விட்டு இன்னொன்று விலகிச் செல்லும் விதத்தில் கரும் சக்தியனால் (Dark Energy) தொடர்ந்து ஆர்முடுகச் (Acceleration) செய்யப் பட்டு வரும் அண்டங்கள் நம் கண்ணுக்குத் தெரியும் பிரபஞ்சமான (Observable Universe) இற்கு அப்பால் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் விலகிச் செல்வதாக நம்பப் படுகின்றது. இதனால் Observable Universe இற்கு அப்பால் உள்ள கூறை (Void) நாம் எப்போதும் எந்தவொரு சக்தி வாய்ந்த தொலைக் காட்டிகளாலும் பார்க்க முடியாது என்றும் கூறப்படுகின்றது.

இத்தகவலை இங்கு கூறக் காரணம் உள்ளது. விரிவடையும் பிரபஞ்சத்தில் வெளியைத் (Space) தவிர, அனைத்து சடம் (matter) அல்லது அலைகளின் (Waves) அதிகபட்ச வேகம் ஒளியின் வேகமாகும். ஒளியின் வேகத்துக்குக் குறைவான வேகத்தில் இவை நகர முடியும் ஆனால் ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியாது. மேலும் ஒளியின் வேகம் யார் சார்பாகவும் ஒரு மாறிலி என்றும் ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்புக் கொள்கை கூறுகின்றது.

எமது பூமியில் இருந்து ஹபிள் போன்ற தொலைக் காட்டிகள் மூலம், மிக மிகத் தொலைவில் நாம் அவதானிக்கும் அண்டங்கள், அல்லது நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் ஒளி ஒரு குறித்த மாறிலி வேகத்தைக் கொண்டிருப்பதால் அது அவற்றின் உடனடித் தோற்றத்தை பிரதிபலிப்பதில்லை. உதாரணமாக பூமிக்கு மிக அருகே உள்ள ப்ரொக்ஸிமா செண்டூரி என்ற நட்சத்திரத்துக்கும், பூமிக்கும் இடையேயான தூரம் 4 ஒளியாண்டுகள் என்று கூறப்படுவதன் அர்த்தம் என்னவென்றால் நாம் 4 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த நட்சத்திரத்தின் பிரகாசத்தைத் தான் இப்போது பார்க்கின்றோம் என்பதாகும். அவ்வளவு ஏன் சூரியனைக் கூட நாம் 8 நிமிடங்கள் பழையதாகத் தான் பார்க்கின்றோம்.

அண்டங்கள் ஒன்றை விட்டு இன்னொன்ரு விலகிச் செல்லும் வேக அதிகரிப்பை பின்னோக்கிக் கணிப்பதன் மூலம் தான் அவை அனைத்தும் ஒன்றாக (Singularity) இருந்து வெளிப்பட்ட பெருவெடிப்பு (Bigbang) 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாகக் கணிக்கப் பட்டுள்ளது. இன்னொரு விதமாக பூமியில் இருந்து நோக்கப் படும் மிகவும் பழமையான நட்சத்திரங்களது ஒளியைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் பிரபஞ்சம் உருவாகி 300 000 வருடங்களுக்குப் பின் வெளிப்பட்ட மிக மிகப் பழமையான ஒளியை வைத்து அதன் வயதைக் கணிப்பதாகும். இந்த பழமையான ஒளி அகில நுண்ணலை பின்புலம் (Cosmic microwave background) அல்லது CMB எனப்படுகின்றது.

எனவே பிரபஞ்சத்தின் வயதைக் கணிப்பதிலும், வான் பௌதிகவியல் கல்வியிலும், ஒளியின் இந்த தனிச் சிறப்பியல்பு இன்றியமையாததாக உள்ளது உங்களுக்குப் புரிந்திருக்கும். அடுத்ததாக நாம் ஒரு நட்சத்திரத்தின் நிறமாலையில் (Spectrum) இருந்து எவ்வாறு உயிர் வாழ்க்கைக்கான தடயங்கள் அறியப் படுகின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.

கீழே இருக்கும் புகைப் படத்தில் எமது சூரியனுக்கு நிகரான நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வரும் வெளிப்புறக் கிரகத்தின் (Exoplanet) புகைப் படமும், பூமியின் உயிர் வாயுக்கள் குறித்த நிறமாலையும் தரப்பட்டுள்ளது. உயிரியல் கையெழுத்துக்கள் (Bio Signatures) என்றழைக்கப் படும் தடயங்களை அறிய குறித்த நீல நிறக் கிரகத்தின் வளிமண்டலத்தினைத் தாண்டிச் செல்லும் ஒளி அல்லது அதில் பட்டுத் தெறிக்கும் நட்சத்திர ஒளி பகுப்பாய்வு செய்யப் படுகின்றது.

இந்த வெளிப்புறக் கிரகம் தனது வளிமண்டலத்தைத் தாண்டிச் செல்லும் ஒளியில் குறிப்பிட்ட அலை நீளம் (Wavelenghts) கொண்ட நிறங்களை உறிஞ்சி விடுகின்றது. இதனால் இக்கிரகத்தை தொலைக் காட்டியால் அவதானிக்கும் போது பின்வரும் உயிர் வாழ்க்கைக்கு ஆதரவளிக்கக் கூடிய வாயுக்கள் குறித்து அறிய முடிகின்றது. இவ்வாயுக்களில் ஆக்ஸிஜென், கார்பன் டை ஆக்ஸைடு, மெதேன் போன்றவை மிக முக்கியமானவை.

பூமியில் ஒளித்தொகுப்பு (Photosynthesizing) செய்யும் தாவரங்களில் இருக்கும் குளோரோபைல் (Chlorophyll) என்ற பதார்த்தம் சூரிய ஒளியில் இருக்கும் சிவப்பு மற்றும் நீல நிறங்களை உறிஞ்சி விடும். எனவே பூமியில் தாவரங்களது இருப்பு (Vegetation) பச்சை நிறத்தில் மேலே இருந்து பார்க்கையில் தென்படும். இது இப்படித் தான் இருக்க வேண்டும் என்றில்லை. வேறு சில தாவர இனங்களைக் கொண்டிருக்கக் கூடிய கிரகங்களில் வித்தியாசமான நிறமிகள் (Pigment) வெளிப்பட முடியும்.

உதாரணத்துக்கு Star Wars போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் காட்டப் படும் வண்ண மயமான புனைவு வெளிப்புறக் கிரகங்கள் (hypothetical exoplanets) இற்கு இணையான ஒரு கிரகத்தின் புகைப் படம் கீழே தரப்பட்டுள்ளது. இப்படத்தில் தனது ஐஸ் கட்டிகளால் ஆன நிலவில் இருந்து பார்க்கையில் தாய்க் கிரகம் எவ்வாறு தென்படும் எனக் காட்டப் படுகின்றது. மெல்லிய பர்ப்பிள் நிறத்தில் (The Lavender hue) இதன் நிறம் வெளிப் படுகின்றது.

Retinal என அழைக்கப் படும் இதன் நிறமி கூட ஒளியை வளர்சிதை மாற்ற ஆற்றலாக (Metabolic energy) பரிமாற்றம் (Convert) செய்து விடுகின்றது. பூமியின் மிக ஆரம்ப உயிரியல் வரலாற்றில் பூமியும் இது போன்ற ஒரு மாறுபட்ட ஒளியை தாரவங்களில் இருந்து ஒளித்தொகுப்பு மூலம் வெளியிட்டிருக்க முடியும் என்றும் ஊகிக்கப் படுகின்றது.

அடுத்ததாக நாசாவின் New Worlds Mission எதிர்கொள்ளும் கடினமான சவால்கள் குறித்தும் அவை எதனால் ஏற்படுகின்றன என்பது குறித்தும் பார்ப்போம்..

வெளிப்புறக் கிரகங்களை நேரடியாக கண்டறிவது மிகவும் கடினமான பணி என நாசா கூறுகின்றது. அதற்கு முக்கியமான இரு காரணங்கள் உள்ளன. முதலாவது,

வெளிப்புறக் கிரகங்கள் தமது தாய் நட்சத்திரத்துடன் (Host Star) மிக மிக அண்மித்துக் காணப்படுவது. பூமிக்கு மிக அருகே உள்ள நட்சத்திரங்கள் கூட சில ஒளி வருடங்களாவது தொலைவில் உள்ளன. இதன் அர்த்தம் என்னவென்றால், சாதாரணமாக வெளிப்புறக் கிரகங்களை அவதானிக்கும் போது நாம் குறித்த தாய் நட்சத்திரத்தில் இருந்து மிக மிக சிறிய கோணங்கள் (angles) வித்தியாசத்துக்கு அவதானிக்க நேரிடுவது. குறிப்பிட்டு சொன்னால் மில்லி ஆர்க் செக்கண்டின் 10 மடங்குகளுக்கு..

இரண்டாவது,

வெளிப்புறக் கிரகங்கள் தமது தாய் நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மிக பிரகாசம் குன்றிக் காணப்படுவது. சாதாரணமாக குறிப்பிட்ட கிரகத்தை விட தாய் நட்சத்திரம் பில்லியன் மடங்கு பிரகாசம் உடையதாக இருக்கும். எனவே இந்த நட்சத்திரத்தின் பிரகாசத்துக்கு எதிராக கிரகங்களைக் கண்டறிவது கிட்டத்தட்ட நிச்சயமற்ற ஒன்றாகவே இருந்து வந்தது.

அடுத்த தொடரில், இந்த New Worlds Mission தொடர்பான மேலதிக தகவல்களையும், மனிதனைப் போன்ற அறிவுக் கூர்மை (Intelligence) கொண்டிருக்கக் கூடிய வேற்றுக் கிரக உயிரினங்களைக் கண்டறிவது தொடர்பான தேடல் எவ்வாறு முன்னெடுக்கப் படுகின்றது என்பது குறித்த அறிமுகத்தையும் பார்ப்போம்.

நன்றி, தகவல் : நேஷனல் ஜியோகிராபிக் சஞ்சிகை, விக்கிபீடியா மற்றும் நாசா

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.