கட்டுரைகள்

தமிழக அரசியற் களத்தின் காட்சிகள் பரபரப்பாகத் தொடங்கியிருக்கின்றன. திரையில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்ட ரஜினிகாந், அரசியற்களத்தில் ஆளுமையாகவும், வேடிக்கையாகவும், வெவ்வேறு கோணங்களில் பார்க்கவும் கருத்துக்கள் பகிரப்படவும் தொடங்கியிருக்கின்றன. இது குறித்த ஒரு விரிவான பார்வையாக வரும் மாதுமையின் ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ? கட்டுரையை 4தமிழ்மீடியாவின் மாற்றுச் சிந்தனை மிக்க வாசகர்களுக்குத் சிறப்புத் தொடராகத்  தருவதில் மகிழ்வுறுகின்றோம். இத் தொடர்கட்டுரையின் இரண்டாவது பகுதி.  - 4TamilmediaTeam

ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ? பகுதி 1

ரஜினியின் டிஜிட்டல் அரசியல் !

‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் புதிதாக உடலில் பொருத்தப்பட்ட சிறுநீரகத்தை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது ஏற்றுக்கொள்ளும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள நான், மக்கள் கூட்டத்தின் நடுவே வரமுடியாத சூழ்நிலை உள்ளது. அப்படி வந்தால், கொரோனா தொற்று என்னை எளிதாக தாக்கிவிடக் கூடும் என்பதால்தான் மக்களைச் சென்று சந்திக்க முடியவில்லை.’ என்று பேசிய சில தினங்களில் மனமாற்றம் அடைந்த ரஜினிகாந்த், ‘ஜனவரியில் கட்சித் தொடங்கப் போகிறேன். என் ரசிகர்களுக்காக என் உயிரே போனாலும் கவலையில்லை. கொடுத்த வாக்கிலிருந்து என்றைக்கும் மாற மாட்டேன்’ என்று தற்போது மாற்றிக் கூறிவிட்டார்.

ரஜினியின் இந்தத் தடாலடி மனமாற்றம் கண்டதுமே அரசியல் கணக்குகள் தொடங்கிவிட்டன. அதேநேரம், “ரஜினி கட்சி தொடங்கி நேரடி அரசியலுக்கு வரப்போவதே கிடையாது. தனது படங்களைத் திரையரங்குகளில் ஓட வைப்பதற்கான ஓர் உத்தியாகவே அரசியலைத் அவர் தொட்டுக்கொள்கிறார்” என்று விமர்சித்தவர்கள் அதிகம். அத்தகைய விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கிவிட்டு, ரஜினியை உறுதியுடன் நிற்கச் செய்து, அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது எது என்பதுதான் அவரது அரசியல் எதிரிகளின் மனதைத் தற்போது குடைந்துகொண்டிருக்கும் கேள்வி.
துக்ளக் விழாவில் பேச்சு...

 2017 ஜனவரி. ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆண்டு விழா. அதில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, “தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது” என்று குறிப்பிட்டார். சோ, ஜெயலலிதா பற்றிய நினைவலைகளாகப் பத்து நிமிடங்கள் பேசிவிட்டு, நாட்டு நடப்பு பற்றி குறிப்பிட்ட அந்த ஒற்றை வரிதான் திருப்புமுனையாக அமைந்தது. ரஜினி சொன்ன அசாதாரண சூழல், மறுநாள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டமும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் நாடறிந்த விஷயம்தான். ரஜினியின் அரசியல் வருகையை விரைவுபடுத்தியது, அந்த அசாதாரண சூழல்தான். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து கவனித்துவந்த ரஜினி, அது வன்முறையில் முடிந்தபோது, “அமைதி திரும்ப வேண்டும்” என அறிக்கை விடுத்தார். அதுவரை உடல்நலக்குறைவின் காரணமாக ரசிகர்களை நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்த்து வந்த ரஜினி, ரசிகர்களைச் சந்திக்கவும் முடிவு செய்தார். தமிழகமெங்கும் உள்ள ரசிகர் மன்றத்தினரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சந்திக்க முடிவானது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தீவிர ரசிகர்களின் முழு விவரங்களும் திரட்டப்பட்டு, அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டது. 2017 முதல் 2019 வரை ரசிகர்கள் சந்திப்பைத் தொடர்ந்து நடத்தவும் திட்டமிடப்பட்டது.

அரசியல் வெற்றிடமா? அரசியல் சந்தர்ப்பவாதமா?

ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை முதல் கட்டச் சந்திப்பின்போது, “தமிழ்நாட்டில் ஆளுமைக்கான வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. கலைஞர், ஜெயலலிதா போன்ற வலுவான ஆளுமைகள் இல்லாத நிலையில் அடுத்தகட்டத் தலைவர்களான ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோரிடமிருந்து மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள்” என்று தெரிவித்தார். அப்போதுதான் முதல்வராகியிருந்த எடப்பாடி குறித்தோ, அதிமுகவிலிருந்து விலகியிருந்த ஓபிஎஸ் குறித்தோ, பின்னணியில் இருந்து இயங்கியதாகக் கூறப்பட்ட சசிகலா, தினகரன் குறித்தோ அவர் எதுவும் குறிப்பிடவில்லை. தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசும்போது, “சிஸ்டம் சரியில்லை. போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்” என்றார். ஆனால், ‘கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருந்தபோது அரசியல் களம் காணாமல், அவர்கள் இல்லாதபோது ரஜினி அரசியலுக்கு வருவது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்’ என்ற தமிழக அரசியல் நடுநிலையாளர்களின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார்.

ஆறு மாதங்களுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக ரஜினி தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தபோது, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் சற்று மாறியிருந்தது. ஆர்.கே.நகரில் தினகரன் பெற்ற வெற்றி, அப்போது அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த அதிருப்தி, வானவில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும் திமுக டெபாசிட் இழந்தது ஆகிய நிகழ்வுகள் ரஜினியை யோசிக்க வைத்தன. தமிழ்நாட்டு அரசியலில், தான் களம் காண வேண்டிய தருணம் இதுதான் என்று அதன் அவசியத்தை உணர்ந்து அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.

தன்னை நம்புகிறாரா ரஜினி?

1996 சட்டபேரவைத் தேர்தல், 1998 மக்களவைத் தேர்தல், 2004 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் ரஜினியின் ‘வாய்ஸ்’ தமிழ்நாட்டு அரசியலில் மாற்றங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தது. ஏதாவதொரு அரசியல் கட்சியை ரஜினி ஆதரிப்பார், கூட்டணியில் சேர்வார் என்றெல்லாம் வந்த ஊகங்களை மறுத்து, “தனிக்கட்சிதான். சட்டபேரவைத் தேர்தல்தான் இலக்கு. 234 தொகுதிகளிலும் போட்டி” என்பதைத் தெளிவாக அறிவித்தார் ரஜினி.

தனது புகழையும் செல்வாக்கையும் தீவிரமாக நம்பும் ரஜினியின் ரஜினியின் மிகப் பெரிய ராஜதந்திர முடிவு இது என்றாலும் ‘தமிழக மக்களை ரஜினி குறைத்து மதிப்பிடுகிறார்.’ என்ற விமர்சனமும் ரஜினி மீது வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரஜினியைக் கூர்ந்து அவதானித்து வருபவர்கள், ‘அரசியல் கட்சிகளிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வது. அதன் மூலம் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவது. இதுதான் ரஜினியின் எண்ணம். ரஜினி கட்சி தொடங்கினால் பிற கட்சிகளில் உள்ள அவரது ரசிகர்கள் அந்தந்த கட்சிகளைவிட்டு விலகி அவரது கட்சியில் சேரக்கூடும்’ என்கிறார்கள். இதன்படி பார்த்தால், ரஜினியை நம்பி பலர் அரசியலுக்குப் பலர் புதிதாக வரக்கூடும். இவையெல்லாம் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுவிட்ட அரசியல் கட்சிகளை எரிச்சலூட்டும்.

ஆன்மிக அரசியல்... நடுநிலை அரசியலா?

இன்னொரு பக்கம், ரஜினியை அரசியல் களத்துக்குள் இயக்குவது பாஜகவா என்ற பெரும் சந்தேகங்கள் கிளம்பியிருக்கின்றன. அதை உறுதிப்படுத்தும்விதமாக எந்த நிபந்தனையுமின்றி ரஜினியின் ஒவ்வொரு அரசியல் அசைவையும் பாஜக ஆதரித்தது. ரஜினி முன்வைக்கும் ஆன்மிக அரசியலில் தங்களுக்கு உடன்பாடு உண்டு என்றார்கள். இதுவே ரஜினியை, பாஜகவின் ‘பி டீம்’ என்று பலரையும் சொல்ல வைத்தது. ‘‘எனக்குப் பின்னால் பாஜக இல்லை’’ என்று ரஜினி பல முறை விளக்கம் தர வேண்டியிருந்தது. “எத்தனை முறை விளக்கம் தந்தாலும் என்னை பாஜகவின் ஆள் என்பார்கள். அது பற்றி எனக்குக் கவலையில்லை” என்றார் ரஜினி. 2019 மக்களவைத் தேர்தலில், “எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை” என்று முன்கூட்டியே அறிவித்த ரஜினி, தேர்தல் முடிவுகள் வந்ததும் முதல் ஆளாகத் தன்னுடைய விமர்சனத்தையும் முன்வைத்தார். மோடியோடு ராகுல் காந்தியையும் பாராட்டி நடுநிலையாக இருந்து கருத்து தெரிவித்ததன் மூலம், தன்னுடைய அரசியல் அந்தஸ்தை உயர்த்திக்கொண்டார் ரஜினி. ஆனால், தற்போது பாஜகாவின் அர்ஜுனமூர்த்தியை தனது கட்சியிம் மாநில ஒருங்கிணைப்பாளராக அவர் நியமித்திருப்பதன் மூலம், இந்த நியமனத்தைச் செய்திருப்பது ரஜினியா அல்லது பாஜகவா என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழும்பியிருக்கிறது.

திரையுலகில் வெற்றிகரமான சூப்பர் ஸ்டாராக நாற்பது ஆண்டுகளைக் கடந்திருக்கும் ரஜினி, தன்னுடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் வெற்றிகரமாக மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. தனிக்கட்சி தொடங்கினால் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும்; அனைவரின் வரவேற்பைப் பெற வேண்டும் என்று நினைக்கிறார். எந்தத் துறையாக இருந்தாலும் புகழ்பெற்ற சாதனையாளர்களின் எதிர்பார்ப்பு இப்படியாகத்தான் இருக்கும். அதனால்தான் அரசியலில் பக்குவமும் ஆழமான அறிவும் கொண்டவர்களைக் கட்சியைக் கட்டியெழுப்பும் பணியில் இணைத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

அதேபோல், நிஜ ரஜினி, ஆன்மிகத்தில் திளைத்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நாத்திகத்துக்கு எதிராக நின்றவர் இல்லை. திரையில் ‘நிழல்’ ரஜினிகூட கடவுள் நம்பிக்கை குறித்த விஷயங்களில் கவனமாக இருந்தார். தன்னுடைய ‘பாபா’ படத்தின் மூலமாக ரஜினி வெளிக்காட்டிய ஆன்மிகமும் தமிழுக்குப் புதியது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நடுநிலையில் நின்று கருத்து சொல்வதன் மூலம், தான் என்றும் மக்கள் பக்கம் என்பதை வெளிப்படுத்தி வருகிறார் ரஜினி. ஆனால் ரஜினியின் இந்த ஆன்மிக அரசியலை தமிழக மக்களை அவர் சந்திக்காமலேயே எப்படி சாத்தியப்படுத்த முடியும் என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி. ரஜினி உண்மையில் மக்களைச் சந்திபாரா, அல்லது அல்லது டிவி திரை வழியாக மட்டும் மக்களின் பேசுவாரா? அப்படி பேசினால் ரஜினியின் இந்த டிஜிட்டல் அரசியல் எடுபடுமா? அடுத்த பகுதியில் அலசுவோம்.

- ரஜினி அரசியல் தொடரும்

 -4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.