கட்டுரைகள்

தமிழக அரசியற் களத்தின் காட்சிகள் பரபரப்பாகத் தொடங்கியிருக்கின்றன. திரையில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்ட ரஜினிகாந், அரசியற்களத்தில் ஆளுமையாகவும், வேடிக்கையாகவும், வெவ்வேறு கோணங்களில் பார்க்கவும் கருத்துக்கள் பகிரப்படவும் தொடங்கியிருக்கின்றன. இது குறித்த ஒரு விரிவான பார்வையாக வரும் மாதுமையின் ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ? கட்டுரையை 4தமிழ்மீடியாவின் மாற்றுச் சிந்தனை மிக்க வாசகர்களுக்குத் சிறப்புத் தொடராகத்  தருவதில் மகிழ்வுறுகின்றோம். இத் தொடர்கட்டுரையின் நான்காவது பகுதி ரஜினியின் மீது ‘இரண்டு’ முக்கிய விமர்சனங்கள் ! - 4TamilmediaTeam

ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ? பகுதி 1

ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ? - பகுதி 2

திமுகவை உடைக்கிறார் ரஜினிகாந்த் ? - ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் : பகுதி 3

ரஜினியின் மீது ‘இரண்டு’ முக்கிய விமர்சனங்கள் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்குகிறார். அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால், ஜனவரில் எந்த தேதியில் தொடங்கப் போகிறார் என்பதில் இன்னமும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. காரணம், ஐதராபாத்தில் நடந்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பில் பணியாற்றிவந்த எட்டு திரைப்பட தொழிலாளர்களுக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சூப்பர் ஸ்டாருக்கும் கோவிட் தொற்று உள்ளதா என சோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என்று வந்துவிட்டது.

ஆனால், ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் ஒரு கட்டுப்பாட்டில் இல்லை. ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்ததால் படப்பிடிப்பில் அவருக்கு நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும். அதனால்தான் படப்பிடிப்பைத் தொடரமுடியாமல் ரத்து செய்யப்பட்டதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்துக்கு கால் முட்டிகள் மற்றும் தோள்பட்டைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன் ரத்தக்கொதிப்பு கட்டுப்பாட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் (27 11 2020) இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் இதையடுத்து 29ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்புகிறார்.

B Team

டிசம்பர் 31ஆம் தேதி கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிட இருக்கிறார். கட்சியின் பெயர், கொள்கைகள் ஆகியவற்றை இறுதி செய்வதில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள குழப்பங்களும், எங்கே தொடங்குவது என்பதில் அவருக்கு தரப்படும் ஆலோசனைகளும் தான் ரஜினியை இரத்தக் கொதிப்பில் தள்ளி இருப்பதாக ரஜினியின் எதிர்தரப்பினர் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த வகை கிண்டல் ரஜினிக்கு புதிதல்ல; இதுபோல் பல பகடிகளை அவர் சந்தித்து மௌனமாக கடந்து வந்திருக்கிறார். ஆனால் அவர் மீது வைக்கப்பட்ட வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் விமர்சனம், ‘ரஜினியின் கட்சி பாஜகவின் B Team’ என்பது. இந்த விமர்சனத்தில் ரஜினி இதுவரை விளக்கமோ மறுப்போ அளிக்கவில்லை. ரஜினிக்கு தேர்தல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை பி டீம் விமர்சனம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் ‘ரஜினி அறிவித்த ஆன்மீக அரசியல் அனைத்து தரப்பு மக்களுக்குமானது’ என்று அவர் குறிப்பிட்டாலும் தற்போது அவருடன் இணைந்திருக்கும் அர்ஜுன மூர்த்தி பாஜகவின் நியமனம் என்று ரஜினியை விமர்சிப்பவர்கள் கூறிவருகிறார்கள். இத்தகைய விமர்சனத்தில் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது.

ஏனென்றால், ரஜினி டிசம்பர் 31-ஆம் தேதி கட்சியை குறித்த அறிவிப்பை இறுதி செய்வேன் என்று பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியபோது தனது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்று அர்ஜுனன் மூர்த்தியை ஊடகத்தினருக்கு அறிமுகப்படுத்தினார். அந்த அர்ஜுன மூர்த்தி அப்போது வரை பாஜகவின் தொழில் நுட்பத் தகவல் பிரிவின் மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்தார். ரஜினி அவரை தனது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்று அறிவித்த தினத்துக்கு மறுநாள்தான் பாஜகவிலிருந்து அவர் அதிகாரபூர்வமாக விடுவிக்கப்பட்டார். இது அறிவார்ந்த இளைய தலைமுறை வாக்காளர்களை தமிழகத்தில் யோசிக்க வைத்துள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கத்தின் ஆட்சியைக் குறித்து ரஜினி இதுவரை விமர்சித்ததில்லை என்ற நிலையில், அர்ஜுனமூர்த்தி இணைந்தது தமிழக இளம் வாக்காளர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. அதேசமயம் அர்ஜுன மூர்த்தி விவகாரத்தை கிளற வேண்டாம் என்று பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்கு ரஜினியின் மக்கள் தொடர்பாளர் தரப்பிலிருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அர்ஜுன மூர்த்தி விவகாரம் அப்படியே அமுங்கிக் கிடந்தாலும் தேர்தல் நெருங்க நெருங்க, ரஜினியின் அரசியல் எதிரிகளால் அது கிளரப்படும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.
அர்ஜுன மூர்த்தி நியமனம் என்பது ரஜினியின் முடிவாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் தமிழ்நாட்டின் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

கட்சி அரசியலில் தனக்கு வழிகாட்ட கூடியவர்கள் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழருவி மணியன், போன்றவர்களை ரஜினி குறிப்பிட்டு வந்தார். இந்த இருவரைத் தவிர, அரசியலில் நிபுணத்துவம் பெற்ற பலர் ரஜினிக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். ஏன், திமுக, அதிமுகவிலேயே இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது பாஜகவின் அர்ஜுன மூர்த்தி, இவர் மாநில அளவில் முக்கிய பொறுப்பில் நியமித்தது ஏன் என்று மாற்று ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் ரஜினி ‘அர்ஜுன மூர்த்திக்கு கிடைத்தது தனது பாக்கியம்’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது பி டீம் விமர்சனம் செய்யப்படும் அதேநேரம் ‘மூன்று மாதத்தில் முதல்வர் ஆவது எப்படி?’ என்ற விமர்சனமும் ரஜினி மீது வைக்கப்பட்டு வருகிறது.

மூன்று மாதக் கட்சி!

பாஜகவின் பி டீம் விமர்சனம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் கட்சி தொடங்குவதற்கு முழுமூச்சாக ரஜினியின் டீம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. ரஜினி மதுரையில் கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. மதுரையில் அவருக்கு முதல் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகிய இருவரும் மதுரையில் கட்சி தொடங்கி உள்ளனர். அவர்களைப்போல மதுரையில் கட்சி தொடங்குவதே பொருத்தமாக இருக்கும் என்று ரஜினி நினைப்பதாக அவரது மக்கள் தொடர்பாளர் வட்டாரம் தெரிவிக்கிறது. எதற்கும் இருக்கட்டும் என்று, மதுரை விமான நிலையம் அருகே ஒரு திறந்தவெளி மைதானம் ஆறு மாத குத்தகைக்குப் பெறப்பட்டு அந்த இடத்தில் மாநாடு மாதிரி பிரம்மாண்ட கூட்டம் நடத்த அந்த மைதானத்தில் புல் பூண்டுகளை அகற்றும் பணி முடிவடைந்திருப்பதாக தெரியவருகிறது.

ஆனால் கட்சி தொடங்கும் தேதி விஷயத்தில் ரஜினி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. தமிழ் மாதமான தை 1-ஆம் தேதியான பொங்கல் பண்டிகை அன்று கட்சி தொடங்க உள்ளதாக ஒரு தரப்பும், ஜனவரி 17-ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்க உள்ளதாக ஒரு தரப்பும் ஜனவரி 20 ஆம் தேதி அல்லது 24 ஆம் தேதி கட்சி தொடங்க உள்ளதாக வேறு ஒரு தரப்பும் கூறிவருகின்றனர்.

தற்போது புதிதாக ஒரு தரப்பு ஜனவரி 28ஆம் தேதி தைப்பூச தினத்தில் கட்சி தொடங்க ரஜினி முடிவு எடுத்திருக்கிறார் என்கிறது. டிசம்பர் 31-ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்பதில் என்ற மாற்றமும் இல்லை என்கிறார்கள். அதற்குப் பிறகுதான் ரஜினி கட்சியின் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கும். ஏப்ரல் இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தால் 3 மாதத்தில் தேர்தல் பணிகளை முடிக்க வேண்டும். மூன்று மாதங்களில் தேர்தல் அறிக்கை, வேட்பாளர் அறிமுகம் உள்ளிட்ட தேர்வு பிரச்சாரம் ஆகியவற்றை நடத்தி முடிக்க வேண்டும். அப்படியிருக்கும்போது மூன்று மாதமே ஆன கட்சியை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

1996-ல் இருந்து பிரஸ்மீட் அரசியல் செய்து வரும் ரஜினி, காவிரிப் பிரச்சினையில் ஒருமுறை உண்ணாவிரதம் இருந்ததைத் தவிர, வேறு மக்கள் பிரச்சினைகள் எதிலும் கருத்தோ, களமாடலோ இல்லாமல், சினிமாவில் கிடைத்த புகழ் வெளிச்சத்தை மட்டுமே வைத்துக்கொண்டு 3 மாதத்தில் ரஜினியால் முதல்வராக முடியுமா, தமிழகத்தில் அது சாத்தியமா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஆக நினைப்பது தூய்மைவாதம் பேசும் ரஜினிக்கு அரசியல் அறமாகப் படுகிறதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆக இதை வைத்தும் ரஜினி தற்போது பகடி செய்யப்பட்டு வருகிறார்.. இந்த இரண்டு விமர்சனங்களையும் கூட ரஜினி கடந்து வந்துவிட முடியும்.. ஆனால், ரஜினி கட்சி தொடங்கியதும் அவர் ‘நடுநிலை’யில் நின்று கருத்து சொல்ல வேண்டும். இதுவரை மக்கள் பிரச்சினைகளில் துணிந்து வாய் திறக்காத ரஜினி, அரசியலில் நுழைந்ததும் அனைத்துப் பிரச்சினைகளிலும் கருத்து சொல்லியே ஆக வேண்டும்... ரஜினியில் சார்பு நிலை அப்போது வெளிப்பட்டுவிடும்.. கருத்து சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் ரஜினியின் திட்டம்தான் என்ன? அடுத்து அலசுவோம்..

- ரஜினி அரசியல் தொடரும்

 -4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் 'விலாத்தி ஷராப்' (Vilayai Sharaabt) யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இத்தாலியில் பயண அனுபவங்களில் நாம் காண முடியும் முக்கிய அம்சம் விதவிதமான விளம்பரத் தட்டிகள். ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் மிக இத்தாலியில் அதிகமாக நிறுவப்பட்டடிருக்கும் பிரமாண்டமான நிரந்தர விளம்பரத் தட்டிகளை விடவும், பெரும் ஊர்த்திகளில் நிறுவப்பட்ட நகரக் கூடிய தட்டிகளையும் கூடக் காணலாம்.

கடந்த தொடரில் கருந்துளைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் மற்றும் தோற்றம் என்பவை குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன.

தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.