கட்டுரைகள்

நிலவு குறித்து அங்கு சென்று ஆய்வு செய்ய நினைக்கும் வானியலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனப் புதிய ஆய்வொன்றில் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஏனெனில் முன்பு கணிக்கப் பட்டதை விட 3 மடங்கு மிக அதிகமான விண்கற்கள் நிலவின் தரையுடன் தினசரி மோதி வருவதாகவும் இதனால் ஒவ்வொரு வருடமும் நிலவின் தரை மேற்பரப்பில் 180 புதிய பாரிய குழிகள் தோன்றுவதாகவும் கண்டறியப் பட்டுள்ளதாக குறித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவின் தரையில் ஏற்பட்டு வரும் இந்த புதிய குழிகளின் காரணமாக ஒவ்வொரு 81 000 வருடத்துக்கும் அதன் தரை மேற்பரப்பு முற்றாகப் புதிதாக மாறி விடும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இப்புதிய தகவல் காரணமாக நிலவின் வயது குறித்து ஏற்கனவே கணித்துள்ள வேற்றுக்கிரக புவியியலாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அதாவது நிலவின் வயது குறித்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கணிப்பிட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.

மேலும் நிலவின் தரையில் இறங்கி ஆய்வு செய்ய நினைக்கும் வானியலாளர்கள் நிலவை முன்பை  விட 3 மடங்கு அதிகமாகத் தாக்கி வரும் விண்கற்களிடம் இருந்து  தம்மைப் பாதுகாத்துக் கொள்வதும் அவசியம் எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு முதல் நிலவின் தரையைக் கண்காணித்துப் படம் பிடித்து வரும் நாசாவின் LROC என்ற செய்மதியின் மூலமே இக்கண்டுபிடிப்பு நிகழ்த்தப் பட்டுள்ளது. நிலவுக்கு நிகராக பூமியை நோக்கியும் ஒவ்வொரு வருடமும்  சிறியளவு விண்கற்கள் தாக்க வருவதும் நிஜமே என்ற போதும் நிலவில் இல்லாத ஆனால் பூமியிலுள்ள மிகவும் அடர்த்தியான வளிமண்டலம் குறித்த விண்கற்களைத் தடுத்து தரையை நெருங்கும் முன்னமே தீப்பற்றி அழித்து விடும் என்பதால் பூமி பாதுகாக்கப் படுவதாக விளக்கம் தரப்பட்டுள்ளது.

தகவல்: Mail Online

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்