கட்டுரைகள்
Typography

ஐரோப்பிய யூனியனின் ESA விண்வெளி ஆய்வு மையமும் ரஷ்யாவின் ROSCOSMOS விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றதா என்பதை அறிய ஆக்டோபர் 14 ஆம் திகதி விண்ணுக்கு ஸ்கியாபரெல்லி என்ற விண் ஓடம் அடங்கிய செய்மதியை அனுப்பி இருந்தன.

 இந்த செய்மதி செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை அடைந்து அதன் தரையை நோக்கி பாரசூட் மூலம் ஸ்கியாபரெல்லி ஓடத்தை இறக்கியதுடன் அதன் Thruster எனப்படும் உந்து விசைப் பாகம் இயங்கத் தொடங்கியது வரைக்குமே தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. புதன்கிழமை ஐரோப்பிய நேரப்படி காலை 10:48 இற்கு இதன் தகவல் துண்டிக்கப் பட்டு விட்டதால் இந்த விண் ஒடமும் அதில் இருந்த ரோபோவும் செவ்வாய்க் கிரகத்தின் தரையில் வேகமாக மோதி பழுதடைந்திருக்குமோ என அஞ்சப்படுகின்றது.

8 அடி அகலமான குறித்த விண் ஓடம் முற்றாக செயல் இழந்து விட்டது என்று உறுதியாகக் கூற முடியாது எனவும் வேறு காரணங்களால் தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டிருக்கலாம் எனவும் ESA அறிவித்துள்ளது. ஸ்கியாபரெல்லி (Schiaparelli) இன் செயற்திட்டம் வெற்றி அடைந்தால் அது ESA இன் முதல் வெற்றிகரமான செவ்வாய்க்கான விண்கலமாகும். தோல்வியடைந்தால் அது ரஷ்யாவின் 7ஆவது தோல்வியடைந்த செவ்வாய்க்கான செயற்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் செவ்வாயின் தரைக்கு இதுவரை 18 தடவைகள் விண் ஓடங்கள் மற்றும் ரோபோக்களை அனுப்பி இருந்தன. இவற்றில் வெற்றிகரமானவை வெறும் 8 செயற்திட்டங்களே ஆகும். 2003 இல் ESA செவ்வாய்க்கு அனுப்பியிருந்த ஓடமும் தோல்வி அடைந்திருந்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS