கட்டுரைகள்
Typography

கடந்த இரு தசாப்தங்களாக எமது பிரபஞ்சம் அதிகரிக்கும் வேகத்தில் அதாவது ஆர்முடுகலில் விரிவடைந்து கொண்டிருப்பதாகவே வானியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு வந்தது. மேலும் பிரபஞ்சம் விரிவடையும் வேகத்தை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கும் மர்மமான சக்திக்கு கரும் சக்தி (Dark energy)என்றும் பெயரிடப் பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்திய புதிய ஆய்வின் பிரகாரம் பிரபஞ்சம் விரிவடையும் வேகம் ஒரு மாறிலி (constant) என்றும் இதற்கு கரும் சக்தியின் தேவை கிடையாது என்றும் வானியலாளர்கள் கூறுகின்றனர். முன்னதாக 1990 ஆம் ஆண்டு மும்மொழியப் பட்ட கரும் சக்தி மற்றும் பிரபஞ்சத்தின் ஆர்முடுகல் விரிவு போன்றன தற்போதைய பிரபஞ்சவியலின் (Cosmology) ஏற்றுக்கொள்ளப் பட்ட மாதிரியாக (Standard Model) இருந்து வந்தது. இக்கண்டுபிடிப்புக்கு 1990 ஆம் ஆண்டின் பௌதிகவியலுக்கான நோபல் பரிசும் கிடைக்கப் பெற்றிருந்தது. ஆனால் தற்போது இக்கண்டுபிடிப்பு தவறானது என நவீன பௌதிகவியலாளர்களின் குழு ஒன்ரு கூறுகின்றது.

சமீபத்தில் ஹபிள் (Hubble) தொலைக்காட்டியால் அவதானிக்கப் பட்ட 740 ஆவது வகை சூப்பர் நோவா (supernovae) இன் மீதான ஆய்வின் மூலமும் CERN இலுள்ள LHC (Large Hedron Collider) என்ற நுண் துணிக்கை முடுக்கி ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளின் முடிவின் பிரகாரமும் இந்த புதிய முடிவுக்கு வான் பௌதிகவியலாளர்கள் வந்துள்ளனர். இப்புதிய கல்வி முன்னையதை விட 10 மடங்கு பெரியது என்றும் கூறப்படுகின்றது. 80 வருடங்களுக்கு முன்னதாகக் கட்டமைக்கப் பட்ட தத்துவார்த்த மாதிரி (theoretical model) மிக அளவுக்கு மீறி இலகுவாக்கப் பட்டதன் விளைவாகவே கரும் சக்தி  கோட்பாடு எழுந்தது என்றும் இந்த பிரபஞ்சவியல் மாதிரி (Cosmological model) உறுதியானது அல்ல என்றும் இன்றைய மனித பார்வை வீச்சுக்கு உட்பட்ட பிரபஞ்சத்தின் (Observable universe) முப்பரிமாண (3D) கட்டமைப்பை வடிவமைத்துள்ள பௌதிகவியலாளர்கள் வாதம் செய்துள்ளனர்.

இந்த புதிய வாதத்தின் பின்னணியிலும் பிரபஞ்சத்தில் வானியலாளர்களால் விளக்கம் அளிக்கப் பட முடியாத வித்தியாசமான அல்லது மர்மமான நிகழ்வுகளின் பின்னணியில் கரும் சக்தியின் தொழிற்பாடு இருக்கலாம் என்பதால் அதன் வெளிப்பாட்டை மறுக்க முடியாது என்பதில் பௌதிகவியலாளர்கள் உடன் படுகின்றனர்.
முன்னதாக ஆர்முடுகி வரும் பிரபஞ்சத்துக்கான ஆதாரமாகத் திகழ்ந்த CMB எனப்படும் பிரபஞ்ச பின்புல கதிர்ப்பு (Cosmic microwave background) தற்போது கரும் சக்தியால் பாதிக்கப் படுவதில்லை என்றும் கூற முடியும் எனவும் இந்தக் கருதுகோள் ஆதார அடிப்படையற்ற ஆனால் ஊகிக்கப் பட்ட ஒன்றே என்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். CMB கதிர்ப்பு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ப்ளாங்க் அவதான நிலையத்தில் ஆய்வு செய்யப் பட்டதன் பின்னர் தான் அது Big Bang நிகழ்ந்த பின் வெளியாகி மாற்றமடையாத கதிர்ப்பு என்றும் கரும் பொருள் மற்றும் கரும்  சக்தி என்பவற்றின் இருப்புக்கான ஆதாரம் என்றும் ஊர்ஜிதமாகி இருந்தது.

நிகழ்காலத்தில்  வெளிப்படும் CMB கதிரானது Big Bang நிகழ்ந்து 400 000 வருடங்களுக்குப் பிறகு நம் பிரபஞ்சம் இளமையாக இருக்கும் போது உற்பத்தியானது எனப்படுகின்றது. இதன் அடிப்படையில் நிகழ்கால Cosmology இனால் ஏற்றுக் கொள்ளப் பட்ட மாதிரியில் கரும் சக்திக்கும், கரும் பொருளுக்கும் இடையேயான விசை காரணமாகவே பிரபஞ்சத்தின் பரிணாமம் உந்தப் பட்டு வருகின்றது எனப்படுகின்றது. மேலும் கரும் பொருளின் (Dark matter) ஈர்ப்பு விசை பிரபஞ்சத்தின் விரிவை மெதுவாக்கி வரும் அதேவேளையில் எதிர்த் திசையில் கரும் சக்தியின் விசை அதனை விரைவாக்கி வருகின்றது என்றும் கருதப் படுகின்றது.

இந்நிலையில் CMB இன் வெளிப்பாடு மூலம் நம் பிரபஞ்சம் ஒரு  கட்டத்தில் ஆர்முடுகும் வேகத்தில் விரிவாகி வந்திருக்கலாம் என்று கருதவும் இடமுண்டு என வானியலாளர்கள் கூறுகின்றனர்.  எனினும் இதற்குச் சான்று இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ESA விரைவில் அமைக்கவுள்ள மிக அதிக உணர்வுதிறன் கொண்ட லேசர் கொம்ப் (Laser comb) எனும் பாரிய தொலைக்காட்டி மூலம் தொடர்ந்து 10 - 15 வருடங்களுக்கு நம் பிரபஞ்சம் விரிவடையும் வேகம் மாறிலியா அல்லது ஆர்முடுகி வருகின்றதா என்பதைக் கண்டறியவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் : Mail Online

http://www.dailymail.co.uk/sciencetech/article-3861014/The-universe-NOT-expanding-Controversial-new-study-claims-dark-energy-theory-shaky.html


- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS