கட்டுரைகள்
Typography

எமது புவியியல் வரலாற்றில் பாரிய உயிரின அழிவுகள் அவ்வப்போது நிகழ்ந்து வந்துள்ளன. இதுவரை புவியியல் வரலாற்றில் ஏற்பட்ட பாரிய உயிரின அழிவுகளில் டைனோசர்களின் அழிவையும் சேர்த்து 5 முறை நிகழ்ந்துள்ளன.

 

இவை அனைத்தும் இயற்கையால் ஏற்பட்ட உயிரின அழிவாகும். ஆனால் புவியியல் வரலாற்றில் முதன் முறையாக மனித இனத்தின் செயற்பாடு காரணமாக இன்னும் 20 வருடங்களில் அடுத்த பாரிய உயிரின அழிவு ஏற்படவுள்ளதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் 20 வருடங்களில் நாம் முறையான நடவடிக்கை எடுக்காவிடில் பூமியிலுள்ள உயிரின வகைகளில் 3/4 பங்கு முற்றாக அழிந்து விடும் எனப்படுகின்றது. 

மனித இனம் சுவட்டு எரிபொருளைப் பாவித்து வாகனங்களையும் தொழிற்சாலைகளையும் இயக்குவதால் வெளியாகும் கார்பன் வாயு புவி வெப்பம் அதிகரிக்கக் காரணமாகின்றது. இதனால் வட தென் துருவங்களில் பனிப் பிரதேசங்களில் வாழும் உயிரினங்கள் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளன. 

மிகப் பெரியளவு நிலத்தை பயிர்ச் செய்கைக்கும் பாதைகளுக்கும் மனித இனம் பயன் படுத்துவதுடன் எண்ணற்ற நோய்களை பிற உயிரினங்களுக்கு அளித்து வருகின்றது. இதைவிட உணவுக்காகவும் அலங்காரப் பொருட்களுக்காகவும் அதிக எண்ணிக்கை விலங்குகள் கொல்லப் பட்டு வருகின்றன.

உலகிலுள்ள சமுத்திரங்களில் அளவு கடந்த மீன் இனங்கள் வேட்டையாடப் படும் அதே நேரம் அவற்றுக்கு ஒவ்வாத பிளாஸ்டிக் அதிகளவில் கடல்களில் திணிக்கப் பட்டும் வருகின்றது. 2050 ஆம் ஆண்டளவில் உலகில் உள்ள சமுத்திரங்களில் வாழும் மீன்களின் நிறைக்கு நிகரான பிளாஸ்டிக் அவற்றில் கலந்து விடும் எனவும் கணிக்கப் பட்டுள்ளது. WWF எனப்படும் உலக வனவிலங்கு நிதியம் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 100 வருடங்களில் பறவைகள், மீன்கள், பூச்சியினங்கள், ஊர்வன மற்றும் பாலூட்டிகள் அடங்கலான சுமார் 200 வகை பாரிய உயிரினங்கள் ஏற்கனவே அழிவைச் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS