கட்டுரைகள்
Typography

பரதத்தின் பிதாவாகிய பரமன் காலடியில் பிறந்தது பரதம். ப ர த ம் (பா ர த ம்), ஆன்மாக்களை படைத்த ஆ நந்தன் ஆனந்தன் ஆகிய சத்தியன் உண்மையானவன் சிவன் நன்மை அளிக்கின்றவன் ஆகிய சுந்தரன் அழகான ஒப்புயர்வற்றவன் ஆகிய நடராஜன் உயிர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஆனந்த தாண்டவம் ஆடி உலகை ஆட்டுவித்தார்.

முழுமுதற்பொருளான உலகின் கருத்தாவாகிய பரப்பிரம்மம் ஈசன் ஐந்தொழிலையும் ஆற்றுவிக்க என அருவமாய் இருந்தவர், உருவமாகி அருவுருவமா மாயும் தோன்றி திருவிளையாடல்கள் புரிபவர். அவர் வழிவந்த நாட்டியம். அவர் ஆட, நந்தி தேவரும் ஆட பூதகணங்களும் ஆட உயிர்கள் உலகில் தோன்றி நடமாட உலகம் அசைவுறத்தொடங்கியது. மோனத்தவத்தில் இருக்கும் ஈசன் ஆனந்த தாண்டவமும், உருத்திரதாண்டவமும் பரதமும் பலவாகி ஆடி எம்மை ஆட்டுவித்தார்.
 
அப்படி நடராஜனாக நடனத்தின் தலைவனாக உயிர்களை மகிழ்வித்து அவர்கள் உய்யும் வகை திருவிளையாடல்கள் பல புரிய என நடனமாடினார். அப்படி ஆடப்பெற்றதே ஆடவல்லானின் பரதம் எனும் கலையாகும். ஆய கலைகள் அறுபத்து நான்கு ஆகும். அதில் இப்பரதக்கலை முக்கியத்துவம் வாய்ந்தது. பல்லவி, ராகம், தாளம் இணைந்தது பரதம்; இந் நாட்டியக்கலை உடலுக்கும் உள்ளத்துக்கும் இதம் தருவது. மனதை அமைதிப் படுத்த வல்லது. இதைக் கற்று ஆடுபவர் பார்ப்பவரை ஆட்டுவிப்பார். எம்பிரான் ஈசன் திருவிளையாடல் எப்படி புரிந்து நடனமாடி உயிர்களை மகிழ்வித்து உய்வித்தாரோ, அவ்வாறே பரதநாட்டியம் மயில் ஆடியது போல் ஆடி எம்மையும் தலை அசைத்து இசைக்கு ஏற்ப தாளம் இட்டு ஆட்டுவிப்பார். பார்த்ததும் பரவசம், ஆச்சரியம், அற்புதம் என எல்லாவகை உணர்ச்சியிலும் எம்மை மகிழவைத்து புன்சிரிப்புடன் ஆடுவர்.


 இப்படி ஆடிய நடன மயில்களை பார்த்து பரவசம் அடைந்தது, எனது மறக்கமுடியாத நிகழ்வாகும். வாழ்நாளில் எத்தனையோ காட்சிகளை அவலங்களை அல்லல்களை பார்த்து சலித்து போய் இருந்த எம்மவர்க்கு இரண்டாயிரத்து பதினாறு ஆண்டிற்கான இலங்கை "நாட்டிய மயில்" விருதினை பெறுவதற்காக மூன்று நடன போட்டியாளர்கள் ஆடிய நாட்டிய நிகழ்வில் பார்வையாளர்களாய் பங்கு பற்றிய அனைவருமே இரசித்தனர். கண்ணுக்கு விருந்தாய் அசைவும், செவிக்கு விருந்தாய் இசையும், மெய்யுக்கு விருந்தாய் பரவச உணர்வும் வாய்க்கு விருந்தாய் எமை மறந்து பாடவும், உயிர் மூச்சு விருந்தாய் சுவாசித்து எமை மறந்து இரசித்தோம். இப்படி ஐம்பொறிகளும் நாட்டியத்தில் கட்டுப்பட நவரசங்களையும், பரதத்தில் நன்கு புரியும்படி மும்மயில்களும் நாட்டிய பாவத்தில் மிளிரச் செய்தனர்.


கடந்த மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் நாட்டிய போட்டியாளர்களை பராட்டி சிறப்பு விருது வழங்க பாரதத்தின் பெருமைமிகு நடன வல்லுனர் பத்மா சுப்பிரமண்யம் அவர்கள் வந்து சிறப்பித்தார். அத்தோடு ஈழத்திருநாட்டின் நடன வல்லுனர் வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார். நாட்டிய மயில் நிகழ்வு கொழும்பு இராம கிருஸ்ண மண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் ஆ.கந்தசாமி அவர்கள் தலைமையில் இடம்பெற்றதோடு பல அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். 2014க்கு பின் இவ்வருடத்திற்கான நாட்டிய மயில் நிகழ்வினை திறம்பட இயக்கி பரிசில்களை வழங்கி நாட்டிக் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக சட்டத்தரணியும் சமூக நல ஆர்வலருமான திரு. ராமச்சந்திரன் அவர்களின் நன்முயற்சியினை பராட்டி வாழ்த்தி மகிழ்வுறுகிறோம்.


அதோடு இந்நாட்டில் தங்கியிருந்து பயிற்சி பட்டறை அமைத்து பரதத்தை நன்கு கற்றுவித்து நம்நாட்டுக் கலைஞர்களும் நன்கு திறம்பட கற்றிட ஆர்வத்துடன் பங்கு பற்றிட பத்மா சுப்பிரமணியம் அவர்கள் எடுத்த முயற்சி பாரட்டத்தக்கது. அது மட்டுமல்லாது நாட்டியம் பயின்ற கலைஞர்களில் மிகத்திறமையான கலைஞர் ஒருவருக்கு பத்மாசுப்ரமண்யம் விருதும் வழங்கினார். இது நம்நாட்டுக்கலைஞர்கள் முன்னேற்றத்திற்கான படிக்கல்லாகும். அத்தோடு இசைக்கச்சேரியுடன் ஆரம்பிக்கப் பட்ட விழாவில் இருவரினதும் இசைப்பாடல்கள் கானமிர்தம் ஆக இனித்தது. பக்கவாத்தியக்கலைஞர்களும் திறம்பட இசைத்தனர். அடுத்து இடம் பெற்ற வாசுகி ஜெகதீஸ்வரன் நெறியாள்கையில் ஆடிய நடனங்களும் கண்ணுக்கு விருந்தாய் இருந்தன. அதைத்தொடர்ந்து இடம்பெற்ற பல நடன ஆசிரியைகளால் பயிற்றுவிக்கப்பட்ட கும்மி கோலாட்டம் திருக்குறள் நடனம் யாவும் பரவசப்படுத்தின.

இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போல் ஒவ்வொரு நடன போட்டியாளர்களும் அரை மணி நேரம் ஆடியதே எமை மெய் சிலிர்க்கச் செய்தது. அவர்களின் பல விதமான அபிநயனங்களுக்கும் பலத்த கரகோசம் எழுப்பி பார்வையாளர்கள் தம்மை மறந்து இரசித்தனர். கரவொலியால் உற்சாகம் அடைந்த நடன போட்டியாளர்களும் சலியாது பூரணமாய் ஆடி நின்றனர். இருவர் பெண்கள் ஒருவர் ஆண் இம்மூன்று கலைஞரும் தனித்தனியே தமது திறமையை வெளிப்படுத்தி இருந்தனர். இருந்த போதும் வெகு சிறப்பாக முகபாவம் காட்டி ஆடிய வானதி எனும் போட்டியாளரே முதல் பரிசுடன் நாட்டிய மயில் விருதும் முடியும் கிடைக்கப்பெற்றார்.

ஏனைய கலைஞர்களுக்கும் சான்றிதழ்கள் கிடைத்தன. பத்மா சுப்பிரமண்யம் அவர்கள் ஏனைய பிரதம விருந்தினர்களும் பரிசில்களை வழங்கினர். ஐந்து மணி நேரம் எப்படி சென்றது எனத் தெரியாது எமை மறந்து மகிழ்ந்து இருந்தோம். ஒரு சிறப்பான கலை நிகழ்ச்சியை பார்த்ததில் மனம் நிறைந்தது.

படங்கள் நன்றி : Studio Reflection, Colombo

 
4தமிழ்மீடியாவிற்காக அருந்தா
BLOG COMMENTS POWERED BY DISQUS