கட்டுரைகள்

இன்று நவம்பர் 25 ஆம் திகதி சர்வதேச பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பதற்கான தினமாகும். இத்தினத்தில் இன்றைய உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் யாவை அவற்றுக்கு எதிரான அவர்களின் உரிமைகள் யாவை என்பது தொடர்பான சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் மாத்திரம் தினசரி பெண்கள் பாலின வன்முறை, சிறார் திருமணம், வரதட்சணைக் கொலைகள், ஆள்கடத்தல், கற்பழிப்பு போன்ற துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியாவின் தேசிய குற்ற ஒழிப்பு திணைக்களமான NCRB இன் புள்ளி விபரப்படி 2015 ஆம் ஆண்டு மட்டும் அங்கு 35 000 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலும் 4500 பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முனைந்ததாக வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

 இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை மிகை என்பதால் தினசரி காலை உணவு உட்கொண்டு பத்திரிகையை வாசித்து கிடப்பில் போட்டு விடுவது போல் இச்சம்பவங்களை மறந்து விடுவது தான் அங்கு பெரும்பாலான மக்களின் நிலை என்பது நிச்சயம் துரதிர்ஷ்டமான ஒன்று என்று தான் கூற வேண்டும். இதேவேளை உலகளாவிய ரீதியில் எத்தகைய வழிமுறைகளில் பெண்கள் துஷ்பிரயோகப் படுத்தப் படுவார்கள் என்பது குறித்தும் அத்தகைய நபர்களுக்கு பெண்கள் கூறும் செய்தி என்னவென்றும் சுருக்கமாகப் பார்ப்போம்.

 ஆண் நண்பன் :

 நட்பின் அடிப்படையில் நீ எனக்கு நெருக்கமானவனே. ஆனால் உடல் ரீதியில் பார்த்தால் பெண் இனத்துக்கே உரிய தனித்துவத்துடன் கூடிய கட்டுப்பாடு எனக்கு உள்ளது. இதை மீறி நான் சுய நினைவற்று இருக்கும் போது என்னை வலிய உறவு கொள்ளவோ அல்லது உனது பிற நண்பர்களுடன் சேர்ந்து என்னைக் கட்டாயப் படுத்தவோ உனக்குத் துளியளவும் உரிமை இல்லை!

 என் கணவன் :

 எனது வாழ்க்கைத் துணையான உங்களுக்கு என்னுடன் உடல் ரீதியாக உறவு கொள்ளும் உரிமை உள்ள போதும் எனது விருப்பமின்றி என்னுடன் ஊடல் கொள்ளும் உரிமை உங்களுக்கு இல்லை. குழந்தை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் குடும்ப வாழ்க்கையைத் திட்டமிடுதல் என்பவற்றில் நம் இருவருக்கும் சம பங்கும் சம உரிமையும் எப்போதும் உண்டு.

 முன்னால் ஆண் நண்பன் :

 உன்னுடனான எனது உறவு முறிவடைந்து விட்டதற்காக என்னுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை Facebook இல் வெளியிடல் அல்லது இன்றைய வாழ்க்கைத் துணையின் மனதைத் திசை திருப்புதல் போன்ற உன் செயல்கள் பெண் இனத்துக்கே நீ இழைக்கும் தீமை என்பதை அறிந்து கொள்

 என்னுடன் பணி புரிபவர் :

 நாம் இருவரும் வேறு வேறு பாலை சேர்ந்தவர்கள் என்றாலும் எமக்கு என்று பல ஆயிரம் ஆண்டுகளாகப் பேணப்பட்டு வந்த நாகரிகம் என்று ஒன்று உண்டு. அதற்குப் புறம்பாக பெண்களை ஏனையோர் முன் உடல் ரீதியாகத் தீண்டுதல் மற்றும் ஆபாச வார்த்தைகளால் பேசுதல் போன்றன உங்களை நீங்களே மிருக இனத்துக்குத் தரம் தாழ்த்திக் கொள்வதற்குச் சமம்.

எனது உறவினர் :

 பாலியல் உறவு என்பது குறித்தே முழுமையான விளக்கம் இல்லாத என்னை ஆசை வார்த்தைகளால் மயக்கி வல்லுறவு கொள்ள முயலுதல் கொலைக் குற்றத்தை விட கொடிய குற்றம் என்று தான் கூற முடியும். ஏனெனில் எல்லா பெண்களும் ஒரு நாளில் தாயாகப் போகின்றவள் என்பதையும் தாயை விட சிறந்த தெய்வம் இல்லை என முன்னோர்கள் சொல்லி இருப்பதையும் நீங்கள் நன்கு அறிந்தவரே.

 ஆண்கள் (பொதுவாக..)

 நீங்கள் ஆணினம் மற்றும் உடல் வலிமை மிக்கவர் போன்ற கர்வத்தினால் உங்கள் மனதில் பெண்களைப் பற்றித் தோன்றும் அனைத்து எண்ணங்களுக்கும் இடம் கொடுத்து அவர்கள் மனம் நோகும் படி சந்தேகித்துப் பேசாதீர்கள். பதிலாக உங்கள் கேள்விகளை அவை சரியானவையா என ஒன்றுக்கு நூறு தடவை சிந்தித்து அதன் பின் பெண்களிடம் முன் வையுங்கள்.