கட்டுரைகள்

நாளை புதன்கிழமை 4 விண்கற்கள் பூமிக்கு அண்மையில் அதைக் கடந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இதில் பூமியை மிக அருகில் கடக்கவுள்ள விண்கல் நமது பூமியில் இருந்து 1.5 மில்லியன் மைல் தொலைவில் அதைக் கடக்கும் எனத் தெரிவிக்கப் படுகின்றது. மேலும் இவ்விண்கற்களில் ஒன்று லண்டன் ஐ (London Eye) இனை விட இரு மடங்கு பெரிது அதாவது 260 மீட்டர் விட்டம் உடையது என்றும் கூறப்படுகின்றது.

இந்த 4 விண்கற்களாலும் பூமிக்கு ஆபத்தில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பூமியின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்து அதைத் தாக்குவதற்கு ஏதேனும் விண்கல் முனைந்தால் அதற்கு நாம் தயார் கிடையாது என கடந்த வாரம் நாசா விஞ்ஞானி ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் புதன்கிழமை கடக்கவுள்ள 4 விண்கற்களிலும் ஏதாவது ஒன்று கூட பூமியில் மோதினால் கூட குறிப்பிடத்தக்க சேதத்தை  ஏற்படுத்தும் வலிமை மிக்கவை என்று கூறப்படுகின்றது.

எமது சூரிய குடும்பத்தில் 600 000 இற்கும் அதிகமான விண்கற்கள் காணப்படுகின்றன. இதில் 10 000 விண்கற்கள் வரை எமது பூமியைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் இவற்றால் குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்படலாம் எனவும்  ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகமான ESA தெரிவித்துள்ளது.