கட்டுரைகள்
Typography

வியாழனின் பனி படர்ந்த நிலவான எயூரோப்பாவில் (Europa) உயிர் வாழ்க்கை மற்றும் வேற்றுக் கிரக வாசிகள் (ஏலியன்கள்) வசிக்கின்றனரா என ஆராய 2031 ஆம் ஆண்டு அதி நவீன டிரோன்கள் அடங்கிய செயற்கைக் கோளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இந்த டிரோன்கள் எயூரோப்பாவின் தண்ணீர் அல்லது பனி படர்ந்த தரைக்குக் கீழே சென்று அதன் கடல்கள் குறித்து ஆராய உள்ளதுடன் அங்கு உயிர் வாழ்க்கை இருக்கும் பட்சத்தில் அவற்றை இனம் காணவும் உள்ளன.

எமது சூரிய குடும்பத்தில் வியாழனின் துணைக் கோளான எயூரோப்பா, உயிர் வாழ்க்கை காணப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் சூழல் அடங்கிய முக்கிய கிரகம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்நிலையில் எயூரோப்பாவுக்கு செல்லவுள்ள தானியங்கி ரோபோட்டின் வடிவமைப்பு அடங்கிய சித்திரத்தை நாசா வெளியிட்டுள்ளது. சூரியனில் இருந்து 500 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள எயூரோப்பாவில் சமுத்திரங்கள் இருப்பதாகவும் இதன் அடியில் மைக்ரோப்ஸ் (microbes) எனப்படும் நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்நிலையில் 2031 இல் அங்கு அனுப்பப் படும் செயற்கைக் கோளில் இருந்து தரையில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் ரோபோட்டிக் வண்டி ஒன்றும்  நீருக்கடியில் உயிரினங்களைத் தேடும் ரோபோட்டும் எயூரோப்பாவில் இறங்கி ஆராய்ச்சி செய்யவுள்ளன.

நாசா இந்த வாரம் குறித்த செயற்திட்டத்தின் 3 இலக்குகளை வெளியிட்டது. அவையாவன:

1. முக்கிய இலக்கு எயூரோப்பாவில் உயிர் வாழ்க்கை உள்ளதா என்ற ஆதாரங்களைத் தேடுதல்

2.எயூரோப்பாவில் உயிரினம் வாழும் சூழல் உள்ளதா என அதன் தரை மேற்பரப்பில் உள்ள பதார்த்தங்களை நேரடியாக ஆய்வு செய்வதன் மூலம் கண்டறிதல்

3.எயூரோப்பாவின் தரையிலும் அதன் சமுத்திரங்களிலும் வருங்காலத்தில் இன்னமும் அதிக ரோபோட்டுக்கள் மூலம் ஆய்வு செய்யக் கூடிய தன்மை உள்ளதா என உறுதிப் படுத்துதல்

எமது பூமியின் நிலவின் அதே அளவு கொண்ட எயூரோப்பாவில் உள்ள சமுத்திரங்கள் கிட்டத்தட்ட 62 மைல் ஆழம் உடையவை என்றும் கூறப்படுகின்றது. 1970 ஆம் ஆண்டு செவ்வாய்க்கு அனுப்பப் பட்ட வைக்கிங் (Viking) என்ற செயற்கைக் கோளை அடுத்து குறித்த எயூரோப்பா லேண்டர் தான் சூரிய குடும்பத்தில் ஏலியன்களைத் தேடுவதற்காக நாசாவால் மேற்கொள்ளப் படவுள்ள முதலாவது மிஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எயூரோப்பாவில் வளி மண்டலம் இல்லாத காரணத்தால் அங்கு அனுப்பப் படும் ரோபோட்டுக்கள் வெப்ப பாதுகாப்பு உறைகள் (heat shields) மற்றும் பாரசூட்டுக்கள் மூலம் தரை இறங்க முடியாது. ஆகவே வேறு தொழிநுட்பம் மூலம் குறித்த டிரோன்கள் 2031  ஏப்ரல் மாதம் தரை இறங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

 

எமது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் ஒழுக்குகளைப் (Orbit) பயன்படுத்தி Flyby mission என்ற முறை மூலம் எயூரோப்பாவுக்குப் பயணிக்கவுள்ள செயற்கைக் கோள் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பூமியில் இருந்து விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS