கட்டுரைகள்
Typography

பெண்கள் நினைத்தால் ஆகாதது எதுவும் இல்லை என்றாலும், அதற்கு பெரிய மனம் படைத்தவர்களின் உதவியும் வேண்டியுள்ளது என்பதை உணர்த்துகிறது ராணி கிருஷ்ணனின் அன்னை பாஃத்திமா குழந்தைகள் நல வாழ்வு மையம்.

 

திருச்சியை சேர்ந்த ராணி கிருஷ்ணன், வியப்புக்கு உரிய பெண்மணி. அதோடு அயராது உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு மிகச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகவும் இவர் திகழ்கிறார். 3 பெண்கள், 3 ஆண்கள் என்று இவர் குடும்பத்தில் மொத்தம் 6 பேர். இவர்தான் தலைப்பிள்ளை. தந்தை குடிக்கு அடிமையானவர். இவரது அம்மா அல்போன்ஸ் மேரி, கணவரின் குடிப்பழக்கத்தால் அனுபவித்த துன்பம் ஏராளம். இதை இனியும் தாங்கிக் கொள்ள முடியாது என்று ஒருக்கட்டத்தில் முடிவெடுத்தவர், தாமே சென்று முதியோர் இல்லத்தில் சேர்ந்துகொண்டார்.

அப்போது ராணி கிருஷ்ணன் பாவம் வெறும் 12ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார். வயதோ 18 தான்.மொத்தமும் இவர் மீது என்றாலும் சென்னைக்கு வேலைத் தேடித் புறப்பட்ட இவரிடம் இவரது அன்னை வைத்த கோரிக்கைதான் ஹைலைட். அதாவது ஆதரவற்ற முதியோர்களுக்கு என்று ஒரு இல்லத்தை நீ துவக்க வேண்டும் என்பதுதான் அது. இதை மனதில் வைத்தபடி வேலைத்தேடிச் சென்றவருக்கு, சென்னையில் எம்ஜிஆருக்குச் சொந்தமான சத்யா ஸ்டுடியோவில் உறுப்பினர்களுக்கு அட்டை போட்டு வழங்கும் பணி கிடைத்தது. இவரைப்போல இந்த வேலையில் இன்னும் சில பெண்களும் இருந்தனராம்.

ஒருக்கட்டத்தில் எம்ஜிஆர் இவர்களை அழைத்து என்ன உதவி வேண்டும் கேளுங்கள் என்றாராம். காரணம், உறுப்பினர்கள் கார்டு போடும் பணிகள் நிறைவடைய இருந்த நேரம், தேர்தலை எம்ஜிஆர் எதிர்க்கொள்ள இருந்த நேரம். அப்போது மற்ற பெண்கள் அரசு வேலை மற்றும் வேறு உதவிகள் என்று அவரவர் விருப்பம் போலாகி கேட்க இவர் மட்டும், தாம் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இல்லம் நடத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். அப்போதுதான் ராணி கிருஷ்ணன் குறித்த முழு விவரங்களையும் கேட்டாராம் எம்ஜிஆர்.

காலை முதல் மாலை வரை சத்யா ஸ்டுடியோவில் வேலை, பிறகு உள் பாவாடைகள் தைத்து விற்பது, கடைகளில் சந்தையில் வந்துள்ள புதிய பொருட்களை அறிமுகப்படுத்துவது என்று நாள் முழுக்க உழைக்கும் இவரை எம்ஜிஆர் வெகுவாகப் பாராட்டினாராம். அதோடு, தாம் வசிக்கும் இடத்தில் அனாதைக் குழந்தைகளைக் காத்து வருவதையும் கூறியபோது எம்ஜிஆர் அசந்துதான் போனாராம்.

பின்னர் தேர்தல் முடிந்து எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த நிலையில், மறுபடியும் இந்த பெண்கள் அனைவரையும் அழைத்து என்ன உதவி வேண்டும் என்று கேட்டபோதும், தாம் இல்லம் நடத்த விரும்புவதையே கூற, ஒரு ஐஏஎஸ் அதிகாரியை காரில் இவருடன் அனுப்பி இடம் தேர்ந்தெடுக்க சொன்னாராம். காரப்பாக்கத்தில் இவர் இடத்தைத் தேர்வு செய்ய, எம்ஜிஆர் அந்த இடத்தை இவருக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். அன்று ஆரம்பித்தது இவரது சேவை பயணம். இன்று சென்னை காரப்பாக்கத்தில் மிகப்பெரிய விருட்சமாக ஆதரவற்ற முதியவர், குழந்தைகள், அனாதைகள் என்று அனைவருக்கும் அடைக்கலம் தருகிறது.

 

தமது இல்லத்தில் வளரும் குழந்தைகளுக்கு பள்ளியும் அங்கு நடத்தி வருகிறார் ராணி கிருஷ்ணன். இந்த பள்ளியில் ஆதரவற்ற குழந்தைகள், ஏழைக் குழந்தைகள் என்று 200க்கும்மேற்பட்ட குழந்தைகள் இப்போது படித்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு, தங்கும் இடம், கல்வி இலவசம். ஆதரவற்ற முதியவர்கள் இங்கு தங்கி உள்ளனர். கடந்த 35 வருடங்களாக இந்த இல்லத்தை நடத்தி வருகிறார் ரானி கிருஷ்ணன், முன்னால் அமைச்சர் அரங்கநாயகம் போன்ற பல பிரபலங்களும் இவரின் இல்லத்துக்கு உதவி செய்து வருவதாக ராணி கிருஷ்ணன் பெருமையுடன் கூறுகிறார். இதுவரை இந்த இல்லத்தில் வளர்ந்த குழந்தைகள் ஆண்-பெண் என்கிற பேதமின்றி 35 பேருக்கு திருமணம் முடித்து சீர்வரிசையும் அளித்துள்ள ராணி கிருஷ்ணன், பள்ளிக்கு கட்டிடம் இல்லை எனும்போது, கடந்த முறை மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே.வாசனிடம் உதவி கேட்க அவர் எம்பி நிதியில் கட்டிடம் கட்டிக் கொடுத்து உள்ளார். சென்னை வெள்ளம் இவர்களை மட்டும் விட்டு வைத்ததா என்ன, வெள்ளத்தில் குழந்தைகளையும், முதியவர்களையும் வைத்துக்கொண்டு படாத பாடு பட்டாராம் ராணி கிருஷ்ணன் மற்றும் அங்கு பணிப்பார்க்கும் பணியாளர்கள்.

இல்லத்தில் கிடக்கும் அனைத்துப் பொருட்களும் தண்ணீரில் வீணாகிப் பயன்படுத்த முடியாத நிலையில் கிடக்கின்றன. கிழிந்து போன இருக்கைகள், படுக்கைகள் என்று.

இந்நிலையில்தான் டெல்லியைச் சேர்ந்த சம்பத், சொந்த நிதி மற்றும் யாசகம் என்று புதிய கட்டிடம் கட்ட நிதி தந்து உதவி செய்து வருகிறார். இவர் இந்த இல்லம் குறித்துக் கூறுகையில், தாம் உடல்நலம் குன்றி இறப்பின் எல்லை வரை சென்றபோது, இக்குழந்தைகளின் பிரார்த்தனைதான் என்னை பிழைக்க வைத்தது என்று கண்ணீர் மல்க கூறுகிறார் சம்பத்.

இன்னும் இன்னும் என்று உதவி ராணி கிருஷ்ணன் இல்லத்துக்குத் தேவைப்படுகிறதுதான். யார் கொடுத்தாலும் பெற்றுக்கொள்ளும் நிலையில்தான் ராணி கிருஷ்ணன் நடத்தி வரும் இல்லமும் இருக்கிறது. அம்மாவின் கட்டளையை நிறைவேற்றி, தம்பி-தங்கைகளை கரையேற்றிவிட்ட ராணி கிருஷ்ணனும் இதே இல்லத்தில் தமது அம்மாவுடன் இந்த ஆதரவிட்டிறவர்களுள் ஒருவராகத்தான் வசித்து வருகிறார். சுயநலமிக்க இவ்வுலகில் தன்னலமற்று, எனக்க்கென்று எதுவும் இல்லை, எனக்கு எனது அம்மாவும், இந்த பிள்ளைகளும்தான் என்று கூறுகிறார் ராணி கிருஷ்ணணன்.

இப்படி ஏழையோடு ஏழையாக எளிமையான வாழ்க்கை மேற்கொண்டு சேவை மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்து வரும் ராணி கிருஷ்ணன் அன்பையும், பண்பையும்  பாசத்தையும் பகிர்ந்து வாழும் இந்த வாழ்க்கை ரொம்பவும் அர்த்தமுள்ளதுதானே?! இவர் வாழ வைக்கும் அனைவரையும் வாழ வைக்க நாமும் சிறிது உதவலாமே.சிறுத்த துளிதான் பெரு வெள்ளம்?!

ராணி கிருஷ்ணனைத் தொடர்புக்கு கொள்ள : +91 94444-44874

நேர்காணல் மற்றும் படங்கள் : எழில்செல்வி

 

BLOG COMMENTS POWERED BY DISQUS