கட்டுரைகள்

லாஞ்ச் பேடில் இருந்து ராக்கெட் விண்ணில் பாய்வதை இன்று நேரலையில்
பார்க்க முடியும். அதுவும் 360 டிகிரியிலும் நேரலையில் பார்க்க முடியும்.

ராக்கெட் விண்ணில் பாய்வதையும், செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுவட்டப்
பாதையில் நிலைநிறுத்தப்படுவதை 3டி வடிவிலும் நேரலையில் நாம் பலமுறை
பார்த்திருப்போம். அதன்பின், விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கை
குலுக்கியும், கட்டியணைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும்
கூட பார்த்திருப்போம். இதுவரை ராக்கெட் விண்ணில் பாய்வதை தொலைவில்
இருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டதை தான் பார்த்திருப்போம். ஆனால் லாஞ்ச்
பேடில் இருந்து ராக்கெட் விண்ணில் பாய்வதை இன்று நேரலையில் பார்க்க
முடியும். அதுவும் 360 டிகிரியிலும் நேரலையில் பார்க்க முடியும்

சிக்னஸ் விண்கலம் அட்லஸ் (Atlas V) வகை ராக்கெட் மூலம் அனுப்பப்படுவதை
தான் 360 டிகிரியிலும் நேரலையில் பார்க்கும் இந்த வசதி
செய்யப்பட்டுள்ளது. சிக்னஸ் விண்கலமானது அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய
நிறுவனமான :வுக்குச் சொந்தமானது. இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத்
தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் ஆளில்லா விண்கலம் ஆகும்.

இந்த ரக விண்கலங்கள் மூலமாக இதுவரை ஏழு முறை சர்வதேச விண்வெளி
நிலையத்துக்குத் தேவையான பொருட்கள் வெற்றிகரமாகக் கொண்டு
செல்லப்பட்டுள்ளன. ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் (Cape Canaveral)
ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி இரவு 8.31 மணியில் இருந்து
நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.

Atlas V ராக்கெட்டில் இருந்து வெறும் 300 அடி தொலைவில், ராக்கெட் லாஞ்ச்
பேடில் இதற்காக நான்கு சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ராக்கெட்
விண்ணில் பாயும்போது அதன் பூஸ்டர் இஞ்சின் உமிழும் வெப்பமானது அதிக
அளவில் இருக்கும் என்பதால் அதை அருகில் இருந்து ஒளிப்பதிவு செய்வது
கடினமான காரியமாக இருந்தது. ஆனால் தற்போது வெடிப்பு தாக்காத, அதிக வெப்ப
நிலையைத் தாங்கக்கூடிய சிறப்பு பாக்ஸ்களுக்குள் கேமராக்கள்
பொருத்தப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட இருக்கிறது. மேலும், இந்த வகை
கேமராக்கள் மூலம் 360 டிகிரியிலும் காட்சியை ஒளிப்பதிவு செய்ய முடியும்.

லாஞ்ச் பேட் உள்ளிட்ட நான்கு வெவ்வேறு இடங்களில் இந்த கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன. ராக்கெட் அனுப்புவதற்கு சரியாக பத்து நிமிடங்களுக்கு
முன்பிலிருந்து நான்கு கோணங்களிலும், 360 டிகிரியில் இருந்தும் நேரலையில்
கண்டுகளிக்க முடியும். 360 டிகிரியில் ஒளிப்பதிவு செய்யப்படும் ஒரு
வீடியோவை, எந்தத் திசையிலும் விருப்பப்படி நகர்த்தி எந்தவொரு கோணத்திலும்
பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பு.

நாசா தனது தளத்தில் https://www.nasa.gov/nasalive என்ற முகவரியில்
லாஞ்ச் செய்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பிருந்தும்,
https://www.youtube.com/user/NASAtelevision என்ற யூடியூப் சேனலில் 360
டிகிரி வீடியோவை ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதற்கு பத்து
நிமிடங்களுக்கு முன்பிலிருந்தும் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு
செய்துள்ளது. எனவே பயனாளர்கள் இதை தங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து கூட
கண்டுகளிக்க முடியும்.

இதற்கு முன்னதாக Delta IV என்ற ராக்கெட் விண்ணில் பாய்ந்தபோது இதே போன்று
360 டிகிரி வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டாலும், அது நேரலையாக ஒளிபரப்பு
செய்யப்படவில்லை. எனவே முதல்முறையாக நேரலையாக ராக்கெட் விண்ணில் பாய்வதை
மிக அருகில் இருந்து 360 டிகிரி வீடியோவாக ஒளிபரப்பு செய்யப்படுவது
வரலாற்றில் இதுவே முதல்முறையாக இருக்கும்.