கட்டுரைகள்

இந்த வருடம் பூமியில் இருந்து சந்திரனுக்கான தூரத்துக்கு ஒப்பான அல்லது சமீபமான தூரத்தில் 5 விண்கற்கள் (asteroids) பூமியை நெருங்கி வருகின்றன என்றும் இவை பூமியைத் தாக்கக் கூடியதான சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்தும் நாசாவின் முன்னணி வானியலாளர்களில் ஒருவரான ரொன் பால்க்கே என்பவர் டுவீட் செய்துள்ளார்.

பூமிக்கு அண்மையில் வரும் முதலாவது விண்கல் ஜூலை 23 ஆம் திகதி பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரத்தின் 3.15 மடங்கு தூரத்தில் (Lunar distance) கடந்து செல்கின்றதாம். இந்த 5 விண்கற்களிலும் பூமிக்கு மிக அண்மையில் வருவது ஆக்டோபர் 12 ஆம் திகதி பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரத்தின் 0.15 மடங்கு தூரத்தில் கடந்து செல்லும் என்றும் இது 12 - 27 மீட்டர் சராசரி விட்டம் கொண்டது என்றும் கூறப்படுகின்றது. இந்த 5 விண்கற்களும் எப்போது பூமியைக் கடந்து செல்கின்றன என்றும் அவற்றுக்கு இடப்பட்ட பெயர் என்ன மற்றும் எந்தளவு சராசரி நிலவுக்கு ஒப்பான தூரத்தில் அவை கடக்கக் கூடும் மற்றும் எந்தளவு பருமன் கொண்டவை போன்ற தகவல்கள் அடங்கிய அட்டவணை நாசாவால் வெளியிடப் பட்டுள்ளது.

இந்த 5 விண்கற்களினதும் முக்கியத்துவம் என்னவென்றால் இதற்கு முன்பு அனுமானிக்கப் பட்டவை போன்று அல்லாது பூமியில் வாழும் மனித இனம் சற்று அச்சம் கொள்ளத் தக்கக் கூடியளவு தூரத்தில் பூமியைக் கடந்து செல்லவுள்ளன என நிபுணர்களால் கணிக்கப் பட்டுள்ளமையே ஆகும். ஆனாலும் ஆக்டோபர் 12 ஆம் திகதி பூமிக்கு மிக அண்மையில் கடக்கவுள்ள 2012 TC4 என்ற விண்கல் 12-27 மீட்டர் சராசரி விட்டமே உடைய அளவில் சிறிய விண்கல்லாக இருப்பதால் அது பூமியில் மோதினாலும் ஏற்படுத்தும் அழிவு பேரழிவாக இருக்காது என விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.


ஆனால் புருடுவே என்ற பல்கலைக் கழகத்தின் கணிப்பின் படி 34 மீட்டர் உடைய சராசரி விண்கல் ஒன்று மிகுந்த வேகத்துடன் பூமியுடன் மோதும் சந்தர்ப்பத்தில் அது 700 கிலோடன் எடைக்கு நிகரான சக்தியை அதாவது ஹிரோஷிமாவில் போடப் பட்ட அணுகுண்டை விட 12 மடங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆனால் இது 10 மைல் உயரத்திலேயே முற்றாக எரிந்து விட்டால் தாக்கம் குறைவாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது. மனித குல வரலாற்றில் விண்கல் தாக்கம் என்பது இனிமேல் தான் ஏற்படக் கூடும் என்று சொல்வதற்கு இல்லை.

ஏனெனில் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்றும் அண்மைய வரலாற்றிலும் பதியப் பட்டுள்ளது. அதாவது 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவின் செலையாபின்ஸ்க் என்ற புறநகர்ப் பகுதியில் 17 மீட்டர் விட்டமுடைய விண்கல் வந்து மோதியது பல கார் வண்டிகளின் முன்புற வெப்கேமில் பதிவாகி இணையத்தில் தரவேற்றப் பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விண்கல் வருவது முன்கூட்டியே அறிவிக்கப் படவில்லை என்பதுடன் இது தரையில் மோத முன்பே முற்றாக எரிந்து வீழ்ந்ததும் வீடியோக்களில் பதிவாகி இருந்தது. ஆனாலும் இந்த விண்கல் வீழ்ந்ததால் ஏற்பட்ட shock waves எனப்படும் அதிர்வலைகள் காரணமாக பல கட்டடங்கள் மற்றும் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து வீழ்ந்து  ஆயிரக் கணக்கான மக்கள் காயமுற்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த விண்கல் தாக்கத்தின் பின் மனித இனம் இன்னமும் விழித்துக் கொண்டதுடன் விண்கற்கள் பூமியைத் தாக்க முன்பே அவற்றைக் கண்டறிவது மற்றும் அழிப்பது தொடர்பிலான NEO (Near Earth Objects) என்ற செயற்திட்டத்தை நாசா உருவாக்கி ஆய்வுகளை முடுக்கி விட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  சுமார் 7 முக்கிய இலக்குகளைக் கொண்டு NEO செயற்படும் அதேநேரம் ARM எனப்படும் விண்கற்களை விண்ணில் வைத்தே திசை திருப்புதல் அல்லது அழித்தல் தொடர்பான செயற் திட்டமும் நவீன தொழிநுட்பங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.