கட்டுரைகள்
Typography

பொதுவாக காலத்தைக் கடந்து பயணிப்பது அதாவது டைம் டிராவல் (Time travel) குறித்து விஞ்ஞானப் புனைக் கதைகளிலும் ஹாலிவுட் திரைப் படங்களிலும் மாத்திரமே இதுவரை நாம் பார்த்து வந்துள்ளோம். ஆனால் நிஜத்தில்? என்ற கேள்வி எழும்போது இதற்குப் பெரும்பாலான வானியலாளர்கள் மற்றும் இயற்பியல் நிபுணர்களின் பதில் மௌனமாகவோ அல்லது ஆதாரம் அற்ற ஒன்றாகவோ இருந்து வந்துள்ளது.

ஆனால் தற்போது இதற்கு நம்பிக்கையளிக்கும் பதிலையும் விளக்கங்களையும் வானியலாளர்கள் முன் வைக்கத் தொடங்கியுள்ளனர். உதாரணமாக நாம் பூமியில் இருந்து பார்க்கும் நட்சத்திரங்களும் கோள்களும் அவற்றின் இன்றைய நிலையைப் பிரதிபலிக்காது கடந்த கால தோற்றத்தையே தற்போது அளித்து வருகின்றன. இதற்கு ஒளி ஒரு மாறிலியான குறிப்பிட்ட வேகத்தில் வெற்றிடத்தில் பயணிப்பது தான் காரணம். நாம் பார்க்கும் கிரகங்களின் தோற்றம் சில நிமிடங்கள் மாத்திரமே தாமதம் என்ற போதும் நட்சத்திரங்களானது எமது சூரிய குடும்பத்துக்கு வெளியே அமைந்திருப்பதால் அவை 4 முதல் பல ஆயிரம் மற்றும் மில்லியன் கணக்கான ஒளியாண்டுகளுக்கு முன்னைய தோற்றத்தையே தற்போது பிரதிபலிக்கின்றன.

இந்த நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் மிக மங்கலான ஒளியைப் பிரதிபலிக்கும் அண்டங்களை (galaxies) எமது பூமியில் நாம் கொண்டிருக்கும் நவீன தொலைக் காட்டிகள் மூலம் அவதானிக்கும் போது நாம் பல பில்லியன் வருடங்களுக்கு அப்பாலும் (முன்னதாக) கவனிக்க முடியும் என்பதால் முழு பிரபஞ்சத்தின் வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் வானியலாளர்கள்.

மேலும் பிரபஞ்சத்தில் மிகவும் புதிரான மிக வேகமாக சுழலும் கருந்துளைகளின் (Spinning Black holes)மையப் பகுதிகளில் காலமும் வெளியும் ஒன்றுடன் ஒன்று கலந்து இருப்பதாகக் கருதப் படுவதால் கருந்துளைகள் ஊடாக காலத்தைக் கடந்து கடந்த காலத்துக்கோ எதிர் காலத்துக்கோ செல்ல முடியும் எனத் தற்போது வானியலாளர்கள் பலமாக ஊகிக்கின்றனர். இதற்கு மிகவும் உபயோகமாக இருப்பது ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கை ஆகும். அதாவது காலம் வெளி என்பவற்றின் இணைப்போடு சேர்ந்த ஐன்ஸ்டீனின் 4 பரிணாம காலவெளி (4D spacetime) கருதுகோளில் காணப்படும் விண்பொருட்களின் (objects) அல்லது நிகழ்வுகளின் (events) தன்மையை ஆராயும் போது time travel சாத்தியமே என்கின்றனர் வான் இயற்பியலாளர்கள். இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள எமக்கு நவீன பௌதிகவியலில் கிரகங்கள், நட்சத்திரங்கள், அண்டங்கள் போன்ற மிகப்பெரிய விண் பொருட்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை, இயக்கம், ஒளியின் பயணம், காலவெளி போன்ற கொள்கைகளைத் தெளிவாக விளக்கும் ஐன்ஸ்டீனின் பொதுச்சார்புக் கொள்கையை புரிந்து கொள்வது அவசியம். நியூட்டனின் கிளாசிக்கல் பௌதிகவியலில் இருந்து மிகவும் மேம்பட்ட ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கையே நவீன வான் இயற்பியலின் அடிப்படையாக அமைந்து மிகத் துல்லியமான கணிப்புக்களை மேற்கொள்ள வானியலாளர்களுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

1915 இல் ஐன்ஸ்டீன் மும்மொழிந்த பொதுச் சார்புக் கொள்கையின் அடிப்படை சித்தாந்தமே பிரபஞ்சத்தில் காலமும் வெளியும் என்று தனித்தனியாக இரு பிரிவுகளாக அல்லாது கால வெளி என்ற பரிமாணமமாக உள்ளது என்றும் இதனை வளைக்கும் அல்லது விலகச் செய்யும் (distortion) நிறைகொண்ட விண்பொருட்களின் விசையே ஈர்ப்பு விசை (Gravity) என்பதாகும். இது போன்ற பிரமிக்க வைக்கும் கொள்கைகளுடன் டுர்ஹாம் பல்கலைக் கழகத்தின் இலக்கியத்துறை பேராசிரியர் சிமோன் ஜோன் ஜேம்ஸ் என்பவரும் ரிச்சார்ட் போவெர் என்ற பௌதிகவியலாளர்களும் மேற்கொண்ட டைம் டிராவல் குறித்த உரையாடல் Mail Online தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி, தகவல் : Mail Online

http://www.dailymail.co.uk/sciencetech/article-4534572/Time-travel-possible-black-holes.html

- 4தமிழ்மீடியாவுக்காக: நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS