கட்டுரைகள்
Typography

 எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு சூரியனுக்கு மிக அண்மையில் செல்லவுள்ள செய்மதி செயற்திட்டத்துக்கு பிரபல வான் பௌதிகவியலாளர் எயுஜேனே பார்க்கர் என்பவரைக் கௌரவிக்கும் முகமாக பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe) என நாசா பெயரை மாற்றியுள்ளது.

பார்க்கெர் வான் பௌதிகவியலாளராகக் கடமையாற்றும் சிக்காக்கோ பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற ஒரு வைபவத்தில் இந்த அறிவிப்பை நாசா வெளியிட்டுள்ளது. 1958 ஆம் ஆண்டு பார்க்கெர் இளம் பேராசிரியராக இருந்த போது வான்பௌதிகவியல் பத்திரிகை ஒன்றில் வெளியிட்ட கட்டுரை சூரியனுக்கும் கிரகங்களுக்கும் இடையேயான வாயு மற்றும் காந்தப் புலம் பற்றியதாகும். இந்தக் கட்டுரையில் அவர் சூரியனில் இருந்து அதிவேக சடப்பொருள் ஒன்றும் காந்தப்புலமும் தொடர்ச்சியாக வெளியேறுவதாகவும் இவை அதைச் சுற்றி வரும் கிரகங்களைப் பாதிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இன்று இவை சூரியப் புயல் அல்லது சூரிய சூறாவளி (Solar wind) என அறியப் படுகின்றது. பார்க்கெரின் இக்கண்டுபிடிப்பே சூரியன் உட்பட நட்சத்திரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றி வரும் கிரகங்களுக்கு இடையேயான கவர்ச்சி மற்றும் பாதிப்பு தொடர்பிலான அறிவுக்கு அடிப்படையாகும். தற்போது இந்த சூரியப் புயலை பூமியில் இருந்து தொலைக் காட்டிகள் வாயிலாக நேரில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைக் கௌரவிக்கும் முகமாக நாசா முதன் முறையாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஞ்ஞானியின் பெயரை தனது செயற்திட்டத்துக்கு சூட்டியுள்ளது. மேலும் சூரியனில் இருந்து 4 மில்லியன் மைல்களுக்குள் பயணிக்கவுள்ள பார்க்கர் சோலார் விண்கலம் அதிகபட்சமாக 2500 செல்சியஸ் வெப்பத்தை எதிர் கொள்ளவுள்ளது. இந்தக் கடும் வெப்பத்தை எதிர்கொள்ள இச்செய்மதிக்கு 5000 பாகை செல்சியஸ் வரை தாக்குப் பிடிக்கக் கூடிய கார்பன் கலப்பு உலோகத் தகடுகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. சூரியனுக்கு மிக அண்மையில் சென்று ஆய்வு செய்யும் மனித குல வரலாற்றின் இந்த முதல் ஆய்வு மூலம் உலகின் பருவ நிலை மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்பதுடன் சூரியனால் பூமிக்கு ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS