கட்டுரைகள்
Typography

இன்னும் இரு தசாப்தங்களுக்குள் அதாவது 10 தொடக்கம் 15 வருடங்களுக்குள் எம்மால் வேற்றுக் கிரக உயிரினங்களை (Alien life) கண்டு பிடித்து விட முடியும் என்றும் ஆனால் இக் கண்டுபிடிப்பு பெரும்பாலும் நுண்ணுயிரினங்களாகவே (Microbial) இருக்க வாய்ப்புள்ளது என்றும் வானியலாளர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருப்பதாக கிறிஸ் இம்பே என்ற வானியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

மேலும் எம்மைப் போன்ற அதாவது மனித இனத்தைப் போன்ற பகுத்தறிவு (intelligence) கொண்ட வேற்றுக் கிரக வாசிகளை வெகு விரைவில் கண்டு பிடிப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக சூரிய குடும்பத்துக்குள் இவ்வாறான நுண்ணுயிரி வடிவிலான வேற்றுக் கிரக உயிரிகளை இனம் காண முடியும் என்ற நம்பிக்கையை வியாழக் கிரகத்தின் துணைக் கோளான எயூரோப்பா (Europa) போன்றவை தருவதாகவும் கிறிஸ் இம்பே கூறுகின்றார். இந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக  மிக விரைவில் நிறுவப் படவுள்ள ஜேம்ஸ்  வெப் தொலைக் காட்டியும் (James Webb Telescope) உதவவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு விண்ணுக்கு செலுத்தப் படவுள்ள இத்தொலைக் காட்டி உலகின் மிகப் பெரியதும் சக்தி வாய்ந்ததுமான தொலைக் காட்டியாகப் பெயர் பெறவுள்ளது. Big Bang எனப்படும் பெருவெடிப்பு நிகழ்ந்து 200 மில்லியன் ஆண்டுகளுக்குப்  பின்னர் வரையிலான ஒளியாண்டு தொலைவு வரை உற்று நோக்கக்  கூடிய இந்தத் தொலைக்காட்டி ஓர் கால  இயந்திரம் (Time machine) என்றும் அழைக்கப் படவுள்ளது.

Futurism என்ற ஊடகத்துக்கு அண்மையில் பேட்டியளித்த போதே அரிஷோனா பல்கலைக் கழகத்தின் வானியல் துறை திணைக்கள பிரதித் தலைவரும் பேராசிரியருமான ஜேம்ஸ் இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன் போது அவர் பனியால் ஆன தரை மேற்பரப்பைக் கொண்ட ஐரோப்பா துணைக் கிரகத்தில் அத்தரைக்குக் கீழ் தண்ணீரால் ஆன சமுத்திரம் காணப் பட வாய்ப்புள்ளதாகவும் இது உயிர் வாழ்க்கைக்கான மிக முக்கியமான ஒரு நிபந்தனை என்றும் தெரிவித்தார்.

செவ்வாய்க் கிரகத்திலும் இது போன்றே தரைக்குக் கீழ் மிக ஆழத்தில் நுண்ணுயிர்கள் வாழும் சாத்தியம் இருக்கக் கூடும் என்றாலும் அதைக் கண்டு பிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் தான் சமீப காலமாக வியாழனின் 6 ஆவது பெரிய துணைக் கோளான எயூரோப்பா வானியலாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கோள் பூமியைப் போன்றே இரும்பால் ஆன மையத்தை (Iron core) கொண்டிருக்கலாம் எனவும் நம்பப் படுகின்றது. எயூரோப்பாவைத் தவிர்த்துப் பார்த்தால் அண்மையில் கஸ்ஸிணி விண்கலம் எடுத்த புகைப்படங்களின் அடிப்படையில் சனிக்கிரகத்தின் துணைக் கோளான என்கேலடுஸ் (Enceladus) கூட சமுத்திரம் உட்பட நுண்ணுயிர் வாழ்க்கைக்கு உதவக் கூடிய கிட்டத்தட்ட அனைத்து நிபந்தனைகளையும் கொண்டிருப்பதாகத் தெரிய வந்திருந்தது.

சூரிய குடும்பத்துக்கு வெளியே என்று பார்த்தால் 39 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள Trappist-1 என்ற நட்சத்திரக் குடும்பத்தில் 7 பூமியின் பருமனுக்கு ஒத்த கிரகங்கள் இருப்பதும் அவை உயிர் வாழ்க்கைக்குத் தக்கதாக அமைந்திருக்க பெரும் வாய்ப்பு உள்ளது என்றும் வானியலாளர்கள் சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டு இருந்தனர். இச்செய்தியை எமது 4 தமிழ்மீடியா தளத்திலும் பிரசுரித்து இருந்தோம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்