கட்டுரைகள்
Typography

இன்றைய காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக வெளி வரும் செய்திகளில் அதிக முக்கியத்துவம் பெறுபவை மனித இனம் விண்வெளியில் குடியேறத் தக்கதாக ஏதேனும் கிரகமோ அல்லது சூழலோ உள்ளதா என்ற ஆய்வு தொடர்பாக வரும் செய்திகள்.

அதன் அடிப்படையில் அண்மையில் எமது சூரிய குடும்பத்தில் 2 ஆவது மிகப் பெரிய கிரகமும் தனது வளையங்களால் தனிச் சிறப்புப் பெற்றுள்ளதுமான சனிக்கிரகம் தொடர்பான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது சனிக்கிரகத்தைச் சுற்றி வரும் அதன் மிகப் பெரிய சந்திரனான (துணைக்கோள்) டைட்டன் சுமார் 300 மில்லியன் மக்கள் குடியேறி வாழ உகந்த தன்மைகள் பலவற்றைக் கொண்டுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியைப்போல் அல்லாது டைட்டனின் தரை மேற்பரப்பில் நிகழ்ந்து வரும் கதிர்வீச்சுக் கசிவினை முறையாகப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யவும் எம்மை மிதமான வெப்பநிலையில் வைத்துக் கொள்ளவும் முடியும் எனப்படுகின்றது. டைட்டனில் உள்ள கடல்கள் மெதேன் வாயுவால் ஆனதால் அங்கிருந்து விண்வெளியில் பூமிக்கும் சூரிய குடும்பத்தின் ஏனைய பகுதிகளுக்கும் செல்லக் கூடிய ராக்கெட்டுக்களுக்கு எரிபொருளாக அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சனிக்கிரகத்தின் மிக வலிமையான ஈர்ப்புப் புலத்தால் டைட்டனில் மிக வேகமாக எப்போதும் வீசும் காற்றினைப் பயன்படுத்தி காற்றாலை மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனப்படுகின்றது. மேலும் சூரியப் படல்கள் மூலமாகவும் ஏறத்தாழ 300 மில்லியன் மக்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்து கொள்ளவும் முடியும் எனப்படுகின்றது. விஞ்ஞானிகளின் கூற்றுப் படி டைட்டனுக்கு முதலில் செல்லும் மனிதர்கள் அங்கு இருக்கும் கதிர்வீச்சுக் கசிவை பயன்படுத்தி அணுசக்தியை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் பின்னர் அந்த சக்தியை ஹைட்ரோ கார்பன் ஏரிகளுக்குப் பிரயோகித்து உயிர் வாழ்க்கைக்குத் தேவையான சக்தியை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் படுகின்றது.

பூமியை விட 1/100 பங்கு சூரிய ஒளியைத் தான் டைட்டன் பெற்று வருகின்றது என்றும் கூறப்படுகின்றது. புதன் கிரகத்தை விட சற்றுப் பெரிய டைட்டன் சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய 2  ஆவது சந்திரன் அதாவது துணைக் கோள் ஆகும். இது தனது சிறப்பு அம்சங்களினால் செவ்வாய்க் கிரகத்துக்கு அடுத்து மனித இனம் காலனி அமைக்க உகந்த இடத்தில் உள்ளதாக ஜோஹ்ன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக் கழக விண்வெளி விஞ்ஞானி தெரிவித்துள்ளார். மேலும் சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்ததாக ஆறுகளும், மழை வீழ்ச்சியும், கடல்களும் ஏன் நீர் வீழ்ச்சிகளும் கொண்ட ஒரே கிரகமாக அல்லது துணைக்கோளாக உறுதியான சான்றுகளுடன் திகழும் ஒரே கிரகமும் டைட்டன் (Titan) என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி, தகவல் : Mail Online

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்