கட்டுரைகள்

ஆக்டோபர் 1 ஆம் திகதி ஐ.நா இனால் பிரகடனப் படுத்தப் பட்ட முதியவர்களுக்கான சர்வதேச தினமாகும். இத்தினம் நமது சமூகத்தில் முதியவர்களின் பங்கு எந்தளவு முக்கியமானது என்பதனை ஏனையவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் வயதாதல் காரணமாக முதியவர்கள் சமூகத்தில் சந்திக்கும் துன்பங்களைப் போக்கவும் எனக் கொண்டாடப் படுகின்றது.

இந்த வருட ஆரம்பத்தில் மிச்சிகன் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில் வயதாகும் நிகழ்வை எதிர்மறையாக எடுத்துக் கொள்ளும் முதியவர்களால் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதில் அதிக சவால்களையும், சமூகத்துடன் ஒத்துப் போதலில் சிரமும் அதிகம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பதிலாக வயதாதல் என்பது எல்லாருக்கும் ஏற்படக்கூடிய இயற்கையின் ஒரு விதி என இதனை நேர்மறையாக எடுத்துக் கொள்பவர்கள் வயதான காலத்திலும் நீண்ட ஆரோக்கியத்துடனும், சமூகத்தில் எவருடனும் இலகுவில் ஒத்துப் போகக் கூடிய தன்மையுடனும் இருக்க முடியும் எனவும் ஆராய்ச்சி முடிவுகளின் படி கூறப்பட்டுள்ளது. மேலும் வயதாகும் நிகழ்வை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்பவர்களால் மட்டும் தான் முதியவர்கள் சமூகத்துடன் எதிர்கொள்ள நேரிடும் வெறுப்பு மற்றும் பாகுபாடுகளையும் இலகுவாகக் கடந்து செல்ல முடியும் எனவும் முதியவர்கள் இப்பாகுபாடுகளைக் கடந்து சமூகத்தில் மிகவும் செயற்திறனுடன் இருக்க ஐ.நா மேற்கொள்ளும் முயற்சிகளில் கூறப்பட்டுள்ளது.

உடலியல் ரீதியாகப் பார்த்தால் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப் படி முட்டை, டெய்ரி, சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்த்து இயற்கைப் புரதம் அதிகம் உள்ள கடலை வகைகள், சிக்கன் மற்றும் மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் பயனளிக்கும் எனவும் அறிவுறுத்தப் படுகின்றது. வயதாவதால் பொதுவாக ஏற்படக் கூடிய தசை இழப்பு, பலவீனம் அதிகரிப்பு மற்றும் தலை சுற்றுதல் போன்றவற்றைத் தவிர்க்க இந்த புரத சத்து அவசியமானது என்று கூறப்படுகின்றது. மேலும் டுஃப்ட்ஸ் பல்கலைக் கழகத்தின் அண்மைய ஆராய்ச்சி முடிவின் படி வயதாகும் போதும் மிகவும் ஆரோக்கியமாக இருக்க குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 48 நிமிட உடற்பயிற்சி மிகவும் பயனளிக்கும் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது. இது உடல் மனரீதியான உறுதிக்கு மட்டுமன்றி மறதி மற்றும் அல்ஷெய்மர் போன்ற வியாதிகளின் வீரியத்தையும் குறைக்கும் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் தினசரி சரியான நேரத்துக்குப் போதுமான அளவு நித்திரை கொள்ளுதல் மற்றும் ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்துக்கு எழும்பிப் பழகுதல் மற்றும் தமது அன்றாட நடவடிக்கைகளையும் உடற் பயிற்சியினையும் நேர அட்டவணைப் படி செய்து வந்தால் நித்திரைப் பிரச்சினை, மறதி, இதய நோய், பக்கவாதம், மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றின் தாக்கமும் குறையும் என்றும் கணிப்பிடப் பட்டுள்ளது.

இன்று கொண்டாடப் படும் முதியவர்கள் தினத்தில் நாமும் எமது முதியவர்கள் தமது வயதாதல் காரணமாக இயல்பாகவே அடையக் கூடிய பிரச்சினைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு உதவிகரமாக இருக்கப் பழகுதல் என்பது சமூகத்தின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது என்பதை உணர்ந்து செயற்படுவோம்.