கட்டுரைகள்
Typography

2600 ஆம் ஆண்டளவில் எமது பூமி நெருப்புப் பந்தம் ஆகி விடும் என்றும் அதற்கு முன் மனித இனம் தனது அழிவைத் தடுக்க வேண்டும் எனில் பூமியை விட்டு வெளியேறி வேறு கிரகங்களில் குடியேற இப்போது இருந்தே திட்டமிடல் அவசியம் எனவும் பிரிட்டனின் பிரபல வானியலாளரும் பௌதிகவியலாளருமான ஸ்டீபன் ஹாவ்கிங்க் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் நடைபெற்ற டான்செண்ட் இணையத்தள மாநாட்டில் பேசுகையிலேயே நரம்பியல் நோயால் பாதிக்கப் பட்டுள்ள பேராசிரியர் ஸ்டீபன் ஹாவ்கிங்க் கணணி உதவியுடன் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்ப இதே அறிஞர் செயற்கை அறிவானது (Artificial intelligence) மனித இனத்துக்கு அழிவை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என்று இவ்வருடம் லிஸ்பனில் நடைபெற்ற 60 000 பேர் பங்கு பற்றிய வெப் மாநாட்டில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பூமியில் தற்போது அதிகரித்து வரும் மனித சனத்தொகையும் அதற்குத் தேவையான சக்தியும் விரைவில் மனித இனத்துக்குப் பேரழிவைக் கொண்டு வரவுள்ளன என்று அவர் பீஜிங் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இதேவேளை பூமிக்கு மிக அண்மையில் உள்ள நட்சத்திர மண்டலமான ஆல்ஃபா செண்டூரி என்ற நட்சத்திரத் தொகுதியிலுள்ள உயிர் வாழத் தகுந்த கிரகம் ஒன்றுக்குச் செல்வது என்பது தொடர்பிலான ஸ்டார் ஷொட் செயற்திட்டத்தை (Starshot's project) இனை ஹாவ்கிங் ஆதரித்துள்ளார்.

மேலும் இன்னமும் 600 வருடங்களில் அதாவது 2600 ஆம் ஆண்டு எமது பூமி ஒரு நெருப்புக் கோளமாக மாறி விடுவதற்கும் உயிர் வாழ்வதற்குத் தகுந்த நிலையில் இருந்து மாறி விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது என ஹாவ்கிங் எச்சரித்துள்ளார். இதனால் வேறு நட்சத்திர மண்டலங்களில் உள்ள தகுதியான கிரகங்களுக்கு மனித இனம் செல்வது தொடர்பிலாக இப்போது இருக்கும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க உலகின் செல்வந்த அமைப்புக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பூமிக்கு மிக அண்மையிலுள்ள ஆல்ஃபா செண்டூரி நட்சத்திரத் தொகுதி பூமியில் இருந்து 4.37 ஒளியாண்டு அதாவது 25 டிரில்லியன் மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இன்றைய உலகின் மிக வேகமான விண்கலத்தில் சென்றால் கூட ஆல்ஃபா செண்டூரிக்குப் போய்ச் சேர 30 000 வருடங்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்ஃபா செண்டூரியின் குறிப்பிட்ட 3 நட்சத்திர மண்டலங்களில் உள்ள பூமிக்கு ஒப்பான கிரகங்களுக்குப் போய்ச் சேரவெனத் தற்போது திட்டமிடப் பட்டுள்ள நேனோ கிராஃப்ட் என்ற விண்கலத் திட்டம் மூலம் 20 வருடங்களில் அங்கு செல்லக் கூடிய சாத்தியம் பற்றி ஸ்டார் ஷொட் ஆய்வு செய்து வருகின்றது.

ஓர் ஒளிக்கற்றை மூலம் செலுத்தப் படக்கூடிய நேனோ கிராஃப்ட் செவ்வாய்க்கிரகத்தை ஒரு மணித்தியாலத்துக்குள்ளும் புளூட்டோவுக்கு சில தினங்களுக்குள்ளும் தற்போது சூரிய மண்டலத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடத்தை ஒரு கிழமைக்குள்ளும் கடந்து செல்ல வல்லதாகும்.

நன்றி, தகவல் : Mail Online

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்