கட்டுரைகள்

தெற்கு பிரான்ஸின் செயிண்ட் போல் லெஸ் டுரான்ஸ் என்ற பகுதியில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு வெப்ப ஆராய்ச்சி உலையாகக் கருதப்படும் ITER (International Thermonuclear Experimental reactor) இன் 50% வீதக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

சுமார் $24 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப் பட்டு வரும் ITER தான் நிகழ்கால உலகில் மிக சிக்கலான மற்றும் நுணுக்கமான எந்திரம் என்று கூறப்படுகின்றது. 2025 இல் ஹைட்ரஜன் அணுக்களை மிகை வெப்பத்தில் ஈடுபடுத்தி First Plasma என்ற கூறின் ஆய்வை இந்த ITER தொடங்கவுள்ளது. Fusion எனப்படும் கருத்தாக்கத்தின் மூலம் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது ஆய்வு அடிப்படையில் அதிகளவு மின்சக்தியை உற்பத்தி செய்யக் கூடிய வணிக ரீதியிலான சக்தி நிலையங்களை (Power stations) உருவாக்குவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இதற்கு ITER வெற்றிகரமாக உதவினால் DEMO எனப்படும் Fusion அடிப்படையிலான முதல் மின்சக்தி நிலையம் அடுத்த கட்டமாக உருவாக்கப் படவுள்ளது.

ITER கட்டுமானத்தில் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சீனா, ரஷ்யா மற்றும் தென்கொரியா ஆகிய 7 நாடுகள் இணைந்து செயலாற்றுகின்றன. இந்த ITER இல் அணுக்கருத் தாக்கமான Fusion ஐ ஏற்படுத்த ஹைட்ரஜன் அணுக்களை 150 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு அதாவது சூரியனின் உட்கரு வெப்பத்தை விட 10 மடங்கு அதிக வெப்பத்துக்கு சூடாக்கப் படவுள்ளது. மேலும் இந்த அதிக வெப்பத்தைத் தாங்கும் விதத்தில் சக்தி வாய்ந்த காந்தங்கள் மற்றும் உலோகங்களுடன் மிகுந்த பாதுகாப்புடன் தான் ITER அமைக்கப் பட்டு வருகின்றது.

ஏறத்தாழ இதே போன்ற கருத்தாக்கம் தான் சூரியனில் இடம்பெற்று அது ஒளியையும் வெப்பத்தையும் வெளிப்படுத்தி வருகின்றது. எனவே இந்த Fusion முறை மூலம் பாதுகாப்பான, மாசற்ற மற்றும் செலவு குறைந்த மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது இம்முறை மூலம் மின் அணு உலைகளில் யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் உலோகங்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதில் உள்ள செலவு மற்றும் கதிர்வீச்சுக் கழிவினால் ஏற்படும் சிரமம் என்பவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ITER ஆய்வு கூடத்தின் ஆராய்ச்சியின் பயனாக சூரியனின் மைய வெப்பத்தையும் தாங்கக் கூடிய உறுதியான பாரம் குறைந்த உலோகங்கள் உருவாக்கப் படக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.