கட்டுரைகள்
Typography

அண்மையில் «Me too» எனும் ஹாஷ்டாக்கின் கீழ் சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் சர்வதேச ரீதியில் தமக்கு இளைக்கப்பட்ட பாலியல் ஷேஷ்டைகள் குறித்து தமது அனுபவங்களை வெளிப்படையாக பகிரத் தொடங்கியிருந்தது, ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.

6 வயதிலிருந்து 100 வரை, தமக்கு நடந்த பாலியல் வன்முறைகளை பல்வேறு நாடுகளை சேர்ந்த பல பெண்கள், பிரபலங்கள், சாதனையாளர்கள், சினிமா கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீராங்கணைகள் என  பலதரப்பட்டோர் தமது பேஸ்புக் புரொபைல், டுவிட்டர், இன்ஸ்டகிராம் வாயிலாக தமக்கு இளைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து மனம் திறந்திருந்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் பெருமளவில் இந்த ஹாஷ்டாக் «me too» பிரசித்தமாகியிருந்தது. «எனக்கும்» அல்லது «நானும்» எனும் அர்த்தத்தில் வரும் இச் சொற்கள் பல்வேறு மொழிகளிலும் அதே அர்த்தத்தில் ஹாஷ்டாக் இடப்பட்டு, சர்வதேச அளவில் பரவலானது.

அமீர் கான் நடிப்பில் வெளியான பிரபல பாலிவூட் திரைப்படமான தங்கல் திரைப்படத்தில் நடித்த சைரா வாசிம் தான், உள்ளூர் விமானம் ஒன்றில் பாலியல் சேஷ்டைக்கு உள்ளானதாக கண்ணீர் மல்க இன்ஸ்டகிராம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததும் மறுபடியும் எனக்கு இந்த «Me too» ஹாஷ்டாக் ஞாபகத்திற்கு வந்தது.

டெல்லியிலிருந்து மும்பைக்கு செல்லும் வழியில், தனது இருக்கைக்கு பின் இருக்கையில் இருந்த ஒருவர், தான் அரைநித்திரையில் இருந்த போது கால்களை நீட்டி தனது பிற்பகுதியையும், கழுத்துப் பகுதியையும் தடவ முயற்சித்ததாகவும்,  அவர் குறித்து முறைப்பாடு செய்த போதும், குறித்த «விஸ்தாரா» ஏர்வேய்ஸ் பணியாளர்கள் தனது முறைப்பாட்டில் போதிய அக்கறை செலுத்தவில்லை எனவும், விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்த போது மட்டுமே, குறித்த நபர், தனது இயல்பு இருக்கைக்கு திரும்பியதாகவும் அவர் கோபத்துடன் தெரிவித்திருந்தார்.

அதோடு பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக இது குறித்து குரல் கொடுக்கும் வரை எவரும் எம்மை பாதுகாக்க வரமாட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இரு நாட்களுக்கு முன் தற்செயலாக, Vimeo இல் வெளிவரும் Staff Pick குறுந்திரைப்படங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு குறும்படம். “Laps”.  டிராமில் ஒரு பெண்ணுக்கு இளைக்கப்படும் பாலியல் தொல்லையில் அப்பெண்ணுக்கு எவ்வாறான மன உணர்வுகள் ஏற்படலாம், எவ்வாறு அனைவருக்கும் தெரிந்தும், தெரியாதது போன்று பாலியல் தொல்லைகள் நடைபெறலாம் என  மிக நேர்த்தியாக உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது.

இத்தருணம் இக்குறுந்திரைப்படத்தை இங்கு இணைப்பது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

Laps from Charlotte Wells on Vimeo.

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்