மிட் ரூம்னியை கேலி செய்யும் கூகுள் தேடுபொறி புகைப்படங்களால் புதிய சர்ச்சை
- Thursday, 11 October 2012 18:01
கூகிள் இமேஜ் தேடு பொறியில் 'completely wrong' என டைப் செய்து பாருங்கள்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் எதிர்கட்சி வேட்பாளர் 'மிட் ரூம்னி' இன் புகைப்படங்கள் தோன்றும். இப்படி தோன்றுவது, இது மிட்ரூம்னி முற்றிலும் ஒரு தவறான நபர் என கேலி செய்வதாக அமைந்துவிட்டதாக அமெரிக்க தேர்தல் களநிலைமை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தவறு வேண்டுமென்று புகுத்தப் பட்ட ஒன்று அல்ல எனவும் கூகிள் தேடுபொறி பிரபல தலைப்புக்கள் மற்றும் ரூம்னியின் அறிக்கைகளின் புள்ளி விபரப் படி இயல்பாகவே இந்த விபரீதம் எதிர்பாராமல் ஏற்பட்டு விட்டது எனவும் கூகிளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ரூம்னி தனது தேர்தல் பிரசாரத்தின் போது 47% சதவீதமான அமெரிக்கர்கள் ஒபாமாவின் ஆதரவாளர்கள். அவர்களை திருத்த முடியாது, எனப் பொருள் படும் உரை நிகழ்த்தியது தொடர்பில் மறுப்பு தெரிவித்து ஊடகமொன்றுக்கு பேட்டி அளிக்கையில் அடிக்கடி இந்த 'completely wrong' எனும் பதத்தை உபயோகித்திருந்தார். இதனை கூகிளின் algorithms எனப்படும் செய்தி சேர்க்கும் வழிமுறைகள் அப்படியே பின்பற்றி அவ்வாக்கியத்தைப் பிரசித்தமாக்கி விட்டன.
இது போன்ற சர்ச்சைகள் இதற்கு முன்னரும் கூகிள் தேடு பொறியில் நிகழ்ந்துள்ளதாகவும் கூகிள் இது போன்ற தவறுகளை ஒவ்வொன்றாகத் திருத்துவது இயலாத காரியம் எனவக் கூறியுள்ள போதும் தேடு பொறியின் வழிமுறைகளை (algorithms) மெருகேற்றுவதன் மூலம் இவற்றை சரி செய்ய முயற்சிப்பதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
