தொழில்நுட்பம்
Typography

இலவசம் என்ற பெயரில்  எமது கணிணியில் நிறுவப்படும் மென்பொருட்களுடன் சேர்ந்து உங்கள் கணிணியைப் பாதிக்கும் ஏனைய சில மென்பொருட்களும் உங்களுக்கு தெரிந்தோ அல்லது உங்கள் அனுமதியுடனோ நிறுவப்பட்டு பல கணிணி பிரச்சனைகளுக்கு ஏதுவாக இருக்கும். 

இவை பற்றி விரிவான ஒரு கட்டுரையை எழுதியுள்ளார் Giri Blog அவரின் அனுமதியுடன் 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக மீண்டும் பிரசுரம் செய்கின்றோம். 4தமிழ்மீடியா குழுவினர்.

பலர் “என்னுடையைக் கணினி அடிக்கடி ஏதாவது மென்பொருள் பிரச்சனை கொடுக்கிறது. dll Error அல்லது Application error என்று ஏதாவது பிரச்சனை வந்து கொண்டு இருக்கிறது. அதோடு, கணினி மிகவும் மெதுவாக வேலை செய்கிறது” என்று கூறக் கேட்டு இருப்பீர்கள். ஏன்! நீங்களே இது போலப் புலம்பிக் கொண்டு இருக்கலாம். இதற்கெல்லாம் காரணம் கணினியை சரியாகப் பராமரிக்காதது தான்.

“இலவசம்” என்றால் அதனால் நமக்குப் பயன் இருக்கிறதோ இல்லையோ அதைப் பெற வேண்டும் என்ற எண்ணம் பலரிடையே இருக்கிறது. முதலில் அனைவரும் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் இலவசம் என்று எதுவுமில்லை. இலவசம் என்றால், அதைக் கொடுப்பவருக்கு அதனால் நேரடியாகவோ மறைமுகவோ பலன் இருந்தே ஆக வேண்டும். இது புரியாமல் பலர் இலவசம் என்ற வார்த்தையில் ஏமாந்து போகிறார்கள். நமக்குப் பாதிப்பில்லாத பலன் என்றால் பிரச்சனையில்லை ஆனால், நமக்குப் பிரச்சனையைக் கொடுத்து அதனால் அவர்களுக்குப் பலன் என்றால்… யோசிக்க வேண்டும் அல்லவா! இது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அரசாங்கம் கொடுக்கும் இலவசங்களால் மக்கள் கெட்டுப் போகிறார்களோ இல்லையோ! இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்களால் நம்முடைய கணினி கெட்டுப் போவதோடல்லாமல், வேகமும் பெருமளவு குறைந்து விடும். இவையல்லாமல், நமக்கும் பெரும் தீங்கு இழைத்து விடும்.

நாம் இலவசமாகக் கிடைக்கும் மென்பொருளை எதற்கு நிறுவுகிறோம்? அதில் உள்ள சில தொழில்நுட்பம் நமக்குத் தேவைப்படுகிறது என்பதற்காகத் தானே! உதாரணத்திற்கு ஒரு காணொளியை பாதியாக வெட்ட, YouTube ல் இருந்து காணொளியை தரவிறக்கம் செய்ய, கணினியின் வேகத்தைக்கூட்ட, கணினியைப் பராமரிக்க, MP3 யை வெட்ட இது போல நிறையக் கூறிக்கொண்டே செல்லலாம். நான் எது பற்றிக் கூறுகிறேன் என்று இந்நேரம் இதைச் செய்துகொண்டு இருப்பவர்களுக்குப் புரிந்து இருக்கும். எனவே மேலும் உதாரணங்கள் தேவையில்லை. இவற்றைத்தான் Third Party Software என்று குறிப்பிடுவார்கள்.

இது போல மென்பொருட்களை நிறுவும் போது அதிலும் ஒரு குட்டி இலவச இணைப்பாக Toolbar என்ற வீணாப்போன ஒரு மென்பொருளும் சேர்த்து வரும். இதை நாம் நிறுவக்கூடாது ஆனால், இதையும் பலர் நிறுவி வைத்துக் கொள்வார்கள். இது நம்முடைய உலவியின் [Browser] வேகத்தைக் குறைத்து விடும். அதோடு உலவியைத் திறந்தாலே முக்கி முக்கித் தான் திறக்கும். இதற்குக் காரணம் இந்த Toolbar மென்பொருளே! உங்கள் உலவியைத் திறந்தால் திடீர் என்று உங்களுக்கு சம்பந்தமே இல்லாத தளத்தின் முகவரி Home Page ஆக இருக்கும். நீங்கள் என்ன செய்தாலும் செட்டிங் மாற்றினாலும் போகாது. பின்னர் இதற்கென்று உள்ள Adware மென்பொருளை நிறுவி நீக்க வேண்டும் அல்லது Registry யில் எல்லாம் கை வைக்க வேண்டியதாக இருக்கும். இதெல்லாம் கண்ட மென்பொருளை நிறுவுவதாலும், ஆபாசத் தளங்கள் போவதாலும் அங்கு இருந்து ஒட்டிக் கொள்வதாகும்.

இணையத்தில் உலவுபவர்கள் Registry cleaner, System booster, System Maintenance, Computer Doctor போன்ற கவர்ந்திழுக்கும் மென்பொருட்களின் விளம்பரங்களைக் காணாமல் இருக்கவே முடியாது. நம் கண் முன்னே வந்து மின்னிக்கொண்டு இருக்கும். ஆஹா! இதை நிறுவினால் நம்ம கணினியை வேகமாக்கலாம், பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கத் தோன்றும். இதில் ஏமாறாமல் தப்பித்தவர்கள் குறைவு. தங்கள் இணைய வாழ்க்கையில் ஒருமுறையாவது ஏமாந்து இருப்பார்கள். இதில் நானும் ஒரு காலத்தில் ஏமாந்து இருக்கிறேன் ஆனால், உடனே சுதாரித்து விட்டேன்.

இந்த மென்பொருட்கள் நம் கணினியை குப்பை ஆக்குவதோடு கணினியின் வேகத்தை மிகவும் மெதுவாக்கி விடும். நாம் என்ன காரணம் என்றே தெரியாமல், ஏன் நம் கணினி இவ்வளவு மெதுவாக இருக்கிறது? எதனால் இத்தனை Error வருகிறது? என்று குழம்பிக் கொண்டு இருப்போம். பிரச்சனையே நாம் தான் என்பதை அறியாமல். இது போதாது என்று இவைகள் நம் தகவல்களைத் திருடி அனுப்பும் மால்வேர் களாகவும் இருக்கலாம். கணினியின் வேகத்தைக் குறைத்தால் கூடப் பரவாயில்லை, நம் தகவல்களைத் திருடி விட்டால்…! எனவே, சீரான இடைவெளியில் நம்மையும் அறியாமல் ஏதாவது மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதா என்று சோதித்துப் பார்ப்பது நல்லது.

இலவசமாகக் கிடைக்கும் அனைத்துமே பிரச்சனையைத் தரும் என்று எண்ண வேண்டியதில்லை. பிரபலமான நிறுவனங்களின் மென்பொருள்களைச் சோதித்து நமக்குத் திருப்தி ஏற்பட்ட பிறகு தொடர்ந்து பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு Google Chrome Browser, Firefox Browser, Safari Browser, iTunes, Skype, Dropbox, Java, VLC Media Player, Ccleaner, 7Zip, WinSCP போன்றவை. இவை சிறு உதாரணம் தான் இது போல Branded Software இலவசமாகப் பயன்படுத்தினால் நமக்குப் பிரச்சனையில்லை. இதிலும் நமக்கு உண்மையாகவே தேவை என்று இருப்பவைகளையே நிறுவ வேண்டும், அவசியமில்லை என்றால், தவிர்க்க வேண்டும். இவற்றை நிறுவும் போதும் (Java போன்றவை) நம்மை Toolbar நிறுவக் கேட்கும் அதில் நாம் அதைத் தேர்வு செய்யாமல் விட்டுவிட வேண்டும்.

தற்போது பெரும்பாலான வேலைகளை Online லையே செய்ய முடிகிறது. எனவே இதற்காக மென்பொருள் நிறுவ வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக YouTube காணொளியை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் இதற்காக மென்பொருள் நிறுவ வேண்டிய அவசியமில்லை, இணையத்தில் இருந்தே தரவிறக்கம் செய்ய முடியும். அப்படியும் சில மென்பொருளை தவிர்க்க முடியாமல் நிறுவ வேண்டியது நேர்ந்தால், நம் வேலை முடிந்த பிறகு அதை உடனடியாக நீக்கி விட வேண்டும்.

இரண்டு வாரத்திற்கு ஒருமுறை Ccleaner போன்ற மென்பொருளைப் பயன்படுத்தி Temporary file களை நீக்கி விட வேண்டும். இதன் மூலம் அவசியமற்ற குப்பைகள் இருக்காது, பாதுகாப்பாகவும் இருக்கும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் இயங்கு தளத்தை Reinstall செய்வது நல்லது. எதற்கு என்றால், நம்மையும் அறியாமல் சில மென்பொருள்கள் திருட்டு வேலை செய்து கொண்டு இருக்கலாம். எனவே, அதற்கு ஒரே வழி OS Reinstallation தான். இது கணினியின் வேகத்தையும் கூட்டும் எனவே, இதை வருடத்திற்கு இரண்டு முறை செய்வது நல்லதே! அவசியம் Antivirus மென்பொருளை நிறுவி இருக்க வேண்டும்.

நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு Third Party மென்பொருள்களைத் தவிர்க்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்கள் கணினி சிறப்பாக வேலை செய்யும். Registry Cleaner, System Booster, System Maintenance, Computer Doctor போன்ற மென்பொருட்களை மறந்தும் நிறுவாதீர்கள். மிக மிக அவசியமான மென்பொருள்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை நீக்கி விட வேண்டும். சுருக்கமாக நீங்க புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் :-) .

மேற்கூறியவற்றைப் பின்பற்றினால் உங்கள் கணினி நிச்சயம் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் (Hardware பிரச்சனை தவிர்த்து) சிறப்பாக வேலை செய்யும். நீங்களும் கவலையில்லாமல் இருக்கலாம்.

பதிவின் மூலம் - GIRI BLOG கணினியைப் பராமரிப்பது எப்படி?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்