தொழில்நுட்பம்
Typography

பிரபல பிரபஞ்சவியலாளரான (Cosmologist) ஸ்டீபன் ஹாவ்கிங் அண்மையில் பிரபஞ்சத்தைப் பற்றிய  25 நிமிடம் நீடிக்கும் ஆன்லைன் குறும்படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் பூமியில் நாம் ரேடியோ தொலைக் காட்டிகளை அமைத்து பிரபஞ்சத்தில் இருந்து வரும் வேற்றுக் கிரக வாசிகளின் சமிக்ஞைகளைப் பெறும்போது அதற்குப் பதில் அளிப்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவில் மேம்பட்ட கலாச்சாரத்தைக் கொண்ட வேற்றுக் கிரக உயிரிகள் பூமியை ஆக்கிரமித்துத் தமது காலனியாக்கும் அபாயமும் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த குறும்படத்தில் ஹாவ்கிங் 16 ஒளி வருடங்கள் பயணித்து பூமிக்கு அருகில் உள்ள கிரகமான Gliese 832c ஐ அடைவது போன்றும் வேற்றுக் கிரக உயிரினங்களிடம் (Aliens) இருந்து சமிக்ஞைகள் (Signals) வந்தால் அவற்றுக்குப் பதில் அளிப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவிப்பது போன்றும் காட்டப் படுகின்றது. மேலும் Gliese 832c கிரகத்தில் நம்மைப் போன்ற அல்லது நம்மை விட அறிவார்ந்த உயிரினங்கள் இருப்பது போலவும் சித்தரிக்கப் பட்டுள்ளது. அறிவில் சிறந்த வேற்றுக் கிரக வாசிகளை சந்திப்பது என்பது முதன் முதலாக அமெரிக்க பூர்வீகக் குடிகள் எப்படி கிறிஸ்தோபர் கொலம்பஸை எதிர்கொண்டார்களோ அது போன்ற எதிர்மறையானது எனவும் ஹாவ்கிங்  ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

பூமியிலுள்ள மனிதர்கள் பிரபஞ்சத்தில் வசிக்கும் ஏனைய உயிரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பது ஆபத்தானது மற்றும் ஆபத்தற்றது என்பது தொடர்பில் இன்றைய வானியலாளர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இந்நிலையில் பிரபல விஞ்ஞானியான ஹாவ்கிங் இன் இக்கூற்று வானியல் துறையில் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பான ஆய்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தகவல்: Mail Online

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS