தொழில்நுட்பம்
Typography

2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலக சனத்தொகையில் 47% வீதமானவர்கள் (கிட்டத்தட்ட அரைப் பங்கு மக்கள்) இணைய வசதியைப் பெற்று விடுவார்கள் எனக் கணிப்பு வெளியாகி உள்ளது.

ஆனால் அபிவிருத்தியடையாத நாடுகளில் 15% வீதமான மக்களே இணையத் தொடர்பைப் பாவிக்கின்றார்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் சேர்த்தே கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த பின் தங்கிய நாடுகளில் முக்கியமாக அதிகளவான பெண்கள், வயதானவர்கள், கல்வி வசதி கிடைக்கப் பெறாதவர்கள், வறியவர்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் ஆகியவர்களுக்கு இணைய வசதி கிடைக்கப் பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அறிக்கையின் பிரகாரம் 2016 இறுதிக்குள் உலகில் பெரும்பாலான மக்கள் துரித வளர்ச்சியடைந்து வருவதுடன் விலையும் வீழ்ச்சியடைந்து வரும் மாபைல் வலையமைப்புக்களுக்குள் வந்து விடுவதால் அதிகம் பேர் இணைய இணைப்பைப் பெற்று விடுவார்கள் எனப்படுகின்றது.

மேலும் ஸ்மார்ட் தொலைபேசிகளை அதிகளவில் பாவிக்கும் மக்களுக்குப் போட்டி போட்டுக் கொண்டு இணைய சேவை நிறுவனங்களும் டெலிக்கொம் நிறுவனங்களும் சேவைகளை அளிக்க முன் வந்துள்ளதாலும் இணையப் பாவனை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி குறிப்பாக அபிவிருத்தியடைந்த மற்றும் அடைந்து வரும் நாடுகளைக் குறி வைத்தே ஏற்பட்டுள்ளதுடன் வறிய நாடுகளில் பல இடங்களில் அடிப்படைத் தகவல் தொடர்பே இல்லாத சூழ்நிலை நிலவுகின்றது. இதனால் தகவல் தொழிநுட்ப யுகத்தில் இந்த வறிய நாடுகள் ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளை விட 20 வருடம் பின்னுக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நா இன் இலக்குப் படி 2020 இற்குள் உலக சனத்தொகையில் 60% வீத மக்களுக்கு இணைய வசதியை ஏற்படுத்தித் தர முடியும் எனக் கூறப்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 10 இற்கு 8 பேர் இணையத்தைப் பாவிக்கையில் ஆப்பிரிக்காவிலுள்ள வறிய நாடுகளிலோ 10 இற்கு 1 நபரே இணைய சேவை கிடைக்கப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்